Showing posts with label thinnai. Show all posts
Showing posts with label thinnai. Show all posts

Tuesday, September 6, 2011

மீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் - நூல் விமர்சனம்


எஸ்.அர்ஷியா

வாழ்வியல் போராட்டத்தைத் தாண்டி, அல்லாஹ், முகம்மத், கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத்,ஹஜ் இவை களில் ஈடுபடவே நேரம் இல்லாது போய் விட்ட இஸ்லாமிய சமூகத்துக்கு, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த நேரம் கிடைக்குமா என்பது, ஒருநாளின் இருபத்து நான்கு மணிநேரத்தை இரட்டிப்பாக்கினால் கூட முடியாது என்பது தான் நிஜம்!
அடித்தளத்தைத் தாண்டி மேலெழும்ப முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கும் அவர்களின் வாழ்வில், கஷ்டங்களின் போது அல்லாஹ் நினைவுக்கு வருவார். ஆசுவாசமான நேரங்களில், 'யா ரசூலே...' என்று முகம்மத் நினைக்கப் படுவார். மற்றவைகளுக்கு... பிறகு யோசிப்போம்.
ஆனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாக குமரி மாவட்டத்தில் இந்நிலை தலைகீழாகஇருக்கும் போல. எப்போதோ சொல்லப்பட்டதாக... அறிவிக்கப்பட்டிருக்கும் விஷயங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அவர்கள், மாற்றங்களுக்கோ...அது குறித்தான விவாதங்களுக்கோ எதிரானவர்களாகவே இருக்கிறார்கள்.
மாறிவரும் காலகட்டத்தில் எல்லாமே பரிசீலனைக்கு உட்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ளாத ... அல்லது மறுக்கும் அவர்கள், அது குறித்த பரிசீலனையில் ஈடுபடுபவர்களை தொட்டதற்கெல்லாம் குற்றம் சுமத்துவது. கூண்டுமுன் நிறுத்தி விசாரணை எனும்பெயரில் தங்கள் கீழா(மேதாவுக்கு எதிர்மறை) விலாசத்தைக் காட்டுவது. ஊர்விலக்கம் செய்வது என்பது வரை செல்லப் பொழுது போக்காகவே வைத்திருக்கிறார்கள். அதில் அடிக்கடி மாட்டிக் கொள்வது, நேரடித்தாக்குதல் நடத்தும் ஹெச்.ஜி.ரசூல்!
அதே வேளையில், எதையுமே நாசூக்காகச் சொல்லி, மாற்றங்களை பதிய வைப்பது அதே பகுதியைச் சேர்ந்த மீரான் மைதீனுக்கு கைவந்திருக்கிறது. ஏற்கனவே கவர்னர் பெத்தா, ரோசம்மா பீவி ஆகிய சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கும் அவருக்கு, 'சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் ' மூன்றாவது தொகுதி!
இஸ்லாத்தின் தொண்மங்களும் அது தொடர்பான விஷயங்களுமே மீரான் மைதீனின் கொல்லுப் பட்டறை. வனை பவனுக்கு ஏற்ப மண்பாண்டம் அழகுபெறுவதுபோல, மீரான் மைதீனின் பாடுபொருள் அழகழகாய் உருப்பெற்று வந்து விழுகிறது. தொகுதியில் பன்முகமாய் இடம் பெற்றிருக்கும் பதினோரு சிறுகதைகளும் இஸ்லாத்தின் உட்கூடுகளை உரசிச் செல்பவை. விலா எலும்புகளை விசாரணை செய்பவை!
'குப்பையாண்டி பிள்ளையின் சுவர்' எனும் சிறுகதையில், சுவரொட்டிகள் ஒட்டப்பெறும் ஒருசுவர், தன் கதையைச் சொல்வதாக வசியப்படுத்தி இருக்கிறார். தோவாளை அப்பாவும் சுவரும் பேசிக்கொள்ளும் அந்த சுப வைபவத்தைக் கேட்க ஒருகூட்டம் அவருடன் செல்கிறது. சுவர் தன்மீது, ஐம்பது ஆண்டுகளாய் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை காலக் கிரம வரிசையில் உரித்து, அப்போது இருந்த அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டைக் கிண்டலுடன் அவர்களிடம் சொல்கிறது. பகடியுடன் படைக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதைக்கு இந்திரா காந்தியிலிருந்து தொடங்கி இன்றைய விஜயகாந்த் வரையிலும் அரைபட்டிருக்கிறார்கள். காலமாற்றத்தாலும் அவர்களின் தேவைகளாலும் அரசியல் கூட்டணிகள் மாறியதை போஸ்டர்கள் உரிபடுவதுபோல அரசியல்வாதிகளின் தோல் உரிபடுவது சுவையான விஷயம்!
