Saturday, September 17, 2011

நீலகண்ட பறவையைத் தேடி




எஸ்.அர்ஷியா
அவர்தான் மக்ஸிம் கார்க்கியின் அர்தமேனாவ்ஸ் கொடுத்தார். பலபேர் கைமாறி, அதன் கனத்த பவுண்ட் அட்டை சிதிலமாகி யிருந்தது. பழைய புத்தகம். அதன் பக்கங்களைப் புரட்ட, மக்கிய வாசனை வந்தது. அப்போது அது, மக்கிய வாசனையாகத்தான் தெரிந்தது. ஆனால் அது, இதுவரை நான் எழுதிய கதைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர வைத்தது. என்னை வெட்கப்பட வைத்தது. அந்த வெட்கத்தை என் பரிணாம வளர்ச்சி என்றே கருதுகிறேன். நான் மடைமாற்றம் அடைவதற்கு படிக்கட்டாக இருந்த பழைய புத்தகம், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இப்போதும் என்னிடம் பத்திரமாக பைண்ட் செய்யப்பட்டு நல்ல நிலையில் இருக்கின்றது.
எப்போதாவது அதன் பக்கங்களைப் புரட்டுவதுண்டு. புரட்டும்போது, அதிலிருந்து மக்கிய வாசனை வருவதில்லை. அதுவேறு வாசனையாக இருக்கிறது. அதை நான் அறிவு வாசனை என்று கருதிக் கொள்கிறேன். புதிய புத்தகங்களுக்கு சுகமான வாசனை இருப்பதுபோல, பழைய புத்தகங்களுக்கு கென்றும் தனியாக ஒரு வாசனை இருக்கிறது. புத்தகத்தை விரும்புபவர்களுக்கு அந்த வாசனை மிகவும் பிடித்திருக்கும்.
மதுரை முனிச்சாலை ரோட்டின் பேறுகால ஆஸ்பத்திரிக்கு எதிரில் அந்த பழைய பேப்பர் கடை இருக்கிறது. முன்புறத்தில் பத்துக்குப் பத்தாகவும் அதையொட்டி உள்ளே அகன்று பரந்த இடமாகவும் அது விரிந்திருக்கும். எங்கள் உறவுக்காரர்களுக்குச் சொந்தமான இடம் அது. அதற்கும் இந்த கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை. பழைய திருநெல்வேலி மாவட்டம் திருந்செந்தூரைத் தாண்டி நவ்வலடி கிராமத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் அதை, அவர்களின் அப்பா துரைராஜ் நாடார் பெயரில் நடத்தி வந்தார்கள்.
அப்போதுதான் நான், குமுதத்தையும் ஆனந்த விகடனையும் இலக்கியம் வளர்க்கும் பத்திரிகைகளாகக் கண்டடைந்திருந்த நேரம். பக்கத்து மிக்சர் கடைக்குப் பொட்டலம் மடித்துத்தர வரும் அவற்றை ஒன்றுவிடாமல் படித்து, என் அறிவு வேட்டையைத் துவங்கியிருந்த நேரமும் அதுதான். நண்பர் கள் 'தட்டேத்தி'விடுவதை உண்மை என்று நம்பியப் பருவமும் அதுதான்!
அப்படி பல 'அதுதான்கள்' என்னை ரசவாதம் செய்து, எனக்குள் இருந்த எதையோ ஒன்றைக் கதைசொல்லியாக உசுப்பியிருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருந்த நான் விழித்துக் கொண்டுவிட்டதாகக் கருதி, ஒரு கதையை எழுதி, அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்தேன். அப்புறம் மரவட்டையாகச் சுருண்டு வழக்கம்போல தினமணி டாக்கீஸில் எம்ஜிஆர் படமும் அலங்கார் தியேட்டரில் சிவாஜி படமுமாகப் பார்க்கப் போய்விட் டேன்.
ஒரு வெள்ளிக்கிழமை மத்தியான வேளையில் தபால்காரர், 'இந்தப் பெயருல யாருருக்கா?' என்று கேட்டு, ஒரு கவரை என்னிடம் கொடுத்துவிட்டுப் போனார். அதை அவசர அவசரமாகப் பிரித்துப் பார்த்தால், நான் எழுதியனுப்பியிருந்தக் கதை. ஆனந்த விகடனின் ஐம்பத்திரண்டாம் பக்கத்தில் அச்சாகியிருந்தது. 5 பக்கங்கள். ஜெயராஜ் படம் போட்டிருந்தார். என் பெயர் அழகாக(?) அச்சிடப்பட்டு, அடிக்கோடு இடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த நொடியிலிருந்து என் கால்கள் பூமிக்கு மேலே இரண்டு அங்குல உயரத்தில் இருந்தன. தரையில் கால்கள் பாவவே இல்லை. தலையில் கொம்பு முளைத்திருப்பதுபோல எதுவோ தட்டுப்பட்டது. 'என் இனிய தமிழ் மக்களே' என்ற கரகரத்தக் குரல் எனக்குள்ளிருந்து எனக்கே கேட்டது. தலையைச் சிலிர்த்துக் கொண்டபோது,'ஈ பாலக்காட்டு மாதவன் யாரையும் நம்பி இல்லா' என்ற பிசுறும் குரலும் கேட்டது. 'fileக்கும் lifeக்கும் நாலெழுத்துதான். எழுத்து மாறுச்சுன்னா எல்லாமே மாறிரும்' என்று பட்டையாய்க் கண்ணாடிபோட்ட பாலசந்தரும் தத்துவம் பேசினார்.
நெசம்மா சொல்றேன். அப்படித்தான் வாசகர்களின் கெட்டநேரமும் எனது நல்லநேரமும் ஒன்றுகூடி வந்தது. அப்படி வரும் என்று நான் நினைத்திருக் கவேயில்லை. பிளஸ் இண்டு பிளஸ்ஸோ, மைனஸ் இண்டு மைனஸ்ஸோ சேர்ந்துதான், பிளஸ் ஆகும் என்று படித்திருக்கிறேன். ஆனால் இங்கு பிளஸ் இண்டு மைனஸ் சேர்ந்து பிளஸ் ஆகியிருந்தது.
என் அண்ணனுக்கு ஒரு சைக்கிள் கடை இருந்தது. வாடகை மற்றும் ரிப்பேர் நிலையம். லூனா சைக்கிள்ஸ் என்று பெயர். அண்ணன் காங்கிரஸ்காரர். இளைஞர் காங்கிரஸ் பொறுப்பிலிருந்தார். அந்தக் கடைக்கு திமுகாக்காரர்களும் வருவார்கள். அதிமுகாக்காரர்களும் வருவார்கள். அதில் பாதிப்பேர் வாத்தியார்கள். சிலபேர் யுனிவர்சிட்டி வாத்தியார்கள். காலையிலும் சாயங்காலமும் கடையில் ஆட்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். அரசியலும் சினிமாவும் பேசுவார்கள். அதைத்தாண்டி மூணு வட்டிக்குக் கொடுத்தக் கணக்கைப் பார்ப்பார்கள். அப்புறம் யார் யாருடன் (ஓடிப்)போனார்கள் என்ற கதை பேசுவார்கள். ஒருபோதும் அந்த வாத்தியார்கள் பாடத்தைப் பற்றியோ... படிப்பைப் பற்றியோ பேசி நான் கேட்டதே இல்லை.
ஆனால், அவர்கள் எல்லோரும் என் முதல் கதையைப் படித்துவிட்டு, 'அப்டியாக்கும்... இப்டியாக்கும்' என்று புகழ்ந்து பேசினார்கள். சும்மாவே புகழ்ச்சி என்றால் நமக்கு ரொம்பப் புடிக்கும். அதிலும் நம்மைவிட அதிகம் படித்தவர்கள் புகழுகிறார்கள் என்றால், சும்மாவா? அதற்குள்ளே இருக்கின்ற சூச்சுமம் தெரியாமல் மதிமயங்கிப் போய்விட்டேன். 'அடுத்தக் கதை எழுதலையா... எழுதலையா?' என்று வேறு வேலையே அவர்களுக்கு இல்லாத மாதிரிக் கேட்டு என்னை 'நச்'செடுத்துவிட்டார்கள். 'அடுத்தக் கதை எழுதினால்தான் விடுவேன்' என்பது மாதிரி அவர்கள் பேச்சு இருந்தது. எதைப் பற்றி எழுதுவது?
அப்போதுதான் இங்கர்சால் வாத்தியார் சொன்னார். வெள்ளாளப்பட்டி அரசு ஆரம்பப் பாடசாலையில் வாத்தியார், அவர். 'நெறைய படிடா. அப்பத்தான் எழுதுற உத்தி வரும்!' என்று. அவர் எம்ஜிஆர் ரசிகர். ரசிகரென்றால் தீவிர ரசிகர். இப்போதிருக்கும் சூப்பர் ஸ்டார், தல, தளபதி ரசிகர்கள் மாதிரியெல் லாம் இல்லை. அவர் வேற மாதிரி. முதல்நாள் முதல் காட்சியில் படம் பார்த்து விடுவார். அந்தப் படத்தில் எம்ஜிஆர் போட்டுக்கொண்டு வரும் டிரஸ் மாடலை அன்றைக்கு சாயந்திரமே தைத்துப் போட்டுக்கொண்டு வந்துவிடுவார். எம்பிராய்டரி பூப்போட்ட சட்டைகள் அவருக்கு இஷ்டமானவை. வெள்ளைச் சட்டைக்கு கருப்புநிற பட்டன்தான் சரியானது என்பதிலிருந்து அவர் ரசனை புரிபடும் என்று நினைக்கிறேன். வாழ்க்கையில் அவர் சொன்ன ஒரே சரியான யோசனை, 'நெறைய படிடா. அப்பத்தான் எழுதுற உத்தி வரும்!' என்பதாகத்தான் இருக்க முடியும்.
அந்த நேரத்தில் தமிழில் வெளிவந்த அத்தனைப் பத்திரிகைகளிலும் துணுக்குச் செய்திகளையும் வாசகர் கடிதங்களையும் திசை.முத்து என்பவர் எழுதி வந்தார். அவர் பெயரை முன்னமே பார்த்திருக்கிறேன். அவர் என் சிறுகதை பிரசுரமான அடுத்த வாரத்தில், அத2கு ஒரு வாசகர் கடிதம் எழுதியிருக்கிறார். அதை நான் பார்க்கவில்லை. ஆனால் அந்தக்கடிதம் எனக்கு ஆனந்த விகடனிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. அதிலிருந்த விலாசத்தைப் பார்த் தால், பக்கத்து ஏரியா ஆசாமி!
ஓடோடிப்போய் அவரிடம் நட்பு வளர்த்தேன். 'வாங்க எழுத்தாளரே!' என்று, அவர் தன் பங்குக்கு பட்டையைக் கட்டினார். சந்தோஷமாகத்தான் இருந் தது. நட்பு இறுகஇறுக அவர், 'துணுக்குச் செய்திகளுக்கு ஆதாரமாக இருக்கும் இடத்துக்குப் போவோம் வா' என்று, ஒருநாள் அழைத்துப் போனார். போன இடம், நவ்வலடி சகோதரர்கள் நடத்திவந்த அதே பழைய பேப்பர்கடை!
அந்த பழைய பேப்பர் கடை மதுரையிலேயே சற்று பெரியது. சுற்று வட்டாரத்தில் பழைய பேப்பர் வாங்கும் தலைச்சுமை வியாபாரிகள், நடை வியாபாரிகள், சைக்கிள் வியாபாரிகள், தள்ளு வண்டி வியாபாரிகள் எல்லோருமே அங்கேதான் கொண்டு வந்து போடுவார்கள். காகிதங்களில் இன்ன காகிதம் என்றில்லாமல் எல்லா வகையையும் அங்கே பார்த்திருக்கிறேன். யுனெஸ்கோ கூரியரை அங்கேதான்... பழைய புத்தகமாகத்தான் முதல்முறையாகப் பார்த்தேன். அதற்குமுன் அதுபற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. கணையாழியை கண்டடைந் ததும் அங்கேதான். மணிக்கொடி, வானம்பாடி எல்லாமே யாரோ படித்துவிட்டு எடைக்குப் போட்ட பழைய புத்தகமாகத்தான் எனக்கு அறிமுகமானவை.
அங்கு வரும் ஆங்கிலப் புத்தகங்களைப் பொறுக்கியெடுத்து, அதிலுள்ள படங்களைப் பார்த்து, படத்துக்கு ஏற்ப தங்கள் அறிவுக்குப்பட்ட தமிழில் துணுக்குகள் ஆக்குவதற்கான கோடவுனாகவும் அந்த பழைய பேப்பர்கடை இருந்து வந்தது. அங்கு, எனக்கு முன்பே வந்து சேர்ந்தவர்களாக துணுக்குத் திலகம் ஜெகவை பால்ராஜ், சு.த.குருசாமி, 'ஓ' பத்திரிகை கிருஷ்ணன் போன்ற வர்கள் இருந்தார்கள். நவ்வலடி சகோதரர்களுக்கு இதுபோன்ற படைப் பாளர்கள் தங்கள் கடைக்கு வந்துபோவது பெருமைக்குரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும். கடையில் வேலை நடந்து கொண்டிருக்கும்போது போனாலும் கூட, நவ்வலடி சகோதரர்கள் முகம் சுளித்தில்லை. மாறாக 'வாங்க!' என்று வரவேற்பார்கள்.
ரீகல் டாக்கீஸ் வாசலிலும் டவுன் ஹால் ரோடு கடைகள் முன்பாகவும் பழைய புத்தகக் கடை விரிக்கும் நண்பர்கள் அவசர அவசரமாக அங்கிருக்கும் புத்தகங் களைப் பிரித்தெடுப்பார்கள். மலைபோல் குவிந்துகிடக்கும் காகிதக் குவியலுக் குள்ளிருந்து முத்தும் பவளமுமாக அவர்கள் கண்டெடுப்பார்கள். பள்ளிப் பாடப் புத்தகங்கள், கல்லூரிப் பாடப் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், சிறுவர் கதைகள், இலக்கியப் புத்தகங்கள் என்று அள்ளிக்கொண்டுப் போவார்கள்.
ரசனை மிகுந்த ஒரு மனிதன் அதை வாசித்துவிட்டு, மனதுக்குள் அதன் சாரத்தைச் சேமித்துக் கொண்டு, காகிதங்களைத்தான் அவன் பழையதாக எண்ணிப்போட்டு விடுகிறான். அந்த காகிதங்கள் அடுத்தவனின் ரசனைக்குத் தீனியாவதாக எனக்குத் தோன்றுவதுண்டு. புத்தகங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவை புரிந்துகொள்ளவே முடியாது என்றும் கருதுகிறேன்.
நவ்வலடி சகோதரர்களில் மூத்தவர் சபாபதி. ப.நெடுமாறன் கட்சியில் செயலாளராக இருந்தார். நடுவிலுள்ள ராமச்சந்திரன், அரசு அலுவலங்களில் ஏலம் எடுக்கப் போய் வருவார். கடைசி சகோதரரான முத்துராமன் பெரும்பாலும் கடையிலிருப்பான். முத்துராமன்தான் என் தேடலுக்கு உறுதுணையாக இருந்த வன். ஏலத்தில் எடுத்துக்கொண்டு வரும் பழையதில் நல்ல வெள்ளைக் காகிதங் கள், நல்ல நிலையிலுள்ள கவர்கள், முத்திரையிடப்படாத தபால் தலைகள் எல்லாமே இருக்கும். அதை தனியே பிரித்தெடுக்கும்போது, வெள்ளைக் காகிதங் களையும், கவர்களையும், தபால் தலைகளையும் முத்துராமன் எனக்குக் கொடுப் பான். ''எழுதியனுப்ப யூஸ் ஆகும்ல்ல!" என்று.
முதல்கட்டமாக எனக்கு பழைய புத்தகங்கள் மூலம் அறிமுகமானவர்கள் ராஜேஷ்குமாரும், பாலகுமாரனும்தான். அந்தப் புத்தகங்களாக எடுத்துத் தந்தான். அந்தப் புத்தகங்கள்தான் அதிகமாக பழைய பேப்பர் கடைக்கு வரும். பழைய பேப்பர் கடைக்கு அதிக வரவாக எது இருக்கிறதோ, அது அதிகமாக விற்பனை யாகிறது என்று பொருள் என்று முத்துராமன் சொல்வான். அவன் அவ்வளவாகப் படித்தவனில்லை. அதையேதான் தினத்தந்தி அதிபர் சி.பா. ஆதித்தனாரும் சொல்லியிருக்கிறார். அந்தக் கோட்பாட்டை அங்கே பொறுக்கியெடுத்த ஒரு பழைய புத்தகத்தில்தான் படித்தேன்.
கொஞ்ச நாட்களிலேயே ராஜேஷ்குமாரின் நடையும் பாலகுமாரனின் தன் முனைப்பும் எனக்கு சலிப்பைத் தந்துவிட்டது. சுஜாதா என் ஆட்சிக்குள் வந்தார். கொஞ்ச நாட்கள்தான். அவரும் 'போய்ட்டு வாரேன்' என்று என்னிடமிருந்து விலகிவிட்டார். இதற்குள் குங்குமத்திலும், குமுதத்திலும், கல்கியிலும் எனது கதைகள் வந்திருந்தன.
ஒன்றுபட்ட இராமநாதபுர மாவட்டத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக இருந்த தோழர் எஸ்.ஏ.பெருமாளை, சிவகாசியையடுத்த மீனம்பட்டியில் பட் டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்தின் மீட்புப் பணியின்போது சந்தித்தேன். முதல் சந்திப்பு அது. அன்றிரவு, அந்த நெடிய உருவத்துடன் குட்டி முயல் போல பேசிக்கொண்டே நடந்தபோது, அந்த வாரம் என் சிறுகதை வெளியாகியிருந்த கல்கியை அவரிடம் தந்தேன். வாங்கி வைத்துக் கொண்டார்.
அதன்பின் நான் அவரை சந்தித்தபோது, ஏழெட்டு ஆண்டுகள் போயிருந்தன. பல்வேறு பத்திரிகைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட எனது சிறுகதைகள் வந்திருந்தன. அப்போது அவர் மதுரை தீக்கதிர் அலுவலக வளாகத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருந்தார். சிவகாசி சந்திப்பின்போது நான் கொடுத்துவிட்டு வந்திருந்த சிறுகதையை நினைவு கூர்ந்தார். "ரொம்ப நல்ல கதை அர்ஷியா. நல்லா வந்துருச்சு!" என்று ஒரு சகாவைப்போல உரையாடினார். உரையாடல் எனக்கு சமதையாக இருந்தது. தன்னை அவர் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ளவில்லை. தன்னை, என் தரத்துக்கு கீழிறக்கிக் கொண்டு பேசினார். "நெறைய எழுதணும், அர்ஷியா!" என்று வாழ்த்தினார். டீ வாங்கிக் கொடுத்து உபசரித்தவர், இப்போது மெல்லியக் குரலுக்கு மாறியிருந்தார். அது ஒரு ரகசியம்போல... மந்திரம்போல... இருந்தது. காதலியிடம் சிலாகித்துப் பேசும் தன்மை அதற்குள்ளிருந்தது. "இப்ப நீ எழுதிருக்கியே கதை, இந்த மாதிரி எழுதுறதுக்கு ரொம்பப் பேரு இருக்காங்க. நாம இந்த மாதிரியெல்லாம் எழுத வேண்டியதில்ல. அது மத்தவங்க வேலை. நாம மக்களப் பத்தி எழுதணும். அவங்க பாடு பத்தி எழுதணும். அதுதான் நம்ம வேலை. அப்டி எழுத எவ்வளவோ இருக்கு. ஒனக்கு நல்லா எழுத வருது. எழுது. இன்னும் நல்லா வரும்!" என்றார்.
அவர்தான் மக்ஸிம் கார்க்கியின் அர்தமேனாவ்ஸ் கொடுத்தார். பலபேர் கைமாறி, அதன் கனத்த பவுண்ட் அட்டை சிதிலமாகியிருந்தது. பழைய புத்த கம். அதன் பக்கங்களைப் புரட்ட, மக்கிய வாசனை வந்தது. அப்போது அது, மக்கிய வாசனையாகத்தான் தெரிந்தது. ஆனால் அது, இதுவரை நான் எழுதிய கதைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர வைத்தது. என்னை வெட்கப்பட வைத்தது. அந்த வெட்கத்தை என் பரிணாம வளர்ச்சி என்றே கருதுகிறேன். நான் மடைமாற்றம் அடைவதற்கு படிக்கட்டாக இருந்த பழைய புத்தகம், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இப்போதும் என்னிடம் பத்திரமாக பைண்ட் செய்யப்பட்டு நல்ல நிலையில் இருக்கின்றது.
எப்போதாவது அதன் பக்கங்களைப் புரட்டுவதுண்டு. புரட்டும்போது, அதிலிருந்து மக்கிய வாசனை வருவதில்லை. அதுவேறு வாசனையாக இருக்கிறது. அதை நான் அறிவு வாசனை என்று கருதிக் கொள்கிறேன். புதிய புத்தகங்களுக்கு சுகமான வாசனை இருப்பதுபோல, பழைய புத்தகங்களுக்கு கென்றும் தனியாக ஒரு வாசனை இருக்கிறது. புத்தகத்தை விரும்புபவர்களுக்கு அந்த வாசனை மிகவும் பிடித்திருக்கும். புத்தகம் எத்தனைக் கெத்தனை பழையதோ, அத்தனைக்கத்தனை அதன் வாசம் அதிகமாக இருக்கும். அதன் வயதை கார்பன் டேட்டிங் மூலம் கண்டு பிடிக்க வேண்டி யதில்லை. அதன் இம்பிரிண்டிலேயே குறிப்பிட்டிருப்பார்கள். ஒருவேளை இம்பிரிண்ட் இல்லாமலோ, கிழிந்தோ போயிருந்தால் கார்பன் டேட்டிங்குக்குப் போகலாம்.
பைன் மரத்தில் செய்யப்பட்ட காகிதத்தில், அதிலுள்ள ரோசின் என்ற பொருள் மூலம் சுகமான அடர் வாசனை வரும். கிட்டத்தட்ட 100 வகையான வாசனைப் பொருட்கள் காகிதத்துக்குள் ஒளிந்திருக்கிறது.
இப்போது எனக்கு இரண்டு நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளிவந்திருக்கிறது. அடுத்த நாவலான 'அப்பாஸ்பாய் தோப்பு' அச்சுக்குப் போயிருக்கிறது. முதல் நாவல் ஏழரைப்பங்காளி வகையறா தமிழக அரசின சிறந்த நாவலுக்கானப் பரிசையும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த நாவலுக்கானப் பரிசையும் பெற்றிருக்கிறது.
ஒன்று வெளியானதும், எழுத்தில் எனக்கு முன்னே பயணித்துக் கொண்டிருக்கும் முன்னோடிகள், 'அர்ஷியா, அதைப் படிச்சியா?... இதைப் படிச்சியா?' என்று கேட்பது வழக்கத்தில் இருக்கிறது. அந்த வகையில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் பா. ஆனந்தகுமார், மேலைச்சிவபுரி ஸ்ரீகணேசர் செந்தமிழ் கல்லூரியின் நூலகர் முனைவர் ந.முருகேசபாண்டியன், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜர் கல்லூரியின் பேராசிரியர் சு,வேணுகோபால் ஆகியோர் முக்கியமானவர்கள். பார்க்கும்போதெல்லாம் எதையாவது சொல்லி விட்டுப் போய்விடுவார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதும் வழக்கமான பழைய புத்தகத் தேடலுடன் அவர்கள் சொல்லும் புத்தகத்தைத் தேடி ஓடுவதையும் வழக்கத்தில் வைத்திருக்கிறேன்.
கடைசியாக, சு.வேணுகோபாலை சந்தித்தபோது, "அர்ஷியா, ஒன்னோட கபரஸ்தான் கதவு சிறுகதை படிச்சேன். கட்டுக்கோப்பா நல்லா வந்துருக்கு. சிறுகதைன்னா, இப்டித்தான் இருக்கணும். தமிழின் சிறந்த சிறுகதைகள்ன்னு ஒரு தொகுப்பு தயாராகிட்டுருக்கு. காவ்யா போடுது. அந்தத் தொகுப் புல இந்தச் சிறுகதையை சேத்துருக்கேன்!" என்று சொன்னார். அத்தோடு நிறுத்திவிட்டிருக்கலாம். நிறுத்தாமல், "அடுத்து நீ படிக்க வேண்டிய முக்கியமான ஒண்ணு இருக்கு. நீலகண்ட பறவை. ரொம்ப முக்கியமான நாவல். கிடைச்சுச்சுன்னா படி. படிச்சுட்டு எனக்குக் குடு!" என்றார்.
நீலகண்ட பறவையை கடந்த ஒன்னரை ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். பழைய புத்தகக்கடைகளில் மட்டுமல்ல. புதிய புத்தகக் கடை களிலும் கூட. அது எங்கும் கிடைப்பதாகக் காணவில்லை. தமிழ்நாட்டிலுள்ள அத்தனைப் புத்தகக் கடைகளையும் அலசியாகிவிட்டது. நண்பர்களும் நிறையவே தேடினார்கள். கடைசியாக ஒருநண்பர், 'அது என்.பி.டி.,யில் கிடைக்கும்' என்றார். அங்கும் போனேன். போனார்கள். புத்தகம் கிடைக்கவில்லை. மேலும் கீழுமாகப் பார்த்தார்கள். பதிப்பு நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். கூடவே அங்கிருந்த ஒருவர்,"பரிசல் செந்தில்ட்ட கேளுங்க. அவர்ட்டருக்கு" என்றார்.
பரிசல் செந்தில் நம்பரைத் தேடுவது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. தொடர்பு எல்லைக்குள் வந்துவிட்டார். நீலகண்ட பறவையை அவரிடம் கேட்டபோது, "என்ட்ட ஒரு காப்பி இருக்கு, அர்ஷியா. இப்ப வீடு மாத்திக்கிட்டு இருக்கேன். புது வீட்டுக்குப் போனதும் ஜெராக்ஸ் போட்டு அனுப்பி வைக்கிறேன்!" என்றார். நம்பிக்கையாக இருந்தது. எப்படியும் கிடைத்துவிடும். படித்துவிடலாம்.
இரண்டு மாதம் கழித்து தொடர்பு கொண்டு கேட்டபோது, பாவமானக் குரலில் சொன்னார். "அர்ஷியா, என்ட்ட இருந்துச்சு அர்ஷியா. வீடு ஷிப்ட் பண்றப்போ எப்டியோ மிஸ்ஸாயிருச்சு!"
ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை. எல்லா பழைய புத்தகக் கடையிலும் சொல்லி வைத்திருக்கிறேன். என் அழைப்பு எண்ணையும் கொடுத்து வைத்திருக்கிறேன்.
ஒவ்வொரு அழைப்பையும் நீலகண்ட பறவையின் அழைப்பாகக் கருதியே எடுக்கிறேன்.

