Sunday, October 30, 2011

திருப்பரங்குன்றம் சமணர் படுகை


எஸ். அர்ஷியா

GREEN WALK -7 பசுமை நடை 7க்கான களமாக திருப்பரங்குன்றம் மலையின் வடமேற்கிலிருக்கும் சமணர் படுகையையும் மலையின் தென்புறத்தே இருக்கும் குகைக்கோவிலையும் நண்பர் அ.முத்துக்கிருஷ்ணன் அறிவித்திருந்தார்.
அக்டோபர் 30 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மதுரை வசந்த நகர், ஆண்டாள் புரம், பைபாஸ் ரோடு, சுப்பிரமணிய புரம் போலிஸ் ஸ்டேஷன், ஜெயம் தியேட்டர் வாசல் ஆகிய இடங்கள் ஒன்றிணையும் ரவுண்டாணா அருகில் கூடுவதாகச் சொல்லப் பட்டிருந்தது.
பின்னிரவில் தொடங்கிய மழை சற்றே குறைந்து தூறலாக விழுந்துகொண்டே இருந்தது. எப்போதுமே கசகசப்பாக இருக்கும் மதுரை, அன்றைய தினம் தேவர் ஜெயந்தி என்பதால் வழக்கமான கசகசப்பு குறைந்து, விழாவுக்கான பரபரப்பு காலையிலேயே தெரிந்தது. வீட்டிலிருந்து கோரிப்பாளையம் தாண்டும் போது, காக்கிச்சட்டைகளாகத்தான் தெரிந்தார்கள். தூறல் மட்டுப்பட்டு சூரியன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். சாலைகளில் பலத்த அமைதியும் ஒருவித வெறிச்சோடலும் இருந்தது.
ஜெயம் தியேட்டருக்கு அருகே மூடிய நிறுவனமொன்றின் வாசலில் கவிஞர் பி.ஜி.சரவணன், பேராசிரியர் பெரியசாமி ராஜா உள்ளிட்ட நண்பர்கள் நிறையபேர் வந்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் புதிய முகங்கள். இளைஞர்கள். குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் அதிகமாக இருந்தார் கள். அவர்கள் முகத்தில் ஆர்வம் இருந்தது. அங்கிருந்து எப்போது கிளம்புவோம் என்ற ஆவலும் இருந்தது. கடந்தமுறை வந்த நண்பர்களில் பலர், இந்த முறை வாய்ப்பைத் தவறவிட்டவர்களானார்கள்.
என்றபோதும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், முத்துக்கிருஷ்ணன், பேராசிரியர் பெரியசாமி ராஜா, ஐதராபாத் சுந்தர்ராஜன், தக்ஷிணா மூர்த்தி, பி.ஜி.சரவணன், மல்லிகை புத்தக நிலையம் சுரேஷ், கட்டுரையாளர் அசோக், ஹலோ எப்எம் ஷாஜஹான், அவரது புத்திரர்கள், ஸ்ரீராம் ஜனக், கல்யாணி, பாரதி பாண்டியன், ஸ்ரீவித்யா, அண்ணாமலைப் பல்கலை வரலாற்றுத்துறை கண்ணன், மதுரைக் கல்லூரி பேராசிரியர் இரத்தினக் குமார், ஓவியர் மதுரை பாபு, நெல்லை மருத்துவக் கல்லூரி அதிகாரி இளங்கோ கண்ணன் என்று இதமான நண்பர்களின் கூட்டம் இருந்தது.
நகரெங்கும் ஊர்வலங்களாகப் பார்த்துப் பழக்கப்பட்டிருந்தபோதும், நாமே ஊர்வலம்போல் கிளம்பியது, ரசனையாகத்தான் இருந்தது. கார்களும், இரு சக்கர வாகனங்களுமாக நமது ஊர்வலம் தொடங்கியது. நகரின் பிற பகுதிகளிலிருந்து வந்த நண்பர்கள் மனைவி, மக்களுடன் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் முன்பாக நின்றிருந்தார்கள். விருதுநகரிலிருந்து பசுமை நடைக்காக வந்திருந்த நண்பர் வேல்முருகன், தனது சகா திருப்புவனம் பாலாவுடன் பேருந்து நிலையம் எதிரிலுள்ள தேநீர் கடையில் இருந்தார்.
மலையின் வடக்குப் பக்கம் ஊர்வலமாக நாம் போனபோது, ஊர்க்காரர்களுக்கு ஒரே ஆச்சரியம். "ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக எங்கே போகிறார்கள்?" என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள். "சினிமா சூட்டிங்கா?" என்று ஆவலில் பொங்கினார்கள்.
"சமணர் படுகையைப் பார்க்க!" என்று நம்மிடமிருந்து அவர்களுக்குக் கிடைத்த பதில், அவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. "அங்கே என்னாருக்கு?" என்று திரும்ப நம்மிடமே கேட்டார்கள். வசிக்கும் இடத்தின் அருமைகூட தெரியாதவர்களாகவே நாம் இருக்கிறோம்.
சமணர் படுைக்குச் செல்லும் பாதை, தார்ச்சாலையிலிருந்து இடது பக்கமாக இடுங்கியிருக்கும் குடியிருப்புக்கு ஒட்டிய ஒத்தையடிப் பாதையாக நீண் டது. கருவேல முள் மரங்கள், காட்டுச் செடிகள், பெயர்த் தெரியாதக் குத்துச் செடிகளுக்கு இடையில் எலுமிச்சம் புற்கள் நிறைந்திருந்தன. அவை ஒன்றுடன் ஒன்றாய் உரசும்போது எழுந்த எலுமிச்சம் வாசம் இதமாக இருந்தது.