நுட்பமாக சொல்லப் பட்டிருக்கும்,'மாதுளம் மரத்தில் வாழும் தென்றலைக் கொல்லும் முயற்சிகள் தோற்கின்றன' கதையில், இருப்பதை விட்டுவிட்டு இல்லாததைத் தேடியலையும் இஸ்லாமியனின் மனப்போக்கை அங்கதத்துடன் பதிவு செய்திருக்கிறார். தேடியலையும் ஐவரில் எவருக்குமே என்ன தேடுகிறோம் என்பதே தெரியவில்லை என்பதை...'இது தெரியாமத் தான் ஒரு மாசமா பழபத்திரி சாப்பிட்டியாக்கும்...?' என்று கேட்டு, யோசனையை வேறு முடுக்கிவிடுகிறார்.
¨டைரிக்குறிப்புகள்' சிறுகதை, ஜித்தா நகரில் வேலைசெய்ய கூடிவசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் இரவுநேரப் பரிமாணத்தைப் பற்றியது. அவனவன் தன்னைப் பற்றிய பீத்தல் கதைகளைச் சொல்லும் போது, அறைவாசியான திருமணமான இப்றாகீமின் காளிதாஸ் ரகசியத்தை தான் அறிந்திருப்பதாகவும் அதனை வெளியே சொல்ல முடியாத அவதியை மறக்க சிரமப்படுவதாகவும் குறிப்பிட்டிருப்பதில் தேர்ந்த அரசியல் தென்படுகிறது.
இதுபோலவே ஒருபாடு கதைகள்...கலர் வேலைப்பாடுகளுடன் கூடிய டிசைன் வாய்கள்.. உள்ளிட்டக் கதைகள், அதனதன் அரசியலைப் பேசி, நம்மை சிறுகதைக் கட்டமைப்பின் அடுத்தத் தளத்திற்கு இட்டுச் செல்கின்றன. அவற்றிற்கு ஊடாக சமூகம் மறந்துவிட்ட வாழ்வின் நுணுக்கங்களை...வாழ்தலின் அர்த்தத்தை நிலைநிறுத்துவதில் முனைப்பாய் இருக்கிறார். முன்னைக் காலத்தில் சக்கைமரம்(பலா)வயதானவர்கள் தான் வைப்பார்கள்...கடுகு சிந்தினால் சண்டைவரும்...போன்ற விஷயங்களை கதையின் ஊடாக வார்த்தையாடலில் நினைவூட்டுகிறார்.
என்றாலும் ஊசிகாந்தம் உயர்ந்த மலைப்பிளவின் வழி, மத்தது உள்ளிட்ட சிறுகதைகள் புரிதலுக்கு அப்பாற்பட் டவையாக கட்டமைக்கப்பட்டிருப்பது நெருடுகிறது.எளிய சொல்லாடல்களிலிருந்து விலகி, ஒரு இறுக்கமான இருட் டறைக்குள் சென்றுவிட்டதுபோல பிரமை வருகிறது. அதுபோல அச்சு முறையும். கண்களைப் பதம் பார்க்கின்றன. முழுமைப்பெற்றது எதுவுமில்லை எனும்போது, இவற்றை பெரிதுபடுத்த ஒன்றுமில்லை!
அதைத் தாண்டி, இஸ்லாமிய சமூகத்தை மறுமதிப்பீடு செய்திருப்பதாகவே 'சித்திரம்காட்டி நகர்கிறது கடிகாரம்' நமக்கு உணர்த்துகிறது.
arshiyaas@rediffmail.com.
நன்றி : திண்ணை

நீளக்கூந்தல்காரியின் அழகானச் செருப்பு



எஸ். அர்ஷியா
சீயக்காயுடன் சேர்த்தரைக்கக் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெந்தயம், பூந்திக்கொட்டை, காய்ந்த எலுமிச்சம் பழத்தோலுடன் செம்பருத்தி, ரோஜாப் பூவிதழ்களையும் பார்வதியம்மா தனித்தனியாய் எடுத்து வைத்திருந்தாள்.
இதையெல்லாம் காயவைத்து, அவற்றை ஒன்றாகச் சேர்த்தரைத்து, அந்தத்தூளை வடித்தக் கஞ்சியில் பிசைந்து, தலையில் அரக்கித் தேய்த்துக் குளித்தால் தான், குளித்தது போல் இருக்கும் என்று சொல்லிக் கொள்வாள். அவளுக்கு நீளமானக் கூந்தல் இருந்தது.
காலையில், எங்கேயோ புருசனுடன் வெளியில் கிளம்பிய அந்தநேரத்திலும், மறக்காமல் இதையெல்லாம் எடுத்துவந்து கையில்கொடுத்து, "நல்லா வெயில்வந்ததும் காயவெச்சு எடுத்து வை!" என்றுவிட்டுப் போனாள்.
இப்போது, உச்சிவெயில் கொளுத்தியது.