நன்றி: உங்கள் நுாலகம். செப்டம்பர் 2011

Saturday, September 10, 2011

என்சிபிஎச் சார்பில் 25 புத்தகங்கள் வெளியீடு

செப்டம்பர் 10 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மதுரை தமுக்கம் மைதானம் புத்தகக் கண்காட்சி அரங்கில் என்சிபிஎச் சார்பில் 25 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நந்தகோபால் நுால்களை வெளியிட்டார். மாவட்டக் கருவுல அதிகாரி முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார். என்சிபிஎச்சின் முதன்மை செயன்மையர் சண்முகம் சரவணன் வரவேற்றார்.

பேராசிரியர் ந.முத்துமோகன் இராஜபாளையம் நவபாரத் பள்ளி தாளாளர் நவபாரத் நாராயணராஜா வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேராசிரியர் அ.பிச்சையின் சங்க இலக்கிய யாப்பியல் புத்தகம் குறித்து பேராசிரியர் இராம.சுந்தரம் கே.என்.பணிக்கரின் என் வாழ்க்கை குறித்து பேராசிரியர் போத்தி ரெட்டி எஸ்.அர்ஷியாவின் சிறுகதைகள் குறித்து பேராசிரியர் சு.வேணுகோபால் மேலாண்மை பொன்னுச்சாமியின் உயிர்நிலம் நாவல் குறித்து தோழர் எஸ்.ஏ. பெருமாள் சி.சொக்கலிங்கத்தின் பண்பாட்டு அரசியல் குறித்து பேராசிரியர் பா.ஆனந்தகுமார் ஆகியோர் சிறப்பாகப் பேசினர்.

என்சிபிஎச் மதுரை மண்டல மேலாளர் அ.கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார்.

Tuesday, September 6, 2011

மீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் - நூல் விமர்சனம்


எஸ்.அர்ஷியா

வாழ்வியல் போராட்டத்தைத் தாண்டி, அல்லாஹ், முகம்மத், கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத்,ஹஜ் இவை களில் ஈடுபடவே நேரம் இல்லாது போய் விட்ட இஸ்லாமிய சமூகத்துக்கு, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த நேரம் கிடைக்குமா என்பது, ஒருநாளின் இருபத்து நான்கு மணிநேரத்தை இரட்டிப்பாக்கினால் கூட முடியாது என்பது தான் நிஜம்!
அடித்தளத்தைத் தாண்டி மேலெழும்ப முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கும் அவர்களின் வாழ்வில், கஷ்டங்களின் போது அல்லாஹ் நினைவுக்கு வருவார். ஆசுவாசமான நேரங்களில், 'யா ரசூலே...' என்று முகம்மத் நினைக்கப் படுவார். மற்றவைகளுக்கு... பிறகு யோசிப்போம்.
ஆனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாக குமரி மாவட்டத்தில் இந்நிலை தலைகீழாகஇருக்கும் போல. எப்போதோ சொல்லப்பட்டதாக... அறிவிக்கப்பட்டிருக்கும் விஷயங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அவர்கள், மாற்றங்களுக்கோ...அது குறித்தான விவாதங்களுக்கோ எதிரானவர்களாகவே இருக்கிறார்கள்.
மாறிவரும் காலகட்டத்தில் எல்லாமே பரிசீலனைக்கு உட்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ளாத ... அல்லது மறுக்கும் அவர்கள், அது குறித்த பரிசீலனையில் ஈடுபடுபவர்களை தொட்டதற்கெல்லாம் குற்றம் சுமத்துவது. கூண்டுமுன் நிறுத்தி விசாரணை எனும்பெயரில் தங்கள் கீழா(மேதாவுக்கு எதிர்மறை) விலாசத்தைக் காட்டுவது. ஊர்விலக்கம் செய்வது என்பது வரை செல்லப் பொழுது போக்காகவே வைத்திருக்கிறார்கள். அதில் அடிக்கடி மாட்டிக் கொள்வது, நேரடித்தாக்குதல் நடத்தும் ஹெச்.ஜி.ரசூல்!
அதே வேளையில், எதையுமே நாசூக்காகச் சொல்லி, மாற்றங்களை பதிய வைப்பது அதே பகுதியைச் சேர்ந்த மீரான் மைதீனுக்கு கைவந்திருக்கிறது. ஏற்கனவே கவர்னர் பெத்தா, ரோசம்மா பீவி ஆகிய சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கும் அவருக்கு, 'சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் ' மூன்றாவது தொகுதி!
இஸ்லாத்தின் தொண்மங்களும் அது தொடர்பான விஷயங்களுமே மீரான் மைதீனின் கொல்லுப் பட்டறை. வனை பவனுக்கு ஏற்ப மண்பாண்டம் அழகுபெறுவதுபோல, மீரான் மைதீனின் பாடுபொருள் அழகழகாய் உருப்பெற்று வந்து விழுகிறது. தொகுதியில் பன்முகமாய் இடம் பெற்றிருக்கும் பதினோரு சிறுகதைகளும் இஸ்லாத்தின் உட்கூடுகளை உரசிச் செல்பவை. விலா எலும்புகளை விசாரணை செய்பவை!
'குப்பையாண்டி பிள்ளையின் சுவர்' எனும் சிறுகதையில், சுவரொட்டிகள் ஒட்டப்பெறும் ஒருசுவர், தன் கதையைச் சொல்வதாக வசியப்படுத்தி இருக்கிறார். தோவாளை அப்பாவும் சுவரும் பேசிக்கொள்ளும் அந்த சுப வைபவத்தைக் கேட்க ஒருகூட்டம் அவருடன் செல்கிறது. சுவர் தன்மீது, ஐம்பது ஆண்டுகளாய் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை காலக் கிரம வரிசையில் உரித்து, அப்போது இருந்த அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டைக் கிண்டலுடன் அவர்களிடம் சொல்கிறது. பகடியுடன் படைக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதைக்கு இந்திரா காந்தியிலிருந்து தொடங்கி இன்றைய விஜயகாந்த் வரையிலும் அரைபட்டிருக்கிறார்கள். காலமாற்றத்தாலும் அவர்களின் தேவைகளாலும் அரசியல் கூட்டணிகள் மாறியதை போஸ்டர்கள் உரிபடுவதுபோல அரசியல்வாதிகளின் தோல் உரிபடுவது சுவையான விஷயம்!
நுட்பமாக சொல்லப் பட்டிருக்கும்,'மாதுளம் மரத்தில் வாழும் தென்றலைக் கொல்லும் முயற்சிகள் தோற்கின்றன' கதையில், இருப்பதை விட்டுவிட்டு இல்லாததைத் தேடியலையும் இஸ்லாமியனின் மனப்போக்கை அங்கதத்துடன் பதிவு செய்திருக்கிறார். தேடியலையும் ஐவரில் எவருக்குமே என்ன தேடுகிறோம் என்பதே தெரியவில்லை என்பதை...'இது தெரியாமத் தான் ஒரு மாசமா பழபத்திரி சாப்பிட்டியாக்கும்...?' என்று கேட்டு, யோசனையை வேறு முடுக்கிவிடுகிறார்.
¨டைரிக்குறிப்புகள்' சிறுகதை, ஜித்தா நகரில் வேலைசெய்ய கூடிவசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் இரவுநேரப் பரிமாணத்தைப் பற்றியது. அவனவன் தன்னைப் பற்றிய பீத்தல் கதைகளைச் சொல்லும் போது, அறைவாசியான திருமணமான இப்றாகீமின் காளிதாஸ் ரகசியத்தை தான் அறிந்திருப்பதாகவும் அதனை வெளியே சொல்ல முடியாத அவதியை மறக்க சிரமப்படுவதாகவும் குறிப்பிட்டிருப்பதில் தேர்ந்த அரசியல் தென்படுகிறது.
இதுபோலவே ஒருபாடு கதைகள்...கலர் வேலைப்பாடுகளுடன் கூடிய டிசைன் வாய்கள்.. உள்ளிட்டக் கதைகள், அதனதன் அரசியலைப் பேசி, நம்மை சிறுகதைக் கட்டமைப்பின் அடுத்தத் தளத்திற்கு இட்டுச் செல்கின்றன. அவற்றிற்கு ஊடாக சமூகம் மறந்துவிட்ட வாழ்வின் நுணுக்கங்களை...வாழ்தலின் அர்த்தத்தை நிலைநிறுத்துவதில் முனைப்பாய் இருக்கிறார். முன்னைக் காலத்தில் சக்கைமரம்(பலா)வயதானவர்கள் தான் வைப்பார்கள்...கடுகு சிந்தினால் சண்டைவரும்...போன்ற விஷயங்களை கதையின் ஊடாக வார்த்தையாடலில் நினைவூட்டுகிறார்.
என்றாலும் ஊசிகாந்தம் உயர்ந்த மலைப்பிளவின் வழி, மத்தது உள்ளிட்ட சிறுகதைகள் புரிதலுக்கு அப்பாற்பட் டவையாக கட்டமைக்கப்பட்டிருப்பது நெருடுகிறது.எளிய சொல்லாடல்களிலிருந்து விலகி, ஒரு இறுக்கமான இருட் டறைக்குள் சென்றுவிட்டதுபோல பிரமை வருகிறது. அதுபோல அச்சு முறையும். கண்களைப் பதம் பார்க்கின்றன. முழுமைப்பெற்றது எதுவுமில்லை எனும்போது, இவற்றை பெரிதுபடுத்த ஒன்றுமில்லை!
அதைத் தாண்டி, இஸ்லாமிய சமூகத்தை மறுமதிப்பீடு செய்திருப்பதாகவே 'சித்திரம்காட்டி நகர்கிறது கடிகாரம்' நமக்கு உணர்த்துகிறது.
arshiyaas@rediffmail.com.
நன்றி : திண்ணை