மலைக்கு அருகிலிருந்து படுகைக்குச் செல்ல படிகள் கட்டப்பட்டிருக்கின்றன. மற்றபடி, வழுக்குப் பாறைகளில் படிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஏறுவது சாகசமாகத்தான் இருந்தது. குழந்தைகள் ஆர்வமாக ஏறினார்கள். ஐம்பது வயதைத் தொட்டவர்கள் சற்றே பம்மினார்கள். மலையேறும் சாகசத்துக்கு நண்பர்களே வாலண்டியர்களாக மாறி கைகொடுத்து, அழைத்துச் சென்றார்கள். ஆங்காங்கே வழுக்குப் பாறைகளுக்கு அருகில் பிடித்துக்கொண்டு மேலே ஏற கம்பிப்பிடி இருந்தது, சற்று ஆறுதல் தந்தது. மலை மீது, மக்கள் திரள் ஊர்ந்து செல்வது போலிருந்தது, கூடியிருந்தவர்கள் ஏறிச்சென்ற காட்சி.
திருப்பரங்குன்றம் மலையின் இடுப்பில் சமணர் படுகை இருக்கிறது. படுகைக்கு முன்னே குடைவுபோன்ற ஓரிடத்தில் சின்னதாய் ஒரு சுனை இருக் கிறது. நீர்நிறைந்து அந்த சுனை காணப்படுகிறது. வெளியே முன்னிரவு துவங்கிய மழையின் ஈரம் இருந்தாலும் உள்ளே கதகதப்பாக இருந்தது. தண்ணீரும் சற்று வெதுவெதுப்பாகத்தான் இருந்தது. இயற்கை நமக்கு அளித்த சீதனம் இது. இதைத்தான் நாம் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
மலையேறிய அத்தனைபேருமே படுகைகளில் அமர்ந்தும், படுத்தும் அதனுடன் தங்களை தகவமைத்துக் கொண்டது, முற்காலத்தின் தொடர்ச்சியாக உணர முடிந்தது. கூடியிருந்தவர்களின் முன்னிலையில் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், குகைத்தளம் குறித்து எடுத்துக் கூறினார். திருப்பரங் குன்றத்தில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டுவரை சமணம் இருந்துள்ளது. இங்கு கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் சமணப்பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. 'அந்துவன்' என்ற பெயர் இங்குள்ள கற்படுகைகளில் தமிழ் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது தொடங்கி இடத்தின் பெருமைகளை விளக்கிப் பேசினார்.
அங்கிருந்து கீழிறங்கும்போது, சூரியன் வெப்பக் கதிர்களை பூமியெங்கும் பரப்பியிருந்தான். வெயில்பட்டு திருப்பரங்குன்றம் கண்மாய் உருக்கி ஊற்றிய வெள்ளியாய் தகதகத்தது. தரைக்கு வந்து மலையை நிமிர்ந்து பார்த்தபோது, அது அமைதியாக இருந்தது.
அடுத்து மலையின் தென்புறமிருக்கும் குகைக் குடைவுக்குச் சென்றோம். அங்கே போனபோது கந்த சஷ்டி விழா நடந்து கொண்டிருந்தது. ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் உச்சஸ்தாதியில் பாடிக் கொண்டிருக்க, கூடியிருந்தவர்களில் சிலருக்கு சாமி வந்தது. ஆடினார்கள். நான் ஸ்டாப் ஆட்டம். சினிமாவின் ரம்யா கிருஷ்ணன் சாமிகளும் நமீதா சாமிகளும் தோற்றார்கள். ஒப்பனையில்லாத ஆட்டம்.
மலை, தொல்லியல் சாதனம். குடைவு, பாரம்பரியமான வரலாற்றுத் தளம். அங்கு மதமாச்சரியங்களுக்கு இடமில்லை. ஆனால் குடைவுக்கு முன்பிருந்த பரந்த வெளியில் ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. திருநகரில் ஒரு கட்டிடத்துக்கு காவலாளியாக இருக்கும் நபர் பூசாரியாகி, எல்லோருக்கும் விபூதி கொடுத்து காணிக்கை வாங்கிக் கொண்டிருந்தார். சத்தம் காதைப் பிளந்தது. பாரம்பரிய வரலாற்றுத் தளங்கள் மத விஷயங்களுக்கான தளங்களாக மாறுவது கண்முன்னே தெரிந்தது.
எங்களின் பயண கவனம் சிதறிப்போனது. குடைவை ஒட்டியிருக்கும் இடத்தில் நாங்கள் குழுமினோம். சிலைகளையும் குரங்குகளையும் வேடிக்கை பார்த்தோம். புகைப்படங்கள் எடுத்தோம். அங்கும் சிறு உரை இருந்தது.
பின்னர் காவல் தெய்வம் கோவில் அருகிருந்த வெளியில், காலைச் சிற்றுண்டி உண்டுவிட்டு கலைந்தோம்.
நேற்றுவரை இழந்தது இழந்ததாகவே போகட்டும். இனிமேலாவது, இருப்பதை இழந்துவிடாமல் பாதுகாப்போம். அதற்காக அனைவரும் ஒன்று கூடுவோம்.