உள்வேலையிலிருந்த மங்கா, காயவைப்பதற்காக அவற்றை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள். முன்வராண்டா சிமெண்ட்தரை பொசுக்கியது. கால்வைக்க முடியவில்லை.அந்த இடத்தில் தான் பொருட்களைக் காயவைக்கவேண்டுமென்பது, அவளுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை!
"உஸ்..உஸ்.."என்று பொறுத்துக் கொண்டு, விளக்குமாற்றால் கூட்டிப்பெருக்கி, வெற்றுத்தரையில் அந்தப்பொருட்களைப் பரப்பினாள்.
காலைத்தரையில்பாவி அந்தவேலையைச் செய்ய முடியவில்லை. பொருட்கள், பரவலாகத் தரையில்படும்படி நன்றாகப் பரப்ப வேண்டும்.
சூடு! கால்மாற்றி மாற்றி வைத்துப் பரப்பினாள். முடியவில்லை. அவளிடம் செருப்பு இல்லை.
இப்போது சூடு தாங்க முடியவில்லை!
எழுந்து நிழலுக்கு ஓடிவந்துவிட்டாள். நிழலிலும் பாதம் தகித்தது. உட்கார்ந்து வாயைக்குவித்து பாதங்களில் ஊதினாள். கால் சூடுமெள்ள ஆறியது.
சிலநிமிட ஆசுவாசத்திற்குப்பின், மிச்சப்பொருட்களை பரப்பிக் காயவைக்க கீழே இறங்கும்போது தான், பார்வதியம்மாவின் செருப்பு அவள் கண்ணில் பட்டது. கருப்புநிறப்பின்னணியில், தங்கநிற ஜரிகை வேலைப்பாடமைந்த அழகான செருப்பு. அந்த அம்மாவிடம் இரண்டு ஜோடி செருப்பு இருக்கிறது. ஒன்று மாற்றி ஒன்றை பயன்படுத்தும்!
சூட்டிலிருந்து தப்பிக்க, "அந்தச்செருப்பை கொஞ்சநேரம் காலில் மாட்டிக்கொண்டால் என்ன" என்று யோசித்தாள்.
மாட்டிக்கொள்ளலாம் தான்!
யாரேனும் பார்த்துவிட்டால்...?
வீட்டில் யாரும் இல்லை. வெளி இரும்புக்கேட்டையும் சாத்திப் பூட்டியிருந்தாள்.
பிறகென்ன?..
ஒரு ஆர்வத்துடன் அந்தச்செருப்பினுள் கால்களை நுழைத்தாள். அவள் காலுக்கு அளவெடுத்து செய்தது போலவே, அந்த ஜோடிச்செருப்பு இருந்தது. உள்ளூர பயமாக இருந்தாலும் செருப்புக்காலுடன் எட்டுஎடுத்து வைத்தபோது, இதற்கு முன்பு கண்டறியாத சுகம். பஞ்சுமெத்தை மீது நடப்பது போல, "மெத்துமெத்"தென்று இருந்தது.
இதுபோல செருப்பை அணிந்து கொண்டு நடப்பதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் போல! இப்போது கிடைத்திருப்பது வாய்ப்பு.
திருட்டுத்தனமான வாய்ப்பு? வீட்டிற்கு யாரேனும் வரும்வரைதான், இதைப் போட்டுக்கொள்ள முடியும்!
செருப்பை மாட்டிக்கொண்டு, பொருட்கள் பரவலாகத் தரையில்படும்படி நன்றாகப் பரப்பினாள். காலில் சூடு ஏறவே இல்லை. செருப்புக்காலுடன் இங்கும்அங்குமாய் நடைபோட்டாள்.
வாசலில் கார்வந்து நிற்கும் சத்தமும், அதைத் தொடர்ந்து ஹார்ன்சத்தமும் கேட்டது. மங்கா பரபரப்பானாள். குடுகுடுவென்று உள்ளே ஓடி, காலில் மாட்டியிருந்த செருப்பை, அது இருந்த இடத்தில் இருந்தது போலவே வைத்துவிட்டு, ஒன்றும் நடக்காதது போல வெளி இரும்பு கேட்டை திறந்து விட்டுவிட்டு, உள்ளே போய்விட்டாள்.
தன் நீளக்கூந்தலில் தேய்த்துக் குளிப்பதற்கான பொருட்கள், முன்வராண்டாவில் காய்வதைக் கண்ட பார்வதியம்மா, புன்சிரிப்புடன் அதைக் கடந்து போனாள். காலில் மாட்டியிருந்த செருப்பை, ஏற்கனவே இருக்கும் செருப்புக்குப் பக்கத்தில் கழற்றிப்போட்டாள்.