நீளக்கூந்தல்காரியின் அழகானச் செருப்பு



எஸ். அர்ஷியா
சீயக்காயுடன் சேர்த்தரைக்கக் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெந்தயம், பூந்திக்கொட்டை, காய்ந்த எலுமிச்சம் பழத்தோலுடன் செம்பருத்தி, ரோஜாப் பூவிதழ்களையும் பார்வதியம்மா தனித்தனியாய் எடுத்து வைத்திருந்தாள்.
இதையெல்லாம் காயவைத்து, அவற்றை ஒன்றாகச் சேர்த்தரைத்து, அந்தத்தூளை வடித்தக் கஞ்சியில் பிசைந்து, தலையில் அரக்கித் தேய்த்துக் குளித்தால் தான், குளித்தது போல் இருக்கும் என்று சொல்லிக் கொள்வாள். அவளுக்கு நீளமானக் கூந்தல் இருந்தது.
காலையில், எங்கேயோ புருசனுடன் வெளியில் கிளம்பிய அந்தநேரத்திலும், மறக்காமல் இதையெல்லாம் எடுத்துவந்து கையில்கொடுத்து, "நல்லா வெயில்வந்ததும் காயவெச்சு எடுத்து வை!" என்றுவிட்டுப் போனாள்.
இப்போது, உச்சிவெயில் கொளுத்தியது.
உள்வேலையிலிருந்த மங்கா, காயவைப்பதற்காக அவற்றை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள். முன்வராண்டா சிமெண்ட்தரை பொசுக்கியது. கால்வைக்க முடியவில்லை.அந்த இடத்தில் தான் பொருட்களைக் காயவைக்கவேண்டுமென்பது, அவளுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை!
"உஸ்..உஸ்.."என்று பொறுத்துக் கொண்டு, விளக்குமாற்றால் கூட்டிப்பெருக்கி, வெற்றுத்தரையில் அந்தப்பொருட்களைப் பரப்பினாள்.
காலைத்தரையில்பாவி அந்தவேலையைச் செய்ய முடியவில்லை. பொருட்கள், பரவலாகத் தரையில்படும்படி நன்றாகப் பரப்ப வேண்டும்.
சூடு! கால்மாற்றி மாற்றி வைத்துப் பரப்பினாள். முடியவில்லை. அவளிடம் செருப்பு இல்லை.
இப்போது சூடு தாங்க முடியவில்லை!
எழுந்து நிழலுக்கு ஓடிவந்துவிட்டாள். நிழலிலும் பாதம் தகித்தது. உட்கார்ந்து வாயைக்குவித்து பாதங்களில் ஊதினாள். கால் சூடுமெள்ள ஆறியது.
சிலநிமிட ஆசுவாசத்திற்குப்பின், மிச்சப்பொருட்களை பரப்பிக் காயவைக்க கீழே இறங்கும்போது தான், பார்வதியம்மாவின் செருப்பு அவள் கண்ணில் பட்டது. கருப்புநிறப்பின்னணியில், தங்கநிற ஜரிகை வேலைப்பாடமைந்த அழகான செருப்பு. அந்த அம்மாவிடம் இரண்டு ஜோடி செருப்பு இருக்கிறது. ஒன்று மாற்றி ஒன்றை பயன்படுத்தும்!
சூட்டிலிருந்து தப்பிக்க, "அந்தச்செருப்பை கொஞ்சநேரம் காலில் மாட்டிக்கொண்டால் என்ன" என்று யோசித்தாள்.
மாட்டிக்கொள்ளலாம் தான்!
யாரேனும் பார்த்துவிட்டால்...?
வீட்டில் யாரும் இல்லை. வெளி இரும்புக்கேட்டையும் சாத்திப் பூட்டியிருந்தாள்.
பிறகென்ன?..
ஒரு ஆர்வத்துடன் அந்தச்செருப்பினுள் கால்களை நுழைத்தாள். அவள் காலுக்கு அளவெடுத்து செய்தது போலவே, அந்த ஜோடிச்செருப்பு இருந்தது. உள்ளூர பயமாக இருந்தாலும் செருப்புக்காலுடன் எட்டுஎடுத்து வைத்தபோது, இதற்கு முன்பு கண்டறியாத சுகம். பஞ்சுமெத்தை மீது நடப்பது போல, "மெத்துமெத்"தென்று இருந்தது.
இதுபோல செருப்பை அணிந்து கொண்டு நடப்பதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் போல! இப்போது கிடைத்திருப்பது வாய்ப்பு.
திருட்டுத்தனமான வாய்ப்பு? வீட்டிற்கு யாரேனும் வரும்வரைதான், இதைப் போட்டுக்கொள்ள முடியும்!
செருப்பை மாட்டிக்கொண்டு, பொருட்கள் பரவலாகத் தரையில்படும்படி நன்றாகப் பரப்பினாள். காலில் சூடு ஏறவே இல்லை. செருப்புக்காலுடன் இங்கும்அங்குமாய் நடைபோட்டாள்.
வாசலில் கார்வந்து நிற்கும் சத்தமும், அதைத் தொடர்ந்து ஹார்ன்சத்தமும் கேட்டது. மங்கா பரபரப்பானாள். குடுகுடுவென்று உள்ளே ஓடி, காலில் மாட்டியிருந்த செருப்பை, அது இருந்த இடத்தில் இருந்தது போலவே வைத்துவிட்டு, ஒன்றும் நடக்காதது போல வெளி இரும்பு கேட்டை திறந்து விட்டுவிட்டு, உள்ளே போய்விட்டாள்.
தன் நீளக்கூந்தலில் தேய்த்துக் குளிப்பதற்கான பொருட்கள், முன்வராண்டாவில் காய்வதைக் கண்ட பார்வதியம்மா, புன்சிரிப்புடன் அதைக் கடந்து போனாள். காலில் மாட்டியிருந்த செருப்பை, ஏற்கனவே இருக்கும் செருப்புக்குப் பக்கத்தில் கழற்றிப்போட்டாள்.
உள்ளேயிருந்த மங்காவுக்கு, இப்போது இருப்புக்கொள்ளவில்லை. தான் செருப்பைக் கழற்றிய அவசரத்தில், அதைத் துடைத்து, முன்பு இருந்தது போலவே சரியாக வைத்தோமா எனும் கவலை அவளை ஆக்கிரமித்தது.
arshiyaas@rediffmail.com
நன்றி : திண்ணை

ஆடாத ஆட்டமெல்லாம்...பேராசையின் அரசியல்




அமெரிக்கப் பொருளாதாரச் சரிவும்...
அதிபர் பதவியின் இறுதி நாட்களும்...