2 comments:

  1. மிக அற்புதமான பகிர்வு. தாங்கள் இந்த முறை முத்துப்பட்டிக்கு வரவில்லையா? இம்முறை அம்மலையைக்காண நம்மோடு மழையும் வந்துவிட்டது அற்புதமான அனுபவமாக இருந்தது. சினிமா சூட்டிங்கா என நம் மக்கள் கேட்கக் காரணம் இது போன்ற மலைகளில் நிறைய படப்பிடிப்பு நடத்துகிறார்கள். அரிட்டாபட்டிக்கு பசுமைநடை சென்ற போது வழியில் ஒருத்தர் இன்னிக்கு சினிமா சூட்டிங்கான்னு கேட்ட போது வந்த ஒருவர் ஆமா இன்னிக்கு சூட்டிங் இருக்குன்னு கேலியாச் சொன்னார். அந்த ஊருக்கு போன பிறகு தான் தெரிந்தது அரவான் பட சூட்டிங் அந்த மலையில் நடந்த விசயம். அப்போதுதான் மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.
    ''நேற்றுவரை இழந்தது இழந்ததாகவே போகட்டும். இனிமேலாவது, இருப்பதை இழந்துவிடாமல் பாதுகாப்போம். அதற்காக அனைவரும் ஒன்று கூடுவோம்''
    அருமையான வரிகள். நன்றி.
    - சித்திரவீதிக்காரன்

    ReplyDelete
  2. பசுமை நடையின் பசுமையான நினைவுகள்

    ReplyDelete