உள்ளேயிருந்த மங்காவுக்கு, இப்போது இருப்புக்கொள்ளவில்லை. தான் செருப்பைக் கழற்றிய அவசரத்தில், அதைத் துடைத்து, முன்பு இருந்தது போலவே சரியாக வைத்தோமா எனும் கவலை அவளை ஆக்கிரமித்தது.
arshiyaas@rediffmail.com
நன்றி : திண்ணை

கபரஸ்தான் கதவு!


எஸ். அர்ஷியா

ரை அங்குல கனத்தில், இரும்புக்கம்பிகளால் ஆன கதவு, அது! பக்கத்துக்கு இரண்டு கீல்களைக் கொண்ட உயரமான இரட்டைக் கதவு. குத்துக்கீல்கள், ஓட்டை போடப்பட்ட கல்தூண்களில் நுழைக்கப்பட்டு, மறுபக்கப்பட்டை முனைமடித்து விடப்பட்டிருந்து.
ஒன்றுக்கொன்று மிகச்சரியாகப் பொருந்திக்கொள்ளும் இருபாகக்கதவின் பூட்டுத்துவாரத்தில், ஹைதர்காலத்துப் பூட்டு ஒருக்களித்துத் தொங்கிக்கொண்டிருக்கும். அதன்சாவி, பள்ளிவாசலைக் கூட்டிப்பெருக்கி, துடைத்து, பாய்விரித்துப் பராமரிக்கும் மோதினாரின் கைவசம்!
மஹல்லாவில் யாராவது மெளத்தாகிப்போனால், அந்தச்சாவிக்கு வேலைவரும். இல்லாவிட்டால் அது, அங்கேயுள்ள சுவர் ஆணியில் தொங்கிக்கொண்டிருக்கும். அது 'தேமே' என்று தொங்கிக் கொண்டிருக்கும் காலத்தில், சாவிப்பிடி வளையத்திலிருக்கும் வேலைப்பாட்டில் தெரியும் முகம், அழுதுவடிவதாகச் சொல்வார்கள். அதை நான், வேலைமெனக்கெட்டுப் போய்ப் பார்த்ததில்லை. மெளத் சேதிவந்தால், அந்தமுகம் சிரிப்பதுபோல் தெரிவதாகவும் சொல்வார்கள். 'அப்படியா?' என்று மோதினாரை பார்த்துக் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். ஆனால் அவரைப்பார்த்து வேறுவேறு விஷயங்களைப் பேசிவிட்டு, 'இத அவசியம் கேக்கணுமா?' என்ற கேள்வியுடனே திரும்பி விட்டிருக்கிறேன்.
அதற்குக் காரணம் உண்டு. 'தாசில்தார் இஸ்மாயில் தர்கா சங்கக் கபரஸ்தான்' என்று, இரும்பு எழுத் துக்களால் எழுதப்பட்டிருக்கும் அந்தக்கதவு, ஒருமுறை திறக்கப்பட்டால் மூன்று மெளத்துக்களை, நாற்பதாம் நாள் செஹலம் பாத்திஹா முடிவதற்குள் உள்வாங்கிக்கொள்வது வாடிக்கையாக இருந்தது.
உறவுக்காரர்களோ, மோதினாரோ, டெலிபோனோ, தந்தியோ, எந்தவழியில் மெளத் பற்றிய தகவல் வந்தாலும் சரி... உடல்நலமில்லாமல் படுக்கையில் கிடக்கும் வயதான உறவுக்காரர்களை நினைத்துப் பார்த்து, 'அடுத்தது இவராக இருக்குமோ?' என்று கவலைகொள்ளும் நிலையை, கபரஸ்தான் கதவின் திறப்பு உண்டாக்கிவிட்டிருந்தது.
ஏழு தலைமுறைக்கு முந்தைய தாதா இஸ்மாயில், தாசில்தார் உத்தியோகம் பார்த்தவர். அப்போதைய வெள்ளைக்காரத் துரைக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்ததால், கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அவரது சொத்து என்று தாமிரப்பட்டயம் எழுதி வாங்கியதாகச் சொல்வதுண்டு.
தாதாவுக்கு ஏழு பசங்க. ஒரு பெண். தனது சொத்தை இரண்டு பாகங்களாகப்பிரித்து, அரைப்பங்கை பெண்ணுக்கும் மீதி அரைப்பங்கை ஏழு பாகங்களாக்கி பசங்களுக்குத் தந்ததால், ஏழரைப்பங்காளி என்ற பெயர் எங்கள் குடும்பத்துக்கு நிலைத்துவிட்டது.
வெளியே பெரிய மரங்களை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கும் கபரஸ்தான், எலந்தை, நவ்வா, கொடுக்காப் புளி மரங்களை அடர்த்தியாகக் கொண்ட இடம். ரோட்டை ஒட்டிய அதன் சுற்றுச்சுவர் ஆங்காங்கே காரை உதிர்ந்து, பெயர்த்தெரியாத பச்சைக்கொடிகளால் மூடப்பட்டிருந்தது. கடந்து செல் பவர்களின் பார்வையில் 'ஏதோ தோப்பாக்கும்' என்ற நினைப்பை ஏற்படுத்தத் தவறாது அந்த மரங்கள்!