எஸ். அர்ஷியா

ழவு வீட்டில் கூட மாப்பிள்ளை தோரணைக் காட்டும் அமெரிக்காவின் உச்சந்தலையில், இடி விழுந்திருக்கிறது. அந்நாடு எழுப்பியிருந்த பிரம்மாண் டமான பொருளாதாரக் கோபுரத்தின் அஸ்திவாரக்கற்கள், பூமித்தட்டுகளைப் போல நழுவிவிட்டன. நாட்டின் பொருளாதார வளமைக்கும் பெருமைக்கும் காரணமாயிருந்த வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஒன்றன்பின் ஒன்றாய் சரிந்து விழுகின்றன. திக்குத் தெரியாதக் காட்டில் சிக்கிக்கொண்டு அமெரிக்கா அல்லாடுகிறது.
வளரும் நாடுகளை தனது விரல்களின் லயத்துக்கு ஏற்ப ஆடும் பொம்மைகளாக மாற்றிய புஷ், வளர்ந்த நாடுகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த புஷ், தனது எண்ணத்துக்குப் புறம்பாக நடந்துகொள்ளும் நாடுகளை, பெரிய அண்ணனின் ஸ்தானத்திலிருந்து ராணுவத்தை அனுப்பி அடக்கி ஒடுக்கிவிடும் புஷ், சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்றில் சிக்கிய முருங்கை மரமாக ஆகிப் போயிருக்கிறார்.
அதிபர் பதவிக்காலம் முடிய சொற்ப நாட்களே உள்ள நிலையில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பொருளாதாரச் சரிவு, அவரது புகழையும் ஆட்சியில் நடந்துள்ள சீரழிவுகளையும் ஒன்றாய்ச் சேர்த்து ஆணி அடித்திருக்கிறது.
ஈராக் மீது படையெடுத்ததற்குக் கண்டனம் தெரிவித்து, உலக நாடுகள் ஒட்டு மொத்தமாய் குரல் கொடுத்தபோது, காதில் வாங்கிக்கொள்ளக்கூட அவகாசம் இல்லாதவர் போல புன்னகைத்துக் கொண்ட அவர், அதைக் கொண்டாட ஆளர வமற்றக் கடற்கரைக்குச் சென்று, அங்கு தன் மனைவியின் பின்புறத்தைத் தடவியபடி நடந்து செல்லும் புகைப்படங்களை வெளியிட வைத்து, தான் ஓய்வில் இருப்பதை பெருமையான செய்தியாக்கிக் கொண்டார்.
நாகரிகத்தின் தொட்டிலான ஈராக்கை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்து, அதன் தலைவனைக் குற்றவாளியாக்கி, தூக்குக்கயிற்றுக்குக் காவு கொடுத்த பின்பு, சாவகாசமாய்... மிகச் சாவகாசமாய்... 2007 செப்டம்பர் 13 ம் தேதி, 'ஈராக் மீது படையெடுத்தது சரியா?' என்று அமெரிக்கத் தொலைக்காட்சி யில் தன்னிலை விளக்கம் வேறு கொடுத்தார். யார் கேட்டது, அந்த விளக் கத்தை?
ஆனால் இன்று?
தன் நாட்டின் பொருளாதாரம் சரிகிறது என்றதும், அவசர அவசரமாக அங்கும் இங்குமாய் ஓடுகிறார். ஆதரவு கேட்டு அலைபாய்கிறார். திறக்காதக் கதவு களைத் திறந்துவைத்து, வெள்ளை மாளிகையில் அவசரக் கூட்டத்தைக் கூட்டுகிறார். உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் அதிபராகத் தன்னை பிம்பப்படுத்திக் கொண்ட அவர், அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த, நிதித்துறைச் செயலாளர் ஹென்றி பால்சன் ஜூனிய ரை அனுப்பி வைக்கிறார்.
அவரது முயற்சி தோல்வியடைகிறது!
பரமபத விளையாட்டில் பாம்புக் கொத்தலுக்கு உள்ளானக் காயைப்போல, தலைகீழாகப் புரட்டப்பட்டு ஆரம்ப இடத்துக்கே வந்துநிற்கும் புஷ், தொலைக்காட்சியில் தோன்றி, அந்நாட்டு மக்களுக்கு அவசரச் செய்தி சொல் கிறார். 'வீழ்ந்து வரும் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் நாடு பெரும் ஆபத் தைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறோம். சில நிறுவனங்கள், வங்கிகள் எடுத்தத் தவறான முடிவுகள், இந்த இக்கட்டான சூழலை நாட்டுக்கு உருவாக்கிவிட்டன. அமெரிக் கப் பங்குச்சந்தை சரியான முறையில் செயல்படவில்லை. இந்நிலை நீடித் தால், நாட்டில் பலரும் வேலை இழக்க வேண்டிவரும். ஆகவே நிலைமை யைச் சமாளிக்க 70 ஆயிரம் கோடி டாலர்களை பெடரல் வங்கி உடனடியாக வழங்குவதற்கு, அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தரவேண்டும்' என்று கேட்டுக் கொள்கிறார்.
மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை இஷ்டத்துக்கு சீர்குலைவு செய்யும் அதிகாரம் பெற்றவராக நடந்து கொண்ட புஷ்ஷின் வேண்டுகோளுக்கு, அவர் சார்ந்த கட்சியின் உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்தது, அவரது கரங்கள் வலுவிழந்து விட்டதைத்தான் காட்டுகிறது.
தனது பதவியின் இறுதிக்காலத்தில் இப்படியாகிவிட்டதே எனும் குற்ற வுணர்வுடன், மீண்டும் மீண்டும் விக்ரமாதித்திய முயற்சிகளில் இறங்கி, வரும் தேர்தலின் அதிபர் வேட்பாளர்களான ஜான் மெக்கெய்னையும், பாரக் ஒபாமா வையும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டது, நிலைமையின் விபரீதத்தை நாட்டுக்கு மற்றுமின்றி உலகுக்கும் உணர்த்தியது.
உள்ளே கிழிந்த சட்டையும் வெளியே பகட்டானக் கோட்டு அணிவதுமான பம்மாத்துடன் நடந்து கொள்ளும் அமெரிக்காவின் பொருளாதாரம், பிற நாடு களின் மீது அது செலுத்திவரும் பன்முக ஆளுமையின் மூலமும், அந்நாட்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் காட்டும் நிதிநிலை அறிக்கைகளின் மூலமு மே கட்டமைக்கப்படுகிறது.
ஒருபக்கம் ஆட்சி செய்பவர்கள் அணுஆயுதம், அன்னியநாடுகளின் மீது அத்து மீறிய தலையீடு, பிற நாடுகளில் தன் நாட்டிற்கான தொழில் வளத்தை உரு வாக்குதல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்க... மறுபக்கம் அமெரிக்க வங்கி களும், நிதி நிறுவனங்களும் வளர்ந்து வரும் நாடுகளில் தொழில் முதலீடு செய்து, அந்தந்த நாடுகளின் வளத்தை, டாலர்களாக அறுவடை செய்து வரு கின்றன.
இந்தத்தொழிலை அந்நாட்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கி.பி.பதினெட் டாம் நூற்றாண்டிலேயே துவங்கிவிட்டன. அவற்றின் நோக்கம், லாபம். அதிக லாபம். கூடுதல் லாபம், இன்னும் லாபம், மேலும் லாபம் என்பதேயன்றி வேறொன்றுமில்லை. அதன் மறுபெயராக, பேராசை என்றும் வைத்துக் கொள்ளலாம்.
அப்படி158 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட ஒரு நிதி நிறுவனம் தான், அமெரிக்கப் பொருளாதாரத்தின் இன்றைய நிஜ முகத்தை வெளி உலகுக்குக் கொண்டுவந்து, 'மஞ்சக் கடுதாசி' கொடுத்திருக்கும் லேமேன் பிரதர்ஸ்!
உலகம் முழுவதும் சுற்றுப்புறச் சூழலுக்கும் சமூக மேம்பாட்டுக்குமான தீர்வு வழங்குவதை நிறுவனத்தின் இலட்சியமாக அறிமுகப்படுத்திக் கொண்ட லேமேன் பிரதர்ஸ், ஒரு முதலீட்டு நிதி நிறுவனமாகச் செயல்பட்டு, தனது பங்குதாரர்களுக்குக் கூடுதல்தொகையைத் திரும்ப வழங்கும் என்று அறிவித் திருக்கிறது. ஆனால் அது, தனது பங்குக்கு முதலீடாக வெறுங்கைகளை மட்டும் நீட்டி, அறிவு மூலதனம் (intellectual capital)என்றே களமிறங் கியிருக்கிறது. அதாவது, துவங்கப்பட்டபோது அது முதலீடாய்ப் போட்டது, தன் அறிவை மட்டும் தான்!
நிறுவனத்தைத் துவங்கிய லேமேன் ஹென்றியும் பின்பு அவருடன் சேர்ந்து கொண்ட இமானுவேல், மேயர் ஆகிய இரு பிரதர்ஸ்களும் கூட்டாக, 'லேமேன் பிரதர்ஸ்' என்று சூட்டிக்கொண்ட புதிய நாம கரணத்துக்கு மூவரின் ஆர்வமும் உழைப்பும் கை கொடுத்தது. அப்போது அவர்கள் செய்துவந்தது, பருத்தி வியாபாரம். கூடவே, விவசாயிகளுக்கும் கொள்முதல் செய்வோருக்கும் இடை யிலான புரோக்கர் தொழில்!
அந்தத்தொழில், நல்ல லாபத்தைத் தந்து கொண்டிருந்தாலும் அவர்கள் நினைத் ததுபோல பருத்தி, புடவையாகக் காய்த்துத் தள்ளவில்லை. பருத்தியுடன் வேறு தொழிலையும் செய்யலாம் என்று அவர்கள் பலவாறு யோசித்த போது, தொழிற்சாலைகள் தொடர்பான புரோக்கர் தொழில் அவர்களை ஈர்த்தி ருக்கிறது. ஆழம்குறித்தக் கவலையில்லாமல் காலை வைத்திருக்கிறார்கள். அதுவே, நாட்டின் பொருளாதா ரத்தை நிர்ணயிக்கும் முக்கிய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாக்கி, உப்பு... மிளகாயிலிருந்து... இன்றைய தொழில் பூங்காவரை அறிவு ஆலோசகர்களாய் அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது.
'மிக உயர்வானது அமெரிக்க வாழ்க்கை!' என்ற பிம்பத்தை ஏற்படுத்துவது, அந்நாட்டு மக்களின் நுனிப்புல் வாழ்க்கைதான். ஐந்துநாட்கள் உழைப்பு. வார இறுதிநாட்களில் கொண்டாட்டம் என்று சொல்வதெல்லாம், வெறுமனே ஜபர் தஸ்துப் பேச்சு! அம்மக்களில் பெரும்பகுதியினர் சோம்பேறிகள். ஓட்டைக் கைக்காரர்கள். வருமானத்தைவிட அதிகமாகச் செலவு செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். அதற்காகக் கடன் வாங்குவதற்கு கூசாமல் கையை நீட்டு பவர்கள். சேமிப்பு என்பதை, அவர்கள் கற்காலத்து மனிதர்களை போல அறிந் திருக்கவில்லை!
பிற நாடுகளுக்கு, அமெரிக்க மக்களின் பிம்பத்தில் கவனம் பதிய வேண்டும் என்பதற்காகவும், 'நாங்கள், எங்கள் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படி உயர்த்தியிருக்கிறோம் பாருங்கள்' என்று காட்டிக் கொள்வதற்காகவும் அந்நாட்டு வங்கிகள், கடன் தொகையை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கின்றன. அதற்கான வருமானம், இந்தியா உள்ளிட்ட அந்நிய நாடுகளின் வளத்தை, டாலர்களாக அவர்கள் அறுவடை செய்து கொண்டு வந்தது தான் என்பதை இங்கே மறக்காமல் குறிப்பிட்டாக வேண்டும்.
பிரதர்ஸ்களின் பக்கம் அதிர்ஷ்டம், சூறைக்காற்றாய் வீசத்துவங்கியது, அந் நாட்டு மக்களுக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொள்ளும் மோகம் வந்தபோது தான். கட்டுவதற்குக் காசு? இருக்கவே இருக்கின்றனவே வங்கிகள். பிறகென்ன?
ஆனால் நம் நாட்டில் வீடுகள் கட்டுவதற்கு வங்கிகள் கொடுக்கும் 'சப் - பிரைம்' எனும் சாதாரணக் கடனை, அந்நாட்டில் எல்லா வங்கிகளுமே கொடுப்பதில்லை. அந்த வேலையை மார்ட்கேஜ் நிதி நிறுவனங்கள்தான் மேற்கொள்ளும். அப்படி ஒருசேவையையும் லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் செய்து வந்தது. வீட்டுக் கடன்களுக்கு வங்கிகளில் தொழில் முதலீடு செய்தும், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகக் கடன் கொடுத்தும் ஜமாய்த்தது. இதனால் அதிக வட்டி வாடிக்கையாளர்களிடமிருந்து அதற்குக் கிடைத்து வந்தது.
இதையடுத்து, கைக் கொள்ளாத அதன் கையிருப்பைக்கொண்டு லேமேன்ஸ் பிரதர்ஸ் நிதி நிறுவனம், ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் தனது கால்களை ஆழமாகவும் அகலமாகவும் பதித்தது. தென் ஆப்பிரிக்காவையும் லத்தீன் அமெரிக்காவையும் அந்நிறுவனம் விட்டு வைக்கவில்லை. ஆசியாவில், லேமேன் பிரதர்ஸ் ஆசியா லிமிடெட், லேமேன் பிரதர்ஸ் செக்யூரிட்டீஸ் ஆசியா லிமிடெட், லேமேன் பிரதர்ஸ் பியூச்சர்ஸ் ஆசியா லிமிடெட் என்று தனது கிளைகளை கண்காணா இடங்களுக்கும் விரித்துக் கொண்டே போனது.
இந்தத் துணைநிறுவனங்கள், அந்தந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் உள் நாட்டு முதன்மை நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து, தொழில் முதலீடு செய் தும், கடன் பத்திரங்கள் வழங்கியும் கித்தாய்ப்பாய் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டன.
நியூயார்க் நகர வால்ஸ்ட்ரீட்டின் ஒரு நவீனக் கட்டிடத்தில் உட்கார்ந்து கொண்டு, தென்னிந்தியாவின் வரைபடத்தில் ஒருபுள்ளியில் ஆயிரத்தில் ஒரு பகுதியாகச் சிந்தியிருக்கும் சிந்தாமணி கிராமத்தின் ஊடே ஓடும் சுற்றுச் சாலையை ஒட்டி, தொழில்பூங்கா வரும் என்று கணித்து, அந்த இடத்தை வளைக்கும் சாதுரியம் அந்நிறுவனத்துக்கு இருந்தது. அதன் துணை நிறுவனங் களான யூனிடெக், டி.எல்.எப்., மாதிரியான இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஓடியோடி உழைத்தன. இந்தியாவில் குட்டிகுட்டி நகரங்களில் கூட, லேமேன் பிரதர்ஸ் நிறுவனத்தில் சம்பளம் வாங்கும் ஆட்கள் இருக்கி றார்கள்.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான ஐசிஐசிஐ லிமிடெட்.,(The Industrial Credit and Investment Corporation of India Limited) லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தின் பங்குகளில், லண்டன் நிறுவனத்தின் மூலமாக (57 million Euro) அதாவது ரூ 375 கோடியை முதலீடு செய்திருந்தது. இந்தப்பணம் முழுவதும் அமெரிக்க மக்களுக்கு வீடுகட்டும் கடன் ஆறுகளாக அமேசான் - மிசிசிபி - முசெளரி - ரெட்ராக்கைக் காட்டிலும் நுங்கும் நுரையுமாகக் கரைபுரண்டு ஓடியது. இதையடுத்து லேமேன் பிரதர்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் நான் காவது பெரிய நிதி நிறுவனமாகத் தன்னை அவதானித்துக் கொண்டது.
பிச்சைக்காரனுக்கு பக்கத்துத் தட்டின் மீதே கண் என்பது முதுமொழி. அந்நாட்டில் செயல்பட்டு வந்த முதன்மை இன்சூரன்ஸ் நிறுவனமான அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் நிறுவனம், லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் போலவே தனது காலை அகலமாக உலகமெங்கும் 130 நாடுகளில் வைத்தது. இந்தியாவில் இந்நிறுவனம், டாடா - ஏஐஜி என்ற பெயரில் இந்தியாவின் முதன்மை நிறுவனமான டாடாவுடன் கூட்டுசேர்ந்து, இந்திய மக்களின் எதிர்காலத்தை அள்ளிக்கொண்டு போகிறது. 'உங்கள் பெற்றோருக்கு நீங்கள் காட்டும் அன்பை உணரச் செய்யுங்கள்!' என்று விளம்பரம் வேறு செய்து வருகிறது.
இந்த இரண்டு நிறுவனங்களுடன் மெரில் லிஞ்ச் எனும் வங்கியும் சேர்ந்து, கடந்த செப்டம்பர் 15 ம் தேதி தங்களின் இயலாமையை உலக நாடுகளுக்கு(?) அறிவித்தன. மேலும் நூறாண்டு அனுபவமுள்ள வாஷிங்டன் மியூச்சுவல், அமெரிக்காவின் ஆறாவது பெரிய வங்கியான வாக்கோவியாவும் கைகளை மேலே தூக்கிவிட்டன.
இதில், 'நான் அம்பேல்!' என்று மஞ்சக் கடுதாசி கொடுத்துள்ள லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்துக்கு, உலகம் முழுவதும் 63 ஆயிரத்து 900 கோடி டாலருக்கு சொத்துகள் இருக்கின்றன. அதேவேளையில் கடன் 61 ஆயிரத்து 300 கோடி டாலருக்கும் அதிகமாக கடன் உள்ளதாக அந்நிறுவன அறிக்கை, தலையில் போடும் துண்டை கையில் வைத்துக்கொண்டு கூறிவிட்டது. இன்று, இந்த நிறுவனத்தைச் சீந்துவார் யாருமில்லை!
இதற்கு முன்பு, ஜே.பி.மோர்கன் எனும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனம், லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி, பின்பு அடிமாட்டு விலைக்கு பங்குகளைக் கேட்டு விலகிக் கொண் டது, உள்நாட்டு அரசியல் தனிக்கதை!இன்னொரு நிறுவனமான மெரில் லிஞ்சின் சொத்துக்களை மட்டும் பேங்க் ஆப் அமெரிக்கா 5 ஆயிரம் கோடி டாலர் கொடுத்து வாங்கிக்கொள்ள முன் வந்திருக்கிறது. அதில் பங்குகளை வாங்கியவர்களின் கதை, இனி காலக் கிரமத்தில் தான் தெரியவரும்.
இந்நிலையில் தான், உலகமெல்லாம் செயல்பட்டுவரும் முதன்மை இன்சூ ரன்ஸ் நிறுவனமான அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் நிறுவனத்தின் திவால் சரிவை மட்டும் காப்பாற்ற, தலையால் தண்ணீர் குடித்து வருகிறார், புஷ்!
ஏனென்றால் இந்நிறுவனம், மற்ற நிறுவனங்களைப் போல்லல்லாமல் காப்பீடு தொடர்பான சேவையை(?) செய்துவருகிறது. இது சிக்கல் நிறைந்த விஷயம். இதில் சொன்னதுபோல் நடந்து கொள்ளாவிட்டால், நிறுவனத்தின் பெயரைக் காட்டிலும் நாட்டின் பெயர்தான் அதிக சேதத்துக்கு உள்ளாகும். இதில் அமெரிக்க நாட்டின் கெளரவமும், அரசின் கெளரவமும் அடங்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற மட்டும் 8 ஆயிரத்து 500 கோடி டாலர் தேவையாக உள்ளது.
வளரும் நாடுகள், 'தங்கள் விவசாயிகளுக்குத் தரும் மானியத்தை நிறுத்த வேண்டும்' என்று கடுமையாகக் கட்டுப்படுத்திவரும் புஷ், இப்போது உள் நாட்டின் பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற உதவிகேட்டு அபயக்குரல் எழுப்பியிருப்பது, புதிய முரணாகப்படுகிறது. இந்நிகழ்ச்சி உலக நாடுகளால் கூர்ந்து கவனிக்கப்படும் ஒன்றாகவும் இருக்கிறது. அதுபோல, 'எல்லாமே தனியார் மயமாக வேண்டும்' என்று துந்தபி முழக்கம்போல் ஊதித்திரிந்த அமெரிக்காவின் நிதிநிறுவன அரசுடமையும் கேள்விக் குறியாகியுள்ளது.
அமெரிக்கக் காங்கிரஸில் முதல் முறையாகத் தோல்வியடைந்த பேச்சு வார்த்தையை அடுத்து, புஷ்ஷின் இடைவிடாத முயற்சியால் இரண்டாவது முறை ஏகப்பட்ட திருத்தங்களுடனும், மூன்றுகட்டச் செயல்பாடுகளாக, நிதி வழங்கல் ஒப்புதலுக்கு வந்திருக்கிறது.
'சரி! அவ்வளவு டாலர்களை உடனடியாக வழங்குவதற்கு பெடரல் வங்கி எங்கே போகும்? கைவசம் அதனிடம் அந்த அளவுக்கு இருப்பு இருக்கிறதா?' என்றால், அதுவும் பாப்பராகித்தான் கிடக்கிறது. முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்குப் போகும் பாதையை நோக்கும் முகமாக சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்தும் அரபுநாடுகளின் தயவிலிருந்தும் கையேந்தி செய்யப் போகும் வசூல் மூலம்தான்!
புஷ்ஷூம் சரி, அவரது அமைச்சரவை செயலாளர்களும் சரி... அமெரிக்க உள்நாட்டு விவகாரங்களைப் பெரியதாகக் கண்டுகொண்டதே இல்லை என்பதற்கு பல சாட்சியங்கள் உள்ளன. 'இந்தியர்கள் ருசியான உணவு வகை களை அதிக அளவில் உண்பதால், உலகில் உணவுப்பஞ்சம் உருவாகி வரு கிறது' என்று புஷ் திருவாய் மலர்ந்தருளியது, கண்டனத்துக்கு உள்ளானது. அது முடிந்த சிலநாட்களில், வெளியுறவுச் செயலாளர் கண்டோலிஸா ரைஸ், கொலராடோ மாநிலம் போல்டரில் உள்ள ஆஸ்பென் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கில், 'இந்தியாவும் சீனாவும் தங்கள் நாட்டுக் கான மின்துறைக்கு, மிக மோசமான கழிவு நிலக்கரியையே பயன்படுத்து வதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அதைச் சொன்னால், அந்தநாடுகள் கேட்க மறுக்கின்றன!' என்று பொன்மொழி உதிர்த்து, தனது அறிவின் விசாலத்தைக் காடடிக் கொண்டார் என்பது அவற்றில் முக்கியமானவை.
இவர்களையெல்லாம் தாண்டியவர், அந்நாட்டின் நிதித்துறைச் செயலாளர் ஹென்றி பால்சன் ஜூனியர். புஷ்ஷின் மனதறிந்து எந்த நாட்டின் மீது படையெடுக்க... எவ்வளவு டாலர்களை ஒதுக்கலாம் என்ற கனவிலேயே மூழ்கிக் கிடப்பவர். ஈரான் மீது போர் தொடுக்க ஆன மதிப்பீட்டுச் செலவான 14 ஆயிரத்து 200 கோடி டாலர்களைத் தாண்டி 21ஆயிரத்து 500 துருப்புகளைக் கூடுதலாக அனுப்பியதற்கான செலவை, எப்படி... எந்தக் கணக்கில் எழுதுவது என்று யோசிப்பதிலேயே ஆழ்ந்து கிடக்கிறார். இப்படி முக்கியமானவர்களெ ல்லாம் வேறுவேறு திசைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால், உள்நாட்டு விஷயங்கள் ஏழுவழி எழுபத்திரண்டு கோலங்களாகிப் போய் கிடக் கின்றன.
கடந்த ஓராண்டாகவே அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. 'Bear Steams' என்பது லேமேன் பிரதர்ஸ் போல மிக முக்கியமான நிதி நிறுவனம். உச்சத்தில் நின்றிருந்த அந்நிறுவனம், 'சடாரென்று' முறிந்து விழும் கொடிக்கம்பம்போல தரை மட்டமாகிப் போனது. இந்த வீழ்ச்சி, நாட்டின் நிதித்துறையை விழிக்கச்செய்தது என்னவோ உண்மை தான். உடனடியாக கீழே விழுந்த நிறுவனத்தைத் தூக்கிநிறுத்தும் முயற்சியாக அமெரிக்க மத்திய வங்கியான 'Federal Reserve System' 32 ஆயிரம் கோடி டாலர்களைக் கொடுத்து அந்நிறுவனத்தையே விலைக்கு வாங்கிக் கொண்டது.
அதன் பின்பு, அந்நாட்டின் வீட்டு அடமான நிதி வங்கிகளான 'Fannie Mae, Freddie Mae' என்று இரு நிறுவனங்கள் நிலைகுலைந்து தரைமட்டமாயின. அதுபோல, அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வங்கி 'இண்டி மேக்' கடந்த ஜூலை மாதத்தின் மத்தியில் திவாலாகிப் போனது. 'நிர்வாக மேலாண்மையின் குறை பாடுகள்தான் இத்தனைக்கும் காரணம். இந்நிலையை மாற்ற பெரிய அளவி லான சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இத்துறைகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்கான விதிமுறைகள் தெரியவில்லை. இத் துறையில் அதிக அளவில் அறிவு ஜீவிகள் உள்ளனர். அமெரிக்கப் பொருளா தாரத்தை சீர்செய்ய அவர்கள் முயலுவார்கள் என்று நம்புகிறேன்' என்று சொல்வது யார் தெரியுமா? லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தில் ஒன்பது ஆண்டுகாலம் பணியாற்றிய ஊழியர் ரோஜர் பிரிமேன் என்பவர் தான்!
'நிலைமையைச் சமாளிக்க 70 ஆயிரம் கோடி டாலர்களை பெடரல் வங்கி உடனடியாக வழங்குவதற்கு, அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தரவேண்டும்' என்று புஷ் கேட்டுக் கொண்டதை, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், தனது தேர்தல் பிரசாரத்தின் ஆயுதமாகக் கையாளுகிறார். அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் ஒருபகுதியாக, இரண்டு வேட்பாளர்களும் பங்கு கொள்ளும் பொதுமேடை நிகழ்ச்சிகளில், பாரக் ஒபாமாவை வைத்துக்கொண்டு ஜான் மெக்கெய்ன் நடத்தும் அரசியல் தாக்கு, அபாரமாக எடுபடுகிறது. ஒவ்வொரு மேடையிலும் அவருக்கு ஒதுக்கப்படும் 90 நிமிடங்களும் அவர், வாய்ச்சொல்லிலே ஒபாமாவை ஓரங்காணச் செய்துவிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் வெளிப்படையற்ற செயல்பாடுகள், வரிவிதிப்பு, கூடுதல் செலவு உள்ளிட்டப் பிரச்சனைகளைத் தொட்டு, பழுதுபட்டுக் கிடக்கும் தேசத்தின் உடல்நிலையைக் காப்பாற்ற, தான் முயலுவதாகப் பேசுகிறார். பல்வேறு சீர்திருத்தங்களின் மூலம் அதைத்தான் செய்யப்போவதாக உறுதியளிக்கிறார்.
'என்ன செய்யப்போகிறேன் என்பது குறித்த தெளிவான வரையறை வைத்திருக்கிறேன். இன்று நாட்டில் நிலவும் பிரச்சனையைத் தீர்க்க ஆளும் கட்சியின் தலைவர் எதுவும் செய்யவில்லை. பல நிறுவனங்கள் சரிந்து கிடக்க, ஏதோ ஒரு நிறுவனத்தின் மீது அவர் கரிசனம் காட்டுகிறார். அதற்கும் எதிர்கட்சியின் ஆளான நான் போக வேண்டியிருக்கிறது. பொருளாதாரச் சரிவை நேர்செய்ய நான் உதவியிருக்கிறேன். பொருளாதாரச் சரிவுக்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடுதானே? வளமை என்பது எல்லோருக்கும் மழை யாகப் பொழிய வேண்டும். அதற்கான காத்திர நடவடிக்கைகளை நான் எடுப் பேன். புஷ் அரசால் இன்றைய பொருளாதாரச் சீர்கேட்டை நிவர்த்தி செய்ய முடியாது. அதை நிவர்த்தி செய்யாதவரை, இந்நிலை நீடிக்கவே செய்யும். புஷ்ஷின் நிர்வாகம் செய்ய முடியாததை, சுதந்திரமாக நான் நடத்திக் காட்டு வேன். இது எனது திட்டம். செனட்டர் ஒபாமா, இப்படியொரு திட்டத்தை யோசிக்கவே இல்லை. புஷ்ஷிடமும் இப்படியொரு திட்டம் இல்லை. எனது திட்டத்தின் மூலம், அமெரிக்கா மீண்டும் உயிர்த்து எழும். பொருளாதாரம் சீரடையும். அமெரிக்கர்களுக்காக நான் உழைப்பேன்' என்ற அவரது அறைக் கூவல், பொருளாதாரத்தில் விழுந்த அடியைக்காட்டிலும் புஷ்ஷூக்கு கூடுதல் அடியைக் கொடுத்து வருகிறது.
நம்மூர் அம்பிகளின் கனவுப்பிரதேசம் என்பதே அமெரிக்கா தான்! 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்றதைத் தவறாகப் புரிந்து கொண்டு, நம் கலாச்சாரத்தின் வேர்களை மண்ணோடு பறித்துச்சென்று அங்கு நடுவதை பெரிய பாக்கியமாகக் கருதி ஓடினார்கள். எப்போதாவது பிறந்தமண் திரும்பும் அவர்கள், தாங்கள் வாழும் மண்ணைப்பற்றி பீற்றிக்கொள்ளும் சங்கதிகள் மற்றவர்களின் கண்ணில் பொறாமையையும், எப்படியாவது நாமும் அங்கே போய்விட வேண்டும் எனும் ஆவலையும் தூண்டிவிடும். 1990 வரை முப்பது டாலர் சம்பளத்துக்கு அமெரிக்காவில் வேலைசெய்த அம்பிகள், நம்மூரில் வேற்று கிரகத்து மனிதர்களாகவே அறியப்பட்டார்கள். 'நாங்க லேமேன் பிரதர்ஸ்ல வேலை பண்றோம். இண்டி மேக்ல வேலை பண்றோம்!' என்று மொன்னைத் தமிழில் சொல்வது, கெளரவமானச் செயலாக ஆகியி ருந்தது. இந்திய அம்பிகளின் சின்சியாரிட்டி(?) அமெரிக்கர்களுக்கும் பிடித் திருந்தது.
வந்தது தாராள மயமும், உலக மயமாக்கலும். தொழில்நுட்பக் கல்வியின் கதவுகள் அகலத்திறந்தன. 'அறிவில் சிறந்தது யாரு?' என்று போட்டிபோடும் அளவுக்கு, பின்தங்கிக்கிடந்த தம்பிகள், அம்பிகளைக் காட்டிலும் மேலோங் கினார்கள். நுனிநாக்கு ஆங்கிலம் தம்பிகளுக்கும் பேச வந்தது. மீசை மழித்து, கிருதா குறைத்த அவர்களும் விமானம் ஏறினார்கள். சம்பளம், லட்சக் கணக்கான டாலர்கள் ஆயின. ஆனால், தாய்மண்ணுக்குப் பயன்படவேண்டிய அறிவுச்செல்வம் டாலர்களுக்கு விலை போனது. திரைகடலோடி, திரவியம் விற்றவர்களாகிப் போனோம்!
வாங்கிய சம்பளத்துக்கு உழைத்த அவர்களின் உழைப்பு, அமெரிக்க நிறுவனங் களை மட்டுமன்றி உலக நிறுவனங்களையும் பரமபத ஏணிகளாய் உச்சத்துக்குக் கொண்டு சென்றன. அதன் லாபம் இரு பிரிவினருக்கும் இருந்தது. உலக வரைபடத்தில் அமெரிக்கா இருப்பதுபோய், அமெரிக்காவுக்குள் உலக வரைபடம் இருக்கும் அளவுக்கு, அனைத்து நாடுகளின் அறிவாளிகளும் அங்கே மூளை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது இறங்கு காலம்!
உச்சத்தில் இருந்த நிறுவனங்கள் ஒரேயடியாக ஓட்டாண்டியாகக் காரணம் என்னவென்று ஆராய்ந்தால், அந்நிறுவனங்களின் கொள்கைகளும் அவற்றின் நிர்வாகமும்தான் காரணமாக இருக்கமுடியும். முதலில் கொள்கையைப் பார்ப்போம். அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் செயல் பாடுகளில் நிபுணத்துவம் வாய்ந்தவையாக போலியாகக் காட்டிக் கொள்கின்றன. முதலீட்டுக் கொள்கைகளில் நேர்மையின்மையும், பாதுகாப் பின்மையும் அந்நிறுவனங்களில் மலிந்து கிடக்கின்றன. ஒரு நிறுவனத்தின் கடன் என்பது, அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பைக் காட்டிலும் குறைவாக இருக்கவேண்டும். ஆனால் அமெரிக்க நிறுவனங்கள், அதிக இடர்கள் உள்ள தொழில்களில் யோசனையில்லாமல் முதலீடு செய்தன. மக்கள், தங்கள் நிலையை அறியாமலேயே அல்லது அறிந்தே கூட பலமடங்குக் கடன் வாங்கினர்.
திடீரென 2005 ம் ஆண்டின் இறுதியில் வீட்டடி மனைகளின் விலை அமெரிக் காவில் சரியத் துவங்கியது. அடிமாட்டு விலைக்கு சதுரஅடி கணக்கில் நிலம் விற்பனைக்கு வந்தது. நம்மூர் காசில் வெறுமனே அறுபதாயிரம் ரூபாய்க்கு அனைத்து வசதிகளும் கொண்ட பிளாட் வீடு கிடைத்தது. இங்கே மதுரை மேலமாசி வீதியில் ஒருசதுர அடியின் விலை 22 ஆயிரம் ரூபாயாக இருக் கிறது. ஆனால் அமெரிக்காவில் அதை வாங்கவும் ஆளையே காணோம். வீட்டை விற்றுக்கடனை அடைக்க முடியாத இக்கட்டு. வங்கிகளுக்கு வசூல் பண்ண முடியாத நிலை. இதுவே அமெரிக்க நிதி நிறுவனங்களின் கழுத்துக்குக் கயிறாக வந்து சேர்ந்துவிட்டது.
நிர்வாகத்தைப் பொறுத்தவரை, அவை ஏட்டுச் சுரைக்காய் தான்!
பிரமிப்பைத்தரும் பிரம்மாண்டக் கட்டிடங்களும், நுனிநாக்கு ஆங்கிலமும், அழகியப் பெண்களின் வரவேற்பும் வியாபாரத்தைத் தூக்கிநிறுத்திவிடும் எனும் மனப்பால், நவீன கார்ப்பரேட் நிறுவனங்களின் மனதில் உள்ளது. கணிணி இயக்கும் அறிவும், ஓயாத பணியும் இலக்கைத் தொடும் காரணிகள் என்பது அவர்களின் நினைப்பு. கூடுதலாய் தரும் சம்பளம், நிறுவனத்தின் மதிப்பை உயர்த்திவிடும் என்பது அபிப்ராயம். அதனாலேயே அந்நிறுவனங்கள் உலக அளவில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. திவாலாகிப் போன லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல்அதிகாரியுமான ரிச்சர்ட் புல்ட்டின் ஆண்டுச்சம்பளம் அதிகமெல்லாம் இல்லை. சுமார் 34 மில்லியன் டாலர் மட்டும் தான்! அதாவது 3 கோடியே நாற்பது லட்சம் டாலர்கள். ஒருடாலரின் குத்துமதிப்பு இந்தியப் பணம், நாற்பத்தைந்து ரூபாயாகக் கொள்ளலாம்.
திவால் அறிவிப்பு வெளியிடப்பட்டதும் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், கைக்குக் கிடைத்த பொருட்களை அள்ளிக்கொண்டு, 'இதுவாச்சும் கிடைத்ததே' எனும் சந்தோஷமும், 'வேலை போயிருச்சே' எனும் வருத்த முமாகக் கிளம்பிப்போனார்கள். உலகம் முழுவதுமுள்ள லேமேன் பிரதர்ஸ் நிறுவனங்களில் பணிபுரிந்த நேரடி ஊழியர்கள் அறுபதாயிரம் பேரும், மறைமுக வேலைவாய்ப்புப் பெற்ற லட்சத்துக்கு அதிகமானவர்களும் இன்று வேலையில்லாதவர்களின் பட்டியலுக்கு மாறியிருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் நெருக்கடியில், இப்போது அங்கு மூச்சு முட்டுகிறது.
அமெரிக்காவின் பொருளாதாரச் சரிவு, இந்தியாவில் என்ன விதமான பாதிப் பைத் தந்துவிடும்?
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுவதைக் கேட்போம். 'அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தியப் பொதுத்துறை வங்கிகள் எதுவும், திவாலான லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை. நிதிச்சந்தையிலும் எவ்வித நெருக் கடியும் நம்நாட்டில் இல்லை. இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்தமட்டும், ரிசர்வ் வங்கி போதுமான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளது. நமது வங்கி களின் நிதி நிலைமையும் ஸ்திரமாக இருக்கிறது' என்று மனதைத் தேற்றிக் கொள்ளும் வார்த்தைகளாகவே பேசியிருக்கிறார்.
அதற்கு நேர்மாறானதாக இருக்கிறது, திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவின் எச்சரிக்கை.
இந்த இரண்டு பொருளாதார மேதைகளுடன் மற்றுமொரு பொருளாதார மேதையான பிரதமர் மன்மோகன் சிங், எந்தக் கவலையுமில்லாமல் 'அணு சக்தி... அணுசக்தி' என்று அலைபாய்ந்து கொண்டிருக்கிறார். 'இந்தியாவில் பொருளாதார சிக்கல் இல்லை' என்று அவர்கள் மாறி மாறி சாமரம் வீசுவது, அமெரிக்காவுக்கான அடிவருடித்தனமாக மட்டுமே இருக்கமுடியும்.
லேமேன் பிரதர்ஸின் திவாலானத் தகவல் பரவத்தொடங்கிய உடனேயே, திருப்பூரின் ஜவுளி மையத்திலிருந்து பூனேயின் ஆட்டோ உதிரிபாகத் தயாரிப்பாளர்கள், ராஜ்கோட்டின் இயந்திர பாகங்கள் உற்பத்தியாளர்கள் வரை முகம்வாடிப் போயினர். சிறுதொழில் முயல்வோர், தாங்கள் பாதுகாப்பானத் தொழிலில்தான் இருக்கின்றோமா எனும் சந்தேகத்துக்கு ஆளானவர்களாகிப் போயினர்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தின் ஐசிஐசிஐ., ஏ.டி.எம்.மும், வங்கியும் அவ்வூர் மக்களால் சூழப்பட்டது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் பங்குச்சந்தை புரோக்கராகச் செயல்பட்ட உபேந்தர், சரிவால் ஏற்பட்ட கடனைச் சமாளிக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ஸ்டாக் புரோக்கராகச் செயல் பட்ட ரவி ஷர்மாவும் இதே முடிவுக்குப் போய்விட்டார்.
பிரம்மாண்டமான லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனம், மெரில் லிஞ்ச், இண்டி மேக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப வேலைகளையெல்லாம் செய்து கொடுத்தது, இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டி.சி.எஸ்., சத்யம், விப்ரோ ஆகியவை தான்!
பலகோடி டாலர்களை பணிக்கான பகரத் தொகையாக இதுவரைப் பெற்றுவந்த இந்நிறுவனங்கள், பல ஆயிரம் தொழிலாளர்களை கைவசம் வைத்திருக்கின்றன. போதாததற்கு, கல்லூரி வளாகங்களுக்கு நேரடியாகச் சென்று, அதிக சம்பளம் தருவதாகச்சொல்லி, படிக்கும் மாணவர்களை அள்ளிக் கொண்டும் போகின்றன. இனி அது நடக்குமா என்பதும் சந்தேகமே!
அதுபோல, ஏற்கனவே பணியிலிருக்கும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை இருக்குமா என்பதும் சந்தேகமே. அதன் அறிகுறியாக பல ஆயிரம் பேர் வேலைநீ£க்கம் செய்யப்படுவதும் ஆரம்பமாகி விட்டது. அமெரிக்காவில் எழுந்துள்ள இப்பிரச்சனையால் மட்டுமே உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆறுலட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உருவாகிவிட்டது.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க அதிபராக இருந்த பெரிய புஷ் சந்திக்காத, கிளிண்டன் சந்திக்காத இந்தப் பிரச்சினை, சின்ன புஷ்ஷூக்கு உள்நாட்டிலேயே தலைவலியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து, அமெரிக்கா உடனடி யாக மீள வாய்ப்பில்லை. அமெரிக்கா தற்போது எடுத்திருக்கும் இந்த அவசரக் கால நடவடிக்கை என்பது, அனைத்து சிக்கல்களையும் ஒருமுடிவுக்குக் கொண்டு வந்துவிடும் சூத்திரமுமல்ல! சிக்கலின் ஓர் அத்தியாயம் முடிவதற் கான வாய்ப்பு. அவ்வளவு தான். அதேவேளையில், இது அடுத்த சிக்கலுக்கான ஆரம்பம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. காலக்கிரமத்தில் அமெரிக்கா தன்னை சிக்கல்களிலிருந்து மீட்டுக்கொள்ளும் சூழ்ச்சிகள் தெரிந்த நாடுதான். பாரக் ஒபாமாவோ, ஜான் மெக்கெய்ன்னோ யார் அதிபராக வந்தாலும் புஷ் ஷைக்காட்டிலும் அதிக சூழ்ச்சியைக் கைக் கொள்பவர்களாகவும், வெளிப் படையற்றவர்களாகவுமே இருப்பார்கள். அந்த சோகத்தையும் ஏற்றுக்கொண்டு வாழும் பக்குவம் பெற்றவன் ஆகிவிடுவான், உலக மனிதன்!
கடந்த ஏப்ரல் 1 ம் தேதி. லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தின் ஆசியத் தலைமையகம் பரபரப்புக்கு உள்ளானது. 'அந்த முதலீட்டு வங்கியில், போது மான நிதி இல்லை... நிறுவனம் திவாலாகிவிட்டது' என்று செய்தி பரவியது. அதன் வாடிக்கையாளர்கள் விழுந்தடித்து ஓடிவந்து அலுவலகத்தை மொய்த் தனர். அவர்களை ஆசுவாசப்படுத்திய அதிகாரிகள், 'ஏப்ரல் 1 முட்டாள் கள் தினம் என்பதால், யாரோ வதந்தி பரப்பியிருக்கிறார்கள். 3000 கோடி டாலர் கையிருப்பு இருப்பதாக'ச் சொல்லி, இனிப்புத்தடவி அனுப்பி வைத்தார்கள்.
அந்த வதந்தி, ஆறே மாதங்களில் நிஜமாகியிருக்கிறது!
மேலே...மேலே...மேலே...அமெரிக்காவின் தேசிய வளர்ச்சியுடனும் அந்நாட்டின் அயல்நாட்டுப் பணி களுடனும் பின்னிப் பிணைந்தது, அங்கு செயல்பட்டு வரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என்றால் மிகையாகாது. தேசத் திற்கான கடமையாக 1900 களின் துவக்கத்தில் Sears, Roebuck & Company, F.W. Wool worth Company, May Department Stores Company, Gimbel Brothers Inc and R.H. Macy & Company உள்ளிட்ட நிறுவனங்கள், பெரும்பங்காற்றி இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் மூத்த நிறுவனம் லேமேன் பிரதர்ஸ் ஆகும்!
1844 - ல் அலபாமா மாகாணத்தின் மாண்கோமெரி எனும் பகுதியில், சிறிய பெட்டிக்கடை துவங்கிய தன் மூலம் ஹென்றி லேமேன் என்பவர் தனது இன்னிங்ஸை துவங்குகிறார். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1850 - ல் அவருடன் இமானுவேல், மேயர் எனும் இரு சகோதரர்கள், தொழில் பங்காளிகள் ஆகிறார்கள். நிறுவனம் லேமேன் பிரதர்ஸ் என்று பெயரிடப் படுகிறது. பருத்தி வியாபாரம் துவங்குகிறது.
1858 - ல், நாட்டின் வர்த்தக மையமான நியூயார்க்கில் ஒரு அலுவலகம் துவக்கப்படுகிறது.
1860 - 1869 வரை உள்நாட்டுப் போரில் வியாபாரம் தள்ளாடுகிறது. அதன்பிறகு அவர்கள் தேசம் முழுமைக்கும் பருத்தித் தொழிலை விஸ்தரிக்கிறார்கள். போருக்குப் பின்பான காலத்தில், நாடு விவசாயத்திலிருந்து தொழிற்சாலைகளுக்கு மாறுகிறது. ரயில் பாதை அமைக் கும் பணி துவங்குகிறது. Kuhn, Loeb ஆகிய நிறுவனங்கள், அப்பணியை செய்யத் துவங்கின. அவற்றுக்கு லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் பணமும், ஆலோ சனையும் தருகிறது. ரயில் பாதைகளுக்கான அரசின் பங்குகளை வாங்கி விற்பனையும் செய்கிறது. லேமேன் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அங்கீகாரம் கிடைக்கிறது.
1880 - 1889 இந்த காலகட்டத்தில் தான் அந்நிறுவனம் தங்களின் எல்லையை வங்கித்துறை, நிதி நிறுவனம், சில்லரை வணிகம் என்று பல்துறைகளுக்கு விரிவுபடுத்துகிறது. தொட்டதெல்லாம் பொன்னான காலம், அது.
1900 - 1909 நாட்டின் முக்கிய நிறுவனங்களான Sears, Roebuck & Company, F.W. Wool worth Company, May Department Stores Company, Gimbel Brothers Inc and R.H. Macy & Company ஆகியன லேமேன் பிரதர்ஸ் நிறுவனத்திடம் ஆலோசனைகளையும் நிதி உதவியையும் பெறுகின்றன.
1920 - 1929 நுகர்வோர் துறையில் காலடி பதிக்கிறது லேமேன் பிரதர்ஸ். அமெரிக்காவின் முக்கிய திரைப்பட ஸ்டூடியோக்களான RKO, Paramount, 20 th Century Fox ஆகிய நிறுவனங்களுக்கு யோசனை சொல்லும் நிறுவனமாகவும், வழிகாட்டி நிறுவனமாகவும் ஆகிறது. அந்நிறுவனங்களுக்கான நிதி ஏற்பாடு களையும் செய்கிறது.
1930 - 1939 ஊடகத்துறையில் பெரும்புரட்சி ஏற்படக் காரணமாக இருந்தத் தொலைக்காட்சிப் பெட்டி உற்பத்தி நிறுவனமான DuMontடுக்கும், Radio Corporation of Americaவுக்கும் ஆலோசகர்களாக லேமேன் பிரதர்ஸ் ஆகிப்போனார்கள்.
1940 - 1984 வரை லேமேன் பிரதர்ஸ் கால் வைக்காதத் துறையே இல்லை எனும்படிக்கு மின்சாரம், மின்னணுப் பொருட்கள், வாகனங் கள், விமானப்போக்குவரத்து, மருத்துவப் பாதுகாப்பு, மருந்து உற்பத்தி என்று பரபரப்பாக இயங்கியது.
1984 - ல் லேமேன் பிரதர்ஸ் நிறுவனத்தை அப்படியே மொத்தக் கொள்முதலாக American Express விலைக்கு வாங்கி, Shearson நிறுவனத்துடன் இணைத்துவிட்டது.
1990 - 1999 ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்குமா?
1993 - ல் Shearsonலிருந்து பிரிந்து American Expressலிருந்து விலகி, மீண்டும் லேமேன் பிரதர்ஸ் தனித்து உருவானது.
1994 - ல் பங்குச் சந்தையில் நுழைந்த லேமேன் பிரதர்ஸ் உலகமெங்கும் தனது கிளைகளை பரப்பியது.
2000 - ம் ஆண்டில் தனது 150 வது ஆண்டுவிழாவை விமரிசையாகக் கொண்டாடி, உலகின் முதல் IPO துவங்கியது. மன்ஹாட்டன், நியூயார்க், நியூ ஜெர்ஸி ஆகிய இடங்களில் அலுவலகங்கள் திறந்தது.
2005 - ல் மும்பையிலும், 2006 - ல் லண்டனிலும், கனடாவிலும் அலுவலகங் களைத் திறந்தது.
நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நாள் வரை, அதன் பரபரப்பில் சிறிது கூட பின்னடைவு ஏற்படவே இல்லை!இந்தாப் பிடி!
பருத்தி மூட்டைகளைப் போலவே டாலர்களையும் மூட்டை மூட்டையாக வாரிக்குவித்த லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனம், அதை அள்ளிக் கொடுக் கவும் தயங்கியதில்லை. நாட்டின் அதிபர்களாக இருந்த அத்தனை பேருமே அங்கு கையையும், பையையும் நிறைத்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
தற்போதைய அதிபர் வேட்பாளர்களான பராக் ஒபாமா, ஜான் மெக்கெய்ன், ஏன் ஹிலாரி கிளின்டன் கூட தேர்தல் நிதியாக லட்சக்கணக்கான டாலர்களைப் பெற்றிருக்கிறார்கள்.