ஏழரைப்பங்காளி வகையறாவுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த கபரஸ்தான் கதவு திறக்கப்பட்டு உள்ளே நுழைந்தால், நந்தவனத்தின் குளுமையை உணரமுடியும். பச்சைத் தழைவாசத்துடன் கிளறப்பட்ட மண்வாசனையும் நாசியைத் தாக்கும். கதவிலிருந்து முதல் பத்தடிதூரம்வரை தரையில் செங்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். இடதுபுறமாய் நீண்டுசெல்லும் பத்தடி அகலபாதை மண்ணால் ஆனது என்றாலும், சீரான பராமரிப்பில் இருந்தது.
கபரஸ்தான் பராமரிப்பை, குட்டை ஷாஜஹான் மாமு பார்த்துக்கொள்வார். அவர், எல்லா வயதுக்காரர்களுக்கும் மாமுதான். கபரஸ்தானில்தான் பகல் முழுவதும் இருப்பார். கபரஸ்தானுக்குள்போக, அவர் பள்ளிவாசலில் இருக்கும் குளிக்கும் தண்ணீர்த்தொட்டியின் மீதேறி, குட்டிச்சுவற்றில் உட்கார்ந்து, முதலில் ஒருகாலைத் தூக்கிப்போடுவார். அப்புறம் வேட்டியை இரண்டு கால்களுக்கிடையில் சுருட்டிப்பிடித்துக்கொண்டு அடுத்த காலையும் போட்டபடி குதிப்பார். 'தொம்'மென்று சத்தம் மட்டும் கேட்கும். ஆள் தெரியமாட்டார்.
சின்ன வயதில் , அவருடன் நானும் சேர்ந்து குதித்துப் போயிருக்கிறேன். எலந்தை, நவ்வா, கொடுக்காப் புளி சிதறிக்கிடக்கும். அவற்றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டுவருவேன்.
கபரஸ்தானின் எல்லாப் பகுதிகளுக்கும் வாசலிலிருந்து போய் வர பிரத்யேகமான பாதையை அமைத்தது, அவர்தான். என் பெரிய அண்ணனின் வயது அவருக்கு. "க்யாரே குட்லியான்?" என்றுதான் எல்லோரையும் விளிப்பார். அவருக்கு. தன் உயரத்தின் மீது காம்ப்ளக்ஸ் இருந்ததாகச் சொல்வார்கள். அதுவே அவரை நிக்காஹ் செய்யவிடாமல் தடுத்து, கடைசிவரை 'அன்பாயாவாக' இருக்கச் செய்து விட்டது.
கபரஸ்தான் கதவைத்திறந்து அந்தவழியாக மெளத்தை உள்ளேகொண்டு போகும்போது,"சாவியைத் தொலச்சுறாதீங்க, மோதினாரே. அடுத்தடுத்து தெறக்கணும்" என்று அவர் கேலிசெய்வதுண்டு. அப்போதெல்லாம் எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. அர்த்தம் புரிந்து அதுபற்றி யோசித்தபோது, அறிவுப் பூர்வமான நெருடல் இருந்தாலும் சம்பவங்களின் நிகழ்வு என்னை மனநெருக்கடிக்கு ஆளாக்கியது. குட்டை ஷாஜஹான் மாமு மெளத்தாகிப் போயும் இருபத்தேழு வருடங்கள் ஆகிவிட்டன.
ஏழரைப்பங்காளி வாரிசுகள் மஹல்லாவிலிருந்து இடம்பெயர்ந்து எங்கெங்கோ போய்விட்டார்கள். நிக்காஹ், மெளத், தாதா பாத்திஹா என்று விஷேங்களின்போது மட்டும் கூடுவது வழக்கமாகியிருந்தது. பின்பு, அதுவும்கூட நெருக்குவட்ட உறவுகளுக்கு மட்டும் வந்துபோவது என்பதுபோல சுருங்கி விட்டது. என்றாலும் கபரஸ்தான் கதவு மட்டும், தன் நிலையிலிருந்து மாறியதாகத் தெரியவில்லை.
குட்டை ஷாஜஹான் மாமுவின் மெளத்துக்குப் பின்பான கபரஸ்தான், முற்றிலும் மாறிவிட்டது. அதைப் பராமரிக்க எவரும் முன்வரவில்லை. குப்பையும் காய்ந்த சருகுகளுமாய்... பாம்பு, பூரான், ஓணான் ஆகிய ஜந்துகளின் பூர்வ இடமாகிப் போனது!