பள்ளத்தாக்கின் அரசியல்!



எஸ். அர்ஷியா

பிரச்சனைகளை சரிவரக் கையாளத்தெரிந்தவர், தான் குலாம் நபி ஆசாத். ஆனால், ஆனைக்கும் அடி சறுக்குமே... அப்படித்தான் ஆகிப்போனது!

அவரது அமைச்சரவையால் போடப்பட்ட யதார்த்தமான ஒரு உத்தரவும், அதைத்தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைகளால் அந்த உத்தரவைத் திரும்பப் பெறுவதற்காகப் போடப்பட்ட மறு உத்தரவும், ஆசை ஆசையாய் அவர் வாங்கிக்கொண்டு போய் உட்கார்ந்த முதல் அமைச்சர் பதவியை, ராஜினாமா செய்யும் அளவுக்குக் கொண்டு போய் விட்டது! (ஜுலை 7, 2008)
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிக் குதிரைகளின், எட்டுத்திசைகளிலும் உயிர்க்கும் லகானை, ஒருசேரப்பிடித்து, பிரதமர் மன்மோகன் சிங்கின் கையில் லாவகமாகக் கொடுத்துக் கொண்டிருந்த அவருக்கு, மாநில முதலமைச்சராகும் வாய்ப்பு வலியக் கிடைத்ததும், நாடாளுமன்றத் துறையிலிருந்து விலகி, தினம் ஒருசர்ச்சை, நாலைந்து இடங்களில் குண்டுவெடிப்பு, பயங்கரவாதிகளின் ஊடுருவல், நாள்தோறும் துப்பாக்கிச் சூடு, எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று அனைத்துவகைகளிலும் அல்லோகல்லோப்படும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சிப்பொறுப்புக்குப் போனார்,அவர்!
அம்மாநிலத்தின்நெடியமலைத் தொடர்களின் இடையே 13 ஆயிரம் அடி உயரத்தில், ஸ்ரீ அமர்நாத் கோவில் உள்ளது. அங்குள்ள குகைக் கோவில் ஒன்றில், ஜுலை - ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதிலிருந்து பக்தர்கள் வருவது வாடிக்கை!
பாரதீய ஜனதா கட்சியும், அதன் குடுமியைக் கையில் பிடித்திருக்கும் ஆர்.எஸ்.எஸும், துணைக் கோள்களான இன்னபிற காவி அமைப்புகளும், தங்களது இந்துத்துவா ஊதுகுழலை எடுத்து, தேசம் முழுவதும் ஊதுவதாலும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வரும் இதுபோன்ற கோவில்களின் ஆன்மிகச் சாகசம் மற்றும் அருள்பாலிப்பு நிறைந்த விளம்பரங்கள், சாதாரணமாக இருந்த இந்துக்களில் பலரை தீவிர பக்தர்களாக ஆக்கியிருக்கிறது. அந்த வகையில், பனிலிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை, கடந்த சிலவருடங்களாக அதிகரித்து வருகிறது.
இந்த மாநிலத்தின் ஆளுநர் யாரோ... அவரே இந்தக் கோவில் வாரியத்துக்கான தலைவரும் ஆவார். அதனடிப்படையில், கடந்த மே மாதம் ஆளுநராக இருந்த எஸ். கே, சின்கா, அதிக எண்ணிக்கையில் வரும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதற்கும் கோவில் நிர்வாகத்திற்கு இடம் ஒதுக்கவேண்டும் என மாநில அரசைக் கேட்டுக்கொண்டார்.
ஆளுநரின் இந்தக் கோரிக்கை, மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்து. அம்மாதம் 26 - ம் தேதியே அனந்தநாக் மாவட்டத்தில் பால்டால் எனுமிடத்தில் வனத்துறைக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை, கோவில் நிர்வாகம் அனுபவித்துக் கொள்ளலாம் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தவைப் பிறப்பித்தது, கூட்டணிக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவரும், வனத்துறை அமைச்சராகிய குவாசி முகம்மது அப்சல்!

நிலம் வழங்கப்பட்ட விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்ததும், காஷ்மீர் மாநிலத்தில் இயங்கிவரும் தன்னாட்சிக்(பிரிவினைவாத?)கோரும் அமைப்புகளான ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி, ஜீலானி மற்றும் மீர்வெய்ஜ் உமர் பாரூக் தலைமையிலான ஹூரியத் மாநாட்டுக் கட்சிகள், கோவிலுக்கு அரசு நிலத்தை ஒதுக்கியதை திரும்பப் பெறவேண்டும் என்ற பேராட்டத்தில் ஈடுபட்டன. 'நிலம் வழங்கப்பட்டதை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைக் குழு' எனும் பெயரில் அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது. 'ஸ்ரீநகர் சலோ' என்ற கோஷம், தன்னாட்சி அமைப்புகள் ஆழமாக வேறூன்றியிருக்கும் ஜம்முவில் பெரிதாய் கேட்கத் துவங்கியது.

நிலத்தை திரும்பப் பெறக்கோரி துவக்கப்பட்ட இந்தப் போராட்டம் நாளடைவில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவிலிருந்து துண்டாட வேண்டும் எனும் கிளர்ச்சியை நோக்கிப் போனது. துண்டாடல் கிளர்ச்சி கோஷம் முன்னெழுந்ததும், நிலத்தை ஒதுக்கக் கையெழுத்திட்ட வனத்துறை அமைச்சரின் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி சந்தடிசாக்கில், 'கோவிலுக்கு நிலத்தை ஒதுக்கியதை ரத்துசெய்ய வேண்டும் என்றும்... இல்லாவிட்டால்... கூட்டணி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக'வும் உள்குத்து அறிவிப்பை வெளியிட்டது. எதிர்பாராத இந்த மிரட்டலையடுத்து, காங்கிரஸ் கட்சி இக்கட்டில் மாட்டிக்கொள்ள, வேறு திசையில் தனது பயணத்தை துவங்கிவிட்டது, மக்கள் ஜனநாயகக் கட்சி!

இந்நிலையில், ஜூன் 25 - ம் தேதி அம்மாநில ஆளுநரான எஸ்.கே.சின்கா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவரது இடத்துக்கு, அதுவரை அங்கே மத்திய அரசின் பிரதிநியாகச் செயல்பட்டுவந்த என்.என். வோரா அமர்த்தப்பட்டார்.
போராட்டத்தின் நீட்சியும் அதையடுத்து எழுந்த கோரிக்கைகளும் மாநிலம் முழுவதும் எழுந்துவிட்ட வன்முறை அலையும் உடனடி சுமுக நடவடிக் கைகளுக்கான அவசியத்தை உருவாக்கியிருந்தன. அதைக்கருத்தில் கொண்டு மாநில முதல்வர் குலாம்நபி ஆசாத், ஆளுநர் என்.என்.வோராவை இரண்டு நாட்கள் தொடர்ந்து சந்தித்தார். இது, சிதறப்போகும் கூட்டணியைக் காப்பாற்றி, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்க, புது ஆளுநரான என்.என். வோரா, புதிய முயற்சிகளை மேற்கொள்ள வகைசெய்தது.