*
பீபீஜான் மெளத்தின்போது, கபர்க்குழி வெட்ட ஆள் கிடைக்கவில்லை. அதற்கு முந்திய ரஹூமானின் மெளத்வரை, உறவில் மிகவும் ஏழையாக இருந்த பாபுபாய்தான் மண்வெட்டி பிடித்தார்.
அவர் செய்துவந்த ஏழட்டு வகையான அன்றாடங்காய்ச்சி வேலைகளுடன், குழிவெட்டுதலும் ஒரு வேலையாகியிருந்தது. அவர் ஊரைவிட்டுப்போனதும் எவரும் குழிவெட்ட முன்வரவில்லை.
பீபீஜான் பெரிய பணக்காரி. விரல் நீட்டினால் வேலைசெய்ய அவளுக்கு ஆட்கள் இருந்தனர். இருந்தும்... குழிவெட்ட ஆள்தேடி அலைய நேரிட்டது. மற்ற பள்ளிவாசல்களுடன் இணக்கமாக வேறு இல்லாதுபோனதால் அவர்கள் ஆள் அனுப்ப யோசித்தனர். வேறுவழியில்லாமல் மஹல்லா பசங்க நாலைந்து பேர் குழிவெட்டித் தர, பீபீஜான் மய்யம் மண்ணைக் கண்டது.
அடுத்த வாரத்தில் சங்கக் கூட்டம் கூடியது. இதில் குழிவெட்டுதல் பற்றிய பேச்சே பிரதானமாக இருந்தது. சாப்ஜான் பாய் எழுந்து பேசினார். ஏழரைப் பங்காளி வகையறாவிலேயே மெத்தப் படித்தவர் அவர்தான். அவர் எதைப்பற்றி பேசினாலும் தொலைநோக்கு இருக்கும். நுணுக்கமும் நுட்பமாகப் பேசுவார். ''எதுக்கு ஒவ்வொரு மெளத்துக்கும் குழிவெட்ட ஆள்தேடிப் போகணும். குழிவெட்டுறதக் கேவலமான தொழிலாப் பாக்குறாங்க. இப்ப ஆளு கிடைக்குறதும் கஷ்டமா இருக்குறதால, பேசாம பொக்லைன கொண்டுவந்து ஆறேழு கபர்க்குழிய வெட்டிட்டா என்ன?"
அவர் சொன்னக் கருத்தை காதுகொடுத்துக் கேட்ட கூட்டம் வாய்ப்பிளந்து போனது. ரெடிமேட் கபர்க்குழி பற்றிய பேச்சு புதிய விஷயமாகப்பட்டது. "நவீனயுகத்துக்கு ஏற்ற ஆலோசனை" எனவும் "கபர்க்குழிய அப்பப்ப தான் வெட்டணும். அதான் நல்லது" என்று எதிர்ப்புமாய் பல குரல்கள் எழும்பின.
"நல்ல திட்டத்தைச் சொன்னா எவங்கேக்குறான்?" என்று சலித்துக்கொண்டு கிளம்பிப்போய் விட் டார், சாப்ஜான் பாய்.
அந்தக் கூட்டத்தில், "வேறு சமூகத்து ஆளவெச்சு வெட்டுறதா இருந்தாலும், அப்பப்ப கபர்க்குழிய வெட்ட விடலாம்" என்று முடிவெடுக்கப்பட்டது.
பீபீஜானைத் தொடர்ந்து இருவேறு மெளத்துகள் சொல்லிவைத்தாற்போல் விழுந்ததும், அதன்பின் நடந்த மாதாந்திரக் கூட்டத்தில் ஷாகுல் பேசினான். "இந்தக்கதவை ஒருதடவை தெறந்தா, மூணு மெளத்து விழுதுனு பேசுறது சங்கடமா இருக்கு. கபரஸ்தானுக்கு எதுக்கு கதவு?"
அவன் கேள்வி நியாயமாகப்பட்டது. தலைவர் காதுகுரும்பியும், செயலாளர் ரயில் பாட்சாவும், பொருளாளர் மதனியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். "பொடிப்பசங்களா இருந்தாலும் புத்திசாலித்தனமாப் பேசுறாங்க!" என்று வாய்விட்டுப் பேசினார்கள்.
கதவை எடுத்துவிடலாம் என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் முகத்தில் ஒருவித நிம்மதி தெரிந்தது. இளைஞர்களில் நாலைந்துபேர் சேர்ந்து, கீல்களிலிருந்து கதவை நெம்பித்தூக்கி, சுவரோரம் சாய்த்து வைத்துவிட்டார்கள்.
இப்போது கபரஸ்தான் 'ஹா'வென்று வாய்ப்பிளந்து தெரிந்தது.
கதவு, ஓரங்கட்டப்பட்டுவிட்ட பின்பு, வேறுவேறு பிரச்சனைகள் எழ ஆரம்பித்தன. "கபரஸ்தான்ல என்னன்னவெல்லாமோ நடக்குதாமே? ராத்திரில பொம்பளைப் புழக்கம் இருக்குறதா பேசறாங்களே?" மஹல்லா பெண்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். சுவற்றில் சாத்திவைக்கப்பட்ட கதவு, மறுபடியும் அதன் இடத்தில் பொருத்தப்பட்டது.
*
ராகிலாவின் மெளத்தில் கபரஸ்தான் ஒருபுதிய அனுபவத்தைச் சந்தித்தது. ராகிலா, தாவூத் சாயபுவின் ஒரே மகள். படிக்கும்போது காதலித்த பையனை ரிஜிஸ்டர் பண்ணிக்கொண்டிருந்தாள் , அவள்.
ராகிலாவின் செயல், மஹல்லாவில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கிவிட்டிருந்தது. மஹல்லா பெண் வேறு மதத்துக்காரனை கட்டிக்கொண்டது இதுவே முதல்முறை என்பதால், இந்தப்பேச்சு பல உருவங்களைப் பெற்றது.
தாவூத் சாயபு, மகளை ஆள்வைத்துத் தேடிப்பிடித்து விட்டார். என்றாலும் அவள் வர மறுத்துவிட்டாள்.
மகளின் செய்கை வருத்தமாக இருந்தாலும் அவள் பிரிவு, தாவூத் சாயபுக்கு சங்கடத்தைக் கொடுத் திருந்தது. இமைப்பொத்தி வளர்த்த மகள்.
ஏழெட்டுவருட இடைவெளியில், ராகிலாவை மறந்திருந்த எல்லோருக்கும் அவளது அகால மரணம், மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வந்தது. ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு போனவளை எதிரே வந்த லாரி இடித்துத்தள்ளிவிட்டது.
சேதி தெரிந்தவுடன் விழுந்தடித்து ஓடிய தாவூத் சாயபு, "இப்பவாச்சும் எம்பொண்ண எங்கிட்ட ஒப்படைச்சுருப்பா. எங்க முறைப்படி அவளை அடக்கம் செய்யணும்!" என்று கெஞ்சிக் கதறியிருக்கிறார்.
ராகிலாவின் காதல் கணவன் ஒத்துக்கொண்டதும், கபரஸ்தானில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வைத்தார். கபர்க்குழிவெட்ட ஆள் போனது. சிச்சாலால் சந்தனக் கடைக்கு கபன் பொருட்கள் வாங்க ஒருவன் ஓடினான்.
எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில், மய்யத்தின் வருகைக்காக உறவினர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
நேரம் போய்க் கொண்டிருந்தது. தாவூத் சாயபு வெறும் ஆளாய்த்திரும்பி வந்தார்.
"என்ன பாய் ஆச்சு?"
அவருடன் போய்வந்தவர்கள் சொன்னார்கள்: "மருமகப் பைய ஒப்புக்கிட்டாலும் அவங்கூட்டம் மய்யத்தை தர முடியாதுன்னுருச்சு. அவ, ஏழு வருஷம் அவங்க மருமகளா இருந்துட்டாளாம். அவ அவங்க வீட்டு மருமகளாம். அவங்க மதப்படிதான் காரியம் செய்வாங்களாம்!"
இயலாமை, தாவூத் சாயபு முகத்தில் பிரதிபலித்தது. மடங்கி உட்கார்ந்து அழ ஆரம்பித்தார்.
'வெட்டுன கபர்க்குழிய என்ன செய்றது?' எனும் கேள்வி இப்போது எல்லோரையும் கவலைக்கொள்ள வைத்தது.
அப்போதே மணி, இரவு பத்தாகியிருந்தது. '' வெட்டுனக்குழிய சும்மாவும் போட முடியாது. வெறும் குழிய மூடவும் கூடாது! என்ன பண்றது?" பேச்சு வளர்ந்துகொண்டே போனது. பல்வேறு அனுபவங்களும ஆலோசனைகளும் வந்து விழுந்தன.
இப்போது ஒருகீச்சுக்குரல் இடையே புகுந்தது. "ரொம்பப் பேசுறான் பாரு. அவனைப்போட்டு அடக்கம் பண்ணுங்க!"
இறுக்கமும் சிடுக்கும் நிறைந்த அந்தத்தருணம், சிரிப்புக்கு இடம் மாறியது.
இந்தநேரத்தில் நாஜர் அப்பாஸ் சொன்ன செய்தியும் விதமும் ஒரு தீர்ப்பைப் போலிருந்தது. " குழியை சும்மாவும் போட முடியாது. வெறுமனேயும் மூடக்கூடாது. அப்டித்தானே? உப்பு ரஹ்மத்தானது. வேறு வழியில்லை. அத நிரப்பி மூடுங்க!"