இதனிடையே, ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக், கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தைத் திரும்பப் பெறக்கூறி, ஆறாவது நாள் போராட்டத்தை ஜூன் 28 - ம் தேதி ஸ்ரீநகரில் நடத்தினார். அந்தப் போராட்டத்தைத் தடுத்த போலிஸ், அதில் கலந்து கொண்டவர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் சிக்கியவர்களை வளைத்தும் வதைத்தும் கலைக்க... போராட்டம் கலவரத்தை நோக்கிப் போக ஆரம்பித்தது.

கலவரத்தின் வீச்சு, அறிவிக்கப்படாமலேயே ஊரடங்குபோல ஆக்கிவிட்டது. சில இடங்களில் போலிஸ்காரர்கள் ஊர்வலத்தில் வந்தவர்களிடம் சிக்கிக் கொள்ள, ஊர்வலத்தினர் கலகக்காரர்களாகிப் போனார்கள். ரத்தம் ஒழுக ஒழுக போலிஸ்காரர்கள் அவர்களிடம் உதைபட்டார்கள். கும்பலிடம் சிக்கி உயிருக்குப் போராடிய போலிஸ்காரர் ஒருவரை, யாசின் மாலிக்கே ஓடிவந்து காப்பாற்ற வேண்டிய அளவுக்கு ஆகிப்போனது. இதையடுத்து, துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தின் போது, 50 க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

அதில் படுகாயமடைந்த இம்தியாஸ் அஹமத் ஹாரூன் எனும் அப்பாவி நபர், அன்று மாலை இறந்துபோக, அந்த மருத்துவமனையை நோக்கி, திடீர் ஊர்வலங்கள் கிளம்பின. மறுநாள் ஞாயிறு மதியம் வரை, ஸ்ரீநகர் முழுவதும் பதட்டம் நிறையவே இருந்தது. அன்றே ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் மீர்வெய்ஜ் பிரிவு 'ஸ்ரீநகர் சலோ'வாகப் புறப்பட... பதட்டத்தின் மடங்கு பன்மடங்காக அதிகரித்தது.
சம்பவங்களை ஓநாயின் குயுக்தியுடனும் நரியின் தந்திரத்துடனும் கவனித்து வந்த பாரதீய ஜனதா கட்சி, கட்சியின் துணைத் தலைவரும் இஸ்லாமியருமான முக்தார் அப்பாஸ் நக்வியை வைத்தே 'பிரிவினைவாதிகள் மற்றும் தேசிய எதிர்ப்பாளர்களிடமிருந்து நாட்டின் இறையாண்மையைக் காக்கவும், ஸ்ரீஅமர்நாத் கோவில் வாரியம் தன்னாட்சியுடன் செயல்படவும் மத்தியஅரசு போதுமான ராணுவத்தை ஜம்மு - காஷ்மீருக்கு அனுப்பி வைக்க வேண் டும்' என அறிக்கை விட வைத்தது.

ஏற்கனவே இருந்த பதற்றத்துடன் புதிதாய் இதுவும் சேர்ந்து கொள்ள, இந்தப் பதட்டத்தைத் தணிக்க, ஆளுநர் என்.என். வோரா புதிய யுக்தியைக் கையாள்வதாகக் நினைத்து... அதாவது, 'பனி லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, அனைத்து விதமான பாதுகாப்பையும் வசதிகளையும் மாநில அரசே செய்து கொடுத்து விடுவதாக ஒப்புக்கொண்டுள்ளதால், கோவில் நிர்வாகத்திற்கு இடம் தேவையில்லை' என்று ஒருகடிதத்தை, முதல்வர் குலாம் நபி ஆசாத்துக்கு அனுப்பி வைத்தார்.

ஆட்சியைக் காப்பாற்ற, பேசிவைத்துக் கொண்டதுபோல நடத்தப்பட்ட இந்த நாடகத்தில், 'கோவில் வாரியத் தலைவரே இடம் வேண்டாம்' என்று சொல் லிவிட்டார் எனும் அடிப்படையில், ஒதுக்கப்பட்ட இடத்துக்கான உத்தரவை, மாநில அரசு ரத்து செய்துவிட்டது.

இதனிடையே கூட்டணி அரசுக்கு மக்கள் ஜனநாயகக் கட்சி, தந்து வந்த ஆதரவை முற்றிலும் விலக்கிக்கொண்டது. இதைத்தொடாந்து ஆளுநர் என்.என்.வோரா, முதல்வர் குலாம் நபி ஆசாத்தை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தச்சொல்லி ஜூலை 7 - ம் தேதியைக் குறித்துக் கெடு கொடுத்தது தான், நிஜமான அரசியல் திருப்பம்!

நிலத்தைத் திரும்பப் பெறக்கோரி துவக்கப்பட்ட போராட்டமும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவிலிருந்து துண்டாட வேண்டும் என்று எழுந்த கிளர்ச்சியும் கட்டுக்குள் வந்துவிட்டது என ஆளும்வர்க்கம் ஆசுவாசத்தில் திளைக்க... ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் வித்தை தெரிந்த மதவாத அமைப்புகளுக்கு இது, வலியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது போலாகி விட்டது. இப்போது, மதவாத இந்துத்துவா அமைப்புகளின் முறை!
கோவில் வாரியத்துக்கு வழங்கப்பட்ட நிலத்துக்கான உத்தரவை ரத்து செய்ததைக் கண்டித்து, நாடு தழுவிய போராட்டத்துக்கு பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட மதச்சார்பு அமைப்புகளும் அதன் துணைக்கோள்களும் அறிவிப்பு செய்துவிட்டன. ஒரு சம்பவத்துக்கான இரண்டாம் கட்டப் போராட்டமாக, 'ஜம்மு - காஷ்மீரை குஜராத் ஆக்கிவிடலாம்' எனும் நினைப்புடன் நாக்கில் எச்சில் நீர் ஒழுக விடுக்கப்பட்டக் காவி அழைப்பில், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவே செய்தது.

ஜூலை 3. வியாழனன்று நடந்த மதவாத அமைப்புகளின் பந்தின்போது, ஜம்முவில் அறுபத்தைந்து பேர் காயமடைந்தனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடங்களில், வன்முறையாளர்கள் நடத்திய கல்வீச்சில் பல போலிஸ்காரர்களுக்கும் காயம். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நுழைவாயில் என்றழைக்கப்படும் காதுவா மாவட்டத்தில், கலவரத்தின் நிலை உச்சமாகவே இருந்தது. கலவரக்காரர்கள் அரசு அலுவலகங்கள், அரசு வாகனங்கள் என்று தேடித்தேடித் தீ வைத்துக் கொளுத்தினார்கள். எல்லைப் புறத்திலுள்ள பஞ்சாப் - மதுப்பூர் பகுதியில் சுங்கச்சாவடி, போலிஸ் புறக்காவல் நிலை யம் வன்முறையாளர்களின் தீக்கு இரையானது. ஜம்மு - காஷ்மீர் தரைவழிப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முற்றிலுமாய்த் துண்டிக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலிஸ்காரர் ஒருவரை செருப்பைக் காட்டி மிரட்டிய சம்பவமும் நடக் கவே செய்தது.

காவி அழைப்பின் நீட்சி, மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உயிர்ப் பலியாக வடிவெடுத்தது. அங்கே நான்கு உயிர்கள் பலியானதைப் பற்றிக் கவலைப்படாத பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கார், 'ஜம்மு - காஷ்மீரின் பெரும்பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துவிட்டது. சீனா ஒரு பகுதியை விழுங்கிவிட்டது. இந்நிலையில் கோவிலுக்கு நூறு ஏக்கர் நிலம் கொடுப்பதில் என்ன பிரச்சனை?' என்று எரியும் பிரச்சினையில் எண்ணெய் ஊற்றித் தூண்டிவிட்டார்.
அக்கட்சியின் மத்திய அலுவலக வாசலில், '100 ஏக்கர் நிலத்தை 100 கோடி இந்துக்களான நாங்கள் பிச்சையாகக் கேட்கவில்லை. சிவ பக்தர்கள் அவமதிக்கப்படுவதை பாரதீய ஜனதா கட்சி பொறுத்துக் கொள்ளாது' என்று ராமரிலிருந்து சிவனுக்குத் தாவி, வன்முறைக்கு உரம்சேர்க்கும் விதமாக எழுதி வைக்கப்பட்டிருந்தது.

பல மாநிலங்களில் கண்டுகொள்ளப்படாத பாரதீய ஜனதா கட்சியின் பந்த் அழைப்பு, மகாராஷ்டிரா மாநிலத்தில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள ஆதரவாளர்களால் கைக் கொள்ளப்பட்டது. அவர்கள் அரசுக்குச் சொந்தமான அருங்காட்சியகத்தை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர். அங்கிருந்த பல்வேறு அரியக் கலைப் பொக்கிஷங்கள் சுக்குநூறாகிப் போயின. மாநிலத்தின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். தெற்கு மும்பைப் பகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் கோபிநாத் முண்டே நேரடியாகவே கலவரத்தில் ஈடுபட்டுக் கைதானார்.

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த அழகிய இளம்பெண் ஒருவர், துப்பாக்கியுடன் போராட்டத்தில் கலந்துகொள்ள பயிற்சி எடுத்துக் கொண்டது, போராட்டத்தின் தீவிரவாதத்தை நாட்டுக்கு உணர்த்தியதாகவும் எடுத்துக் கொள்ளலாம். பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட காவி அழைப்புகளின் உள்நோக் கத்தின் தீவிரத்தையும் புரிந்துகொள்ளலாம்.

ஜூலை 7 - ம் தேதி வரை ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் கலவரங்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன. 'பிரிவினைவாதிகள் மற்றும் தேசிய எதிர்ப்பாளர்களிடமிருந்து நாட்டின் இறையாண்மையைக் காக்கவும், ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியம் தன்னாட்சியுடன் செயல்படவும் மத்திய அரசு போதுமான துணை ராணுவத்தை ஜம்மு - காஷ்மீருக்கு அனுப்பி வைக்கவேண்டும்' என அறிக்கைவிட்ட பாரதீய ஜனதா கட்சியே, இந்தக் கலவரத்தை முன்னின்று நடத்திவைத்ததுதான் சிறப்பு!

மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றாலும், ஆட்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்ட குலாம் நபி ஆசாத், 'ஆட்சி கவிழாது' என்று கூறிவந்தார். ஆனால் 22 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் அந்தக்கட்சி எப்படி 89 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் நம்பிக்கை பெறமுடியும் எனும் ஆச்சர்யத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டே இருந்தார் என்பது மட்டும் உண்மை. அதை மத்திய அமைச்சரும் ஜம்மு - காஷ்மீர் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளாருமான சைபுதீன் ஜோஸ் வேறு ஆமோதித்துக் கொண்டே இருந்தார். ஏதேனும் அற்புதங் கள் நிகழ்ந்துவிடுமோ எனும் எதிர்பார்ப்பில், நாடு விழிகளை விரியவைத்துக் காத்திருந்த அதிசயமும் நடந்தது.
ஜம்மு - காஷ்மீரின் ஆளும் கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸுக்கு 22 இடங்களும் அதற்கு ஆதரவு தந்துவரும் சுயேட்சைகள் 15 - ம் சேர்ந்து, 37 இடங்களே இருந்தன. இதற்கடுத்து, எதிர்க்கட்சியாக இருந்துவந்த தேசிய மாநாட்டுக் கட்சி 24 உறுப்பினர்களை வைத்திருந்தது. அடுத்த இடத்தில்20 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக, மக்கள் ஜனநாயகக் கட்சி இருந்தது. 89 உறுப்பினர்களைக் கொண்டக் கொண்ட சட்டசபையில், அவை போக மற்றவை உதிரிகள்!

மற்ற மாநிலங்களைப்போல தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் இல்லை. இங்கே ஆறு ஆண்டு காலம் . இது, அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து 370 - வது விதியின்படி கிடைத்து வருகிறது. தனிப்பெரும்கட்சி எனும் அளவில் தேசிய மாநாட்டுக் கட்சியே, குறைந்த வித்தியாசத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றியக் கட்சியாகவும் இருந்துவந்தது. ஆனால் அந்தக் கட்சி ஆட்சியமைக்கும் உரிமையைக் கோரவில்லை.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் முப்தி முகம்மது ஸயீதுக்கு மாநிலத்தின் முதலமைச்சராக ஆகவேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்துவந்தது. தேர்தலில் எதிர் எதிராய்ப் போட்டியிட்டு ஜெயித்த காங்கிரஸ் கட்சியுடன் முப்தி முகம்மது ஸயீது, ஒரு உடன்பாட்டுக்கு வந்தார். அந்த உடன்பாட்டின்படி, முதல் மூன்றாண்டு காலம் மக்கள் ஜனநாயகக் கட்சி மாநிலத்தை ஆட்சிசெய்து கொள்வது. அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆட்சிசெய்து கொள்வது. இதனடிப்படையில், முன்னெப்போதும் இல்லாத சரித்திரமாக இரண்டு முக்கியக் கட்சிகளின் கூட்டணி அரசு 2002 - ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஆட்சிசெய்யத் துவங்கியது. இதன்மூலம், மாநில முதல்வராகும் தனது நிறைவேறாதக் கனவை, முப்தி முகம்மது ஸயீது நனவாக்கிக் கொண்டார்.

மூன்றாண்டு கால ஆட்சியில் மாநிலம் என்ன சுபிட்சம் கண்டது எனும் கேள்வியை மறந்துவிட்டு, நிகழ்காலத்தைப் பார்த்தால்... உடன்படிக்கையின்படி, அடுத்த மூன்றாண்டு காலத்தை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். நாற்காலியை விட்டுக்கொடுக்க முப்தி முகம்மது ஸயீதின் ஆட்சி சுகம், இடம் தரவில்லை என்பதே உண்மை. உடன்படிக்கையின் நல்லெண்ணத்துக்கு அப்போதே வேட்டுவைக்கவும் அவர் முயன்றுவந்தார். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்களும் 'லொள்ளு பிடித்த மாநிலத்தை' அவரே ஆண்டு கொள்ளட்டும் என்று விட்டுவிடும் எண்ணத்துக்கு வந்துவிட்டார்கள்.

ஆனால் ஜம்மு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்., மேலிடத்தில் எண்ணங்களுக்கு ஒத்துப் போகவில்லை. இதையடுத்தே குலாம் நபி ஆசாத், முதல் அமைச்சராகும் வாய்ப்புக்கு உள்ளானார்.

பரந்துவிரிந்த இந்தியத் துணைக்கண்டத்தில், இரண்டு தலைநகரங்களைக் கொண்டிருக்கும் மாநிலம் என்றால் அது, ஜம்மு - காஷ்மீர் மட்டும் தான். ஜம்மு - காஷ்மீர் பகுதியை ஆண்டு வந்த டோக்ரா வம்சாவழியினர் 1880 - களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கேட்டுக்கொண்டதன் பேரில், கோடைக்காலத் தலைநகரமாக ஸ்ரீநகரையும் குளிர்காலத் தலைநகரமாக ஜம்முவையும் வைத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. இந்த ஏற்பாடு இன்று வரைத் தொடர்கிறது. அதுமட்டுமின்றி, இவ்விரு தலைநகர்களும் எந்தவொரு விஷயத்திலும் இருவேறு கருத்துகளைக் கொண்ட சக்தி மையங்களாகவும் இருந்து வருகின்றன. பன்னெடுங்காலமாகவே இந்தநிலை நீடித்து வருவதால், இரு மையங்களிலும் வகுப்புவாதத் தன்மை மிகுந்து இரு எதிரெதிர் பிரிவுகளாகப் பிளவுபட்டுக்கொள்ளும் மனோநிலையும் கருத்துமோதல்களும் தொடரவே செய்கின்றன.
அதன் நீட்சியாக காங்கிரஸ் கட்சி, ஜம்முவில் அதிக இடங்களைக் கைப்பற்ற முடிந்தது. மக்கள் ஜனநாயகக் கட்சி, காஷ்மீரின் தெற்குப்பகுதியில் மட்டுமே இடங்களைக் கைப்பற்ற முடிந்தது. மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஜம்முவில் காலூன்ற வேண்டும்... மாநிலம் முழுவதும் தனது கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கமும் இருந்தது. ஆனால் அது நினைத்தது போல் நடக்கவில்லை. 2002 - தேர்தலில் அது காஷ்மிரில் 14.64 சதவீத ஓட்டுக்களையேப் பெற்றது. மாநிலம் முழுவதும் அதன் ஓட்டு சதவீதம், 9.28 தான்! ஆனால் எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக்கட்சி 28.28 சதவீத ஓட்டுகளுடன் 24 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. தேசிய மாநாட்டுக்கட்சியின் ஓட்டுவிகித்தை உடைக்க, அதுசெய்த தந்திரங்கள் எதுவும் பலன் எதையும் தரவில்லை.