அப்போதைக்கு வேறு எதுவும் யாருக்கும் தோன்றவில்லை. அதனால் சாமி ஐயா கடையைத் திறக்கச் சொல்லி ஒருமூடை உப்பு எடுத்துவந்து கொட்டப்பட்டது. மற்ற காரியங்கள் எல்லாமே ஒருமெளத்துக்கானதாக நடந்தன.
இதுபற்றிய சங்கதி பேப்பரிலும் வர... ஆச்சர்யம் கலந்த பிரமிப்பு, கபரஸ்தான் மீது மற்றவர்களால் வீசப்பட்டது.
எனக்குள் ஒருசந்தேகம் அரும்பியது. 'வெட்டுன குழில உப்புப்போட்டு மூடியிருக்கே. இந்தக்கணக்கு மூணுல வருமா?'
உப்பு கபருக்கு அப்புறம் ஒருமய்யத் விழுந்து, நாற்பதாம் செஹலம் பாத்திஹா வரைக்கும் அடுத்த மய்யத் எதுவும் விழவில்லை என்றதும் சங்கக் கூட்டத்தில் அதுபற்றி சந்தோஷமாகப் பேசப்பட்டது.
அந்த சந்தோஷத்தை அன்று சாயங்காலமே கெடுத்தது, மெளத் ஆகிப்பிறந்த ஒருகுழந்தை!
*

இரண்டாவது அட்டாக்குக்கு பின்பு, என்னை உறவுக்காரர்கள் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். சர்க்கரை, சாப்பாடு எல்லாவற்றிலும் கட்டுப்பாடு. வீட்டைவிட்டு வெளியில் எங்கும் போவது இல்லை. எல்லாமே பத்துக்கு பனிரெண்டான நூற்று இருபது சதுர அடிகளுக்குள்தான் என்றாகிவிட்டது.
அவ்வப்போது என் நினைவு தப்பிப்போவதாக வீட்டிலுள்ளவர்கள் குறைபட்டுக் கொள்வதும், சில வேளைகளில் படுக்கையிலேயே கழிவுகள் வெளியேறிவிடுவதும் எனக்குப் புரிகிறது.
போன வாரம் ஷபி என்னைப் பார்க்க வந்திருந்தான். என் பால்ய சிநேகிதன். டெல்லியிலிருந்தவன், சொந்த மண்ணில் மெளத்தாக வேண்டும் என்று வந்துவிட்டனாம். ஆள் தளர்வாய் இருந்தாலும் எல்லாமே அவனுக்கு சரியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் சொன்னான்.
நான்கு நாட்களுக்கு முன், மும்தாஜின் மெளத்துக்குப் போயிருந்ததாகவும் ஓடிப்போன அவள் புருஷன் வந்துசேர்ந்தச் செய்தியை, சுவாரசியமாகப் பேசிவிட்டுக் கிளம்பினான்.
கிளம்பும்போது மும்தாஜூக்கு முன்பு சிராஜூதீன் மெளத்தையும் சேர்த்தால்... இன்னும் ஒருமெளத் பாக்கியிருப்பதாகச் சொல்லி புளி கரைத்தான். எனக்குள், 'அடுத்து யாராக இருக்கும்?' எனும் கேள்வி எழவில்லை. அது, நானாகவே இருக்குமோ எனும் பயம்தான் வந்தது.
*

இன்று மதியம் நல்ல வெயில். உள்வீட்டிலும் வெக்கை இருந்தது. மூன்று மணிவாக்கில் நெஞ்சில் 'சுருக்'கென்றது. யாரையாவது கூப்பிடலாமா என்று வாயெடுத்தேன். வார்த்தை வரவில்லை. வெறுமை. திரண்ட காற்று தொண்டையை அடைத்து, என்னை பலமிழக்கச் செய்தது. திணறலாய் இருந்தது.
பள்ளிக்கூடம் போய்விட்டு வந்த பேரப்பிள்ளை, என் அறையில் யதேச்சையாய் எட்டிப்பார்த்து, "மா... ம்மா. தாதாக்கு என்னமோ பண்ணுது!" என்று, தன் யூகத்தை கத்தலாய்ச் சொன்னான்.
கபூர்ஷா டாக்டர் வந்து பரிசோதித்தார். "ஆஸ்பத்திரிக்கெல்லாம் வேண்டாம். பயப்படற மாதிரி ஒண்ணுமில்லை!" என்றார்.
அவர் சொன்னதும், சுற்றிநின்றிருந்த உறவுக்கூட்டம் கசகசத்து மெல்ல விலகுகிறது.
"கடைசியா மும்தாஜ்... அதுக்கு முன்னே சிராஜூதீன்... இன்னும் ஒண்ணு பாக்கியிருக்குல்ல?"- ஒரு குசும்புக்குரல் கேட்கிறது.
*
நன்றி : திண்ணை