ஸ்ரீஅமர்நாத் கோவில் வாரியத்துக்கு நிலம் ஒதுக்கிய விஷயத்தில் கையெழுத்துப் போட்டுவிட்ட, பின்னர் ஜகா வாங்கியதன் பின்னணியில், முதல் மூன்று ஆண்டுகள் முதலமைச்சராகவும் அடுத்த 23 மாதங்கள் கூட்டணி ஆட்சியாளராகவும் இடம் பெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு, அரசியல் உள்நோக்கம் இருப்பது வெட்ட வெளிச்சம்!

ஸ்ரீஅமர்நாத் கோவில் வாரியத்துக்கு, தற்போது நிலம் வழங்கப்பட்ட அதே பால்டால் பகுதியில் ஏற்கனவே 5 நிரந்தர தங்குமிடங்கள் உள்ளன. இந்தத் தங்குமிடங்களில் முதலாவதாகக் கட்டப்பட்டக் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டியது, மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஷேக் முகம்மது அப்துல்லா. அதைத் தொடந்து பரூக் அப்துல்லா காலத்தில் நான்கு கட்டுமானங்கள் உருவாக்கப் பட்டன. இதனால், தேசிய மாநாட்டுக் கட்சி இந்த விஷயத்தில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாதுபோல நடந்துகொண்டாலும், அங்கு புதிய கட்டுமானங்கள் எழுந்தால், சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மட்டும் சொல்லி அடக்கி வாசித்தது.

இந்தப் பிரச்சனையை மக்கள் ஜனநாயகக் கட்சி, சமயோசிதமாகக் கையில் எடுத்துக் கொண்டு தேசிய மாநாட்டுக் கட்சியை சந்தடி சாக்கில் சாத்தி வருகிறது. இதற்கானப் பின்னணியை ஆராய்ந்தால், ஜம்மு பகுதியில் ஆழமாக வேறூன்றியிருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சியைப் போல , நம்மால் அந்தப் பகுதியில் காலூன்றி எதுவும் செய்ய முடியவில்லையே எனும் கொம்புத்தேன் ஆதங்கம் அதில் தொக்கிக் கிடக்கும்!

தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஓட்டுவங்கியாகத் திகழும் ஜம்மு பகுதியில்தான், தன்னாட்சி கோரும் பிரிவினைவாத அமைப்புகள் எல்லாமே தழைத்தோங்கி இருக்கின்றன. இந்த அமைப்புகள் முப்தி முகம்மது ஸயீதின் அரசியல் நடவடிக்கைகளை சிறிதும் விரும்பாதவை. அவர் உயிருக்கு குறி வைத்தவை. முதல் அமைச்சராக இருந்தபோது நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் முப்தி முகம்மது ஸயீது, அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி வந்திருக்கிறார்.
வரும் அக்டோபரில்/ நவம்பரில் மாநிலத்துக்கான பொதுத்தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் ஓட்டுக்களைப் பொறுக்கும் ஆயத்தத்துக்கு தயாராக ஏதாவது ஒருகாரணம் வேண்டும் அல்லவா? அதைத்தான், மாநிலத்தின் முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்றுமே நில விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட, யாரும் யாருடனும் சேரமுடியாத அளவில் விழி பிதுங்கித்தான் நிற்கின்றன.

அதேவேளையில், அவலை நினைத்து உரலை இடித்தக் கதையாக, மதவாத அமைப்பின் முக்கிய முகமான பாரதீய ஜனதா கட்சி, ஒரு மாநிலத்தின் நில விவகாரத்தை வைத்து, நாடெங்கும் பிரச்சாரம் செய்ய ஏதுவாக வழிவகையும் செய்து கொடுத்திருக்கின்றன.

இதுதான் பள்ளத்தாக்கு அரசியல்!

ஜூலை 7. 'ஆட்சி கவிழாது' என்று கூறிவந்த குலாம் நபி ஆசாத், நம்பிக்கைத் திர்மானத்தின் மீது உணர்ச்சி பொங்கப் பேசிவிட்டு, சபாநாயகரிடம் நம்பிக்கைத் தீர்மானக் கோரிக்கையை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதி வேண்டியதுடன் அவர் அடி சறுக்கிப் போனார்.

பியூட்டிபுல் காஷ்மீரும்...வொண்டர்புல் காஷ்மீரும்...

உயர்ந்த மலைகள், அதன் உச்சியில் பனிச்சிகரங்கள், 'சட்'டென்று சரிந்து விழும் பள்ளத்தாக்குகள், அதனிடையே ஓடும் ஜீவ ஆறுகள், வழிநெடுகிலும் பசுமை என்று கி.மு.3000 ஆண்டுகளிலிருந்தே காஷ்மீர்ப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் மண்டிக் கடக்கின்றன.

இயற்கை மீது ஆர்வமும் மோகமும் கொண்டவர்களுக்கும், காஷ்மீரின் அழகைப்பற்றித் தெரிந்தவர்களுக்கும் அது ஒருகனவுப் பிரதேசமாகவும், வாழ்வில் ஒருமுறையாவது போய்வரவேண்டும் எனும் வேட்கையைத் தருவதாகவுமே இருந்து வந்திருக்கிறது.

அதுபோல காலம் காலமாகவே அது, சிறிதும் பெரிதுமான சச்சரவுகளையும் கொண்ட பிரதேசமாகவே அது, இருந்து வருகிறது.
கி.மு. 250- ல் மாமன்னர் அசோகர், தற்போதைய தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து மூன்று மைல் தொலைவிலிருக்கும் ஸ்ரீநகரியை தலைநகராக நிர்மாணித்தருக்கிறார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் பல மன்னர்கள் காஷ்மீரில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்திருக்கிறார்கள்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மன்னர் லலிதாதித்யா என்பவர்,சிறப்பாக ஆட்சிசெய்ததாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

12 - ம் நூற்றாண்டின் மத்தியில் முஸ்லிம்கள், காஷ்மீர் மீது தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள். அப்போதைய பதிவுகள் எல்லாமே பெரும்பான்மையாக இருந்த முஸ்லிம்களும் இந்துக்களும் நல்லிணக்கத்தோடும் நட்போடும் இருந்தார்கள் என்றே காணப்படுகிறது. காஷ்மீர் அரசியல் சரித்திரத்தின் மிக முக்கிய நபராக முஸ்லிம் மன்னர் மீர் ஷா குறிப்பிடப்படுகிறார். அவரது ஆட்சிக் காலத்தில் பள்ளத்தாக்கு அமைதிப் பிரதேசமாகவும் நேர் மையான நிர்வாகம் கொண்டதாகவும் இருந்து வந்துள்ளது.

மீர் ஷாவின் வாரிசுகள் திறமையாக ஆட்சி செலுத்தாததால், காஷ்மீரில் 225 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து மன்னர்களின் ஆட்சி அரியணையேறியது.

ஆனால் அது நீண்ட காலம் நிலைக்கவில்லை. வெறுமனே ஆண்டுகளில் மொகலாய மாமன்னர் அக்பரால் காஷ்மீர் மீண்டும் கைப்பற்றப்பட்டது. நீண் டு பரந்த தேசத்தை மாமன்னர் அக்பர் ஆட்சி செய்தாலும் அவருக்குப் பிடித்தமான பகுதியாக காஷ்மீர் இருந்து வந்திருக்கிறது. மூன்று முறை காஷ்மீீ ருக்கு பயணம் மேற்க்கொண்ட அக்பர், தன்னுடன் பெரிய எண்ணிக்கையில் படிப்பாளிகள், அறிஞர்கள், ராணுவ அதிகாரிகள், ராஜா தோடர் மால் போன்ற அமைச்சர்கள் ஆகியோருடன் வந்து புணரமைப்புப் பணிகளைச் செய்துவிட்டுச் சென்றதால், நாடு முழுவதும் காஷ்மீரின் பெயர் பரவியது. காஷ்மீரின் அழகை ரசிக்கவென்று பார்வையாளர்கள் வரத்துவங்கியது, அக்பரின் வரவுக்குப் பின்னால் தான்!

அதேவேளையில் மன்னர் ஜஹாங்கீர் காலத்தில், பார்வையாளர்களின் வருகை ஆயிரக்கணக்கில் உயர்ந்தது. அவரே பெரும் கூட்டத்துடன் பதின் மூன்று முறை வந்து சென்றுள்ளார். காஷ்மீரின் மலைகளும் சினார் மரங்களுக்கிடையே கம்பீரமாக ஓடும் ஓடைகளும், அழகுமிகு ஏரியும் தன்னைக் கவர்ந்ததாகக் குறிப்பிடும் மொகலாயச் சக்கரவர்த்தி ஜஹாங்கீர். தனது கைகளாலேயே தால் ஏரிக்கரையில் ஷாலிமார் தோட்டத்தையும் நிஷாத் தோட் டத்தையும் உருவாக்கினார். அவரது பெயரை காஷ்மீர் இன்னும் அழகுடன் சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் வேறு எந்த மன்னருக்கும் கிடைக்காதச் சிறப்பு ஜஹாங்கீருக்கு மட்டுமே உண்டு. அந்த அளவுக்கு அவர் காஷ்மீரை நேசித்தார் என்பது வரலாற்றுப் பதிவு.
மனைவியின் நினைவாக தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹான், அதற்கு முன்பே எண்ணற்ற அறிஞர் பெருமக்கள் புடைசூழ பலமுறை காஷமீர் பயணம் மேற்கொண்டு, அம்மாநிலத்தைச் சிறப்பித்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் மன நிம்மதி வேண்டியும், உடல் ஆரோக்கியம் பேணவும், ஆன்மீக் தொழுதலுக்கும் உரிய இடமாக காஷ்மீர் விளங்கியிருக்கிறது. ஷாஜஹான், காஷ்மீரில் சாஷ்மாஷி தோட்டமும், ஷாலிமார் தோட்டத்தின் ஒரு பகுதியையும் நிர்மாணித்து மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்.

சரித்திர ஆசிரியர்களால் இகழப்பட்ட அவுரங்கசீப்பும் கூட, காஷ்மீர் அழகில் மெய்மறந்தவர் தான்! அவருடன் பயணம் மேற்கொண்ட பிரஞ்சுப் பயணி பிரான்சிஸ் பெர்னியர், காஷ்மீர் மக்களை வெகுவாகப் புகழ்கிறார். "காஷ்மீரிகள் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிக்கிறார்கள். கவிதையிலும் விஞ்ஞானத்திலும் அவர்கள் பெர்ஷியர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல! அவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும் தொழில் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் தொழில் நுணுக்கம், பல்லக்குகளிலும், படுக்கை விரிப்புகளிலும், மைக்கூடுகளிலும், கோடாரிகளிலும், சிறு கரண்டிகளிலும் கூட தெரிகிறது. அவர்களின் கைப்பட்ட சால்வைகள் உள்ளிட்ட எல்லாப் பொருட்களிலுமே அழகு மிளிர்கிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அந்தப் பயன்பாடு இருக்கிறது"

நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட காஷ்மீர், 20 நூற்றாண்டின் மத்தியில் தான் குழப்பத்துக்கு உள்ளாகிறது. இந்தியா முழுவதும் பற்றியெறிந்த சுதந்திரத் தாக்கம், அங்கே பெரிய அளவில் பாதிப்பையும் தரவில்லை. மன்னராட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாடு அங்கும் நிலைத்திருந்தது.

1931 - ல் காஷ்மீர் மிகப்பெரிய வன்முறைக் கலவரத்தை சந்தித்தது. அக்கலவரத்தின் பின்னணியில் ஷேக் அப்துல்லாவும் அவரது முஸ்லிம் மாநாட் டுக்கட்சியும் இருந்து வந்ததாக, வரலாறு பதிவு செய்துள்ளது. பின்னர் அக்கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சியாக புதுப்பெயர் சூட்டிக்கொண்டது.

1947 - ல் இந்திய - பாகிஸ்தான் ( பாகிஸ்தான் - இந்திய ? ) ப் பிரிவினையின் போது, பிற மாநிலங்களைப் போல இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ காஷ்மீர் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. இந்திய - பாகிஸ்தான் ( பாகிஸ்தான் - இந்திய ?) பிரிவினைக்குப் பின் சரியாக 67 - ம் நாள், காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் தனது முதல் ஊடுருவலை நடத்தியது. அதன் பின்பே, காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து சிறப்பு அந்தஸ்துடன் ஒரு மாநிலமாக இயங்கிவருகிறது.

தற்போது பாகிஸ்தான் ஊடுருவல் நடத்தி ஆக்கிரமிப்பு செய்திருக்கும் ஆஜாத் காஷ்மீர் பகுதி முஸாபாராபாத்தைத் தலைநகராகக் கொண்டு, 8 மாவட்டங்களுடன் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன், தனியரசாக செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ 14,000 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அப்பிரதேசத்தில், ஒருகோடி மக்கள் வரை வசிக்கின்றனர்.

1990 - க்குப் பிறகு, ஜம்மு- காஷ்மீரில் சடந்துவரும் தன்னாட்சி அமைப்புகளின் போராட்டம், பாகிஸ்தான், சீனாவின் ஊடுருவல் ஆகிய பிரச்சனை களால் காஷ்மீருக்கு வரும்பயணிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துவிட்டது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுடன் நடந்துவரும் நல்லெண்ண அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளின் மூலம், ஒப்பந்த அடிப்படையில்(?) அமைதி நிலவி வருகிறது. இந்நிலையில் ஸ்ரீஅமர்நாத் கோவில் வாரியத்துக்கு நிலம் வழங்கியது தொடர்பாக எழுந்தப் பிரச்சனையும் அதைத் தொடர்ந்து நடந்த ஆட்சிக் கலைப்பும், மற்றொரு வில் லங்கத்துக்கான விஷயமாகவே இருக்கிறது.

'காஷ்மீர்... பியூட்டிபில் காஷ்மீர்..., காஷ்மீர்... வொண்டர்புல் காஷ்மீர்...,' என்று தமிழ்த் திரைப் படப்பாடலொன்றில் ஆதுரமானக் குரலில் ஆராதிக்கப் பட்டது போல, அந்தப்பகுதி இன்னும் அழகுடன் அதிசயமாக இருந்தாலும், அம்மாநில மக்களிடம் உற்சாகம் எதுவும் காணோம். அவர்கள் பள்ளத்தாக் கின் அரசியலில் துவண்டு போயிருக்கிறார்கள்.
பனிலிங்க தரிசனம்மாநிலம் முழுவதும் போராட்டம், வன்முறை, கலவரம் என்று தீப்பிடித்து எரிந்தபோதும் ஸ்ரீஅமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கச் செல்லும் பயணிகள் மேலே செல்ல தொடர்ந்து அனுமதிக்கப்பட்டனர். மழைக் காரணமாக மட்டுமே இரு தினங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஜம்முவிலிருந்து 450 கி.மி. தொலைவிலும், ஸ்ரீநகரிலிருந்து அனந்தநாக் மாவட்டம் பால்டாவிலிருந்து 12 கி.மி. தொலைவிலும் உள்ள பனிலிங்கக் கோவிலுக்கு இவ்விரு பாதை களின் வழியே நாளொன்றுக்கு 25,000 பயணிகள் சென்றுள்ளனர்.

ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் இயற்கையாகவே லிங்கவடிவில் உருவாகும் பனிக்குவியல், மற்ற கால கட்டத்தில் வேறுவடிவத் திட்டாக மாறிவிடுகிறது. பெளர்ணமி நாள் இரவின் போது தரிசனம் செய்வது புண்ணியமாகக் கருதப்படுகிறது.

பனிலிங்கம் குறித்த வேறுவிதமான சர்ச்சைகள், அவ்வப்போது எழுவதும் அடங்குவதும் மகரஜோதி போன்று வாடிக்கையான ஒன்றுதான்!

சமீபத்திய நிகழ்வின் போது, ஸ்ரீஅமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கச் சென்ற பக்தர்களுக்கு, வழிநெடுகிலும் முஸ்லிம் மக்கள் தங்க இடமும், உண்ண உணவும் கொடுத்து உதவி செய்துள்ளனர். பிரச்சனை என்பது, இந்து - முஸ்லிம் மக்களிடையே இல்லை. அதை மூலதனமாக்கிச் செயல்படும் அரசியல் கட்சிகளிடம் தான் உள்ளது!
நன்றி: புதிய காற்று