எஸ்.அர்ஷியா
நன்றி : கீற்று
மழைவேண்டி பல்வேறு யாகங்கள் நடத்தப்படுவது, எல்லோருக்கும் தெரிந்ததுதான். வேண்டுதலுக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம் என்று பல இரவுகள் யோசித்திருக்கிறேன். வேண்டுதல்களுக்குப் பின் மழைவிழுவது பற்றிய யோசனை, அறிவுப்பூர்வமான நெருடலை தந்தாலும், சம்பவங்களின் நிகழ்வு, என்னை மன நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கிறது!
கனமழைக் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: அரசு அறிவிப்பு.
ஒருவரிச் செய்தி தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடியபோது மணி, காலை ஏழேகால் இருக்கும். அவசர அவசரமாகச் சோத்து மூட்டை கட்டிக்கொண்டிருந்த என் மனைவி, 'காண்டு' ஆகிப் போனாள். அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறாள். ஏழு இருபதுக்கு வீட்டுவாசலில் மினி பஸ் பிடித்தால், ஏழே முக்காலுக்கு மாட்டுத்தாவணி. அங்கிருந்து வேறு பஸ்பிடித்து, அவள் வேலை செய்யும் பள்ளிக்கூடத்துக்கு எழுபது கிலோமீட்டர் போகவேண்டும். தினமும் இதே ஓட்டம்தான். தாமதக் கையெழுத்துதான்!
அவள் 'காண்டு' ஆகிக்கத்தியது, 'இப்படி லீவு விட்டுவிட்டார்களே...' என்று அல்ல! 'விட்ட லீவை முதல்லயே அறிவிச்சுருக்கக்கூடாதா?' என்றுதான். 'இன்னும் ஒருமணிநேரம் நல்லாத் தூங்கியிருப்பேனே...' என்று புலம்பல் வேறு, அவளிடமிருந்து நிமிட இடைவெளிகளில் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது.
ஆசிரியப் பணிக்குப் போகிறதென்பது, நிறைய பேருக்கு லட்சியமாகவே இருக்கிறது. 'என்ன... அந்த வேலைமேல அப்டியொரு ஆர்வம்?' என்று எனக்குத் தெரிந்த பலபேரிடம் கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் ஒன்றாகவே இருந்தது. மாற்றமே இல்லாமல் அவர்கள் சொன்ன அந்த பதில் : 'நிறைய லீவு கெடைக்கும்ல்ல!
''போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்று சொல்லிக் கொடுப்பவர்கள், ஆசிரியர்கள்தான். வருஷத்துக்கு இருநூத்து இருபது நாள் வேலை செய்வதாக சலித்துக் கொள்கிறார்கள்!
ராத்திரி முழுவதும் நல்லமழை. நேற்று சாயங்காலம் துவங்கி, நிதானமாக... இப்போதும் சொட்டிக் கொண்டுதான் இருக்கிறது. சின்னவன் காகிதக்கப்பல் செய்து, தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கிறான். சி.எல்., உள்ளிட்ட இன்னபிற லீவுகளை என் மனைவி எடுத்து முடித்து விட்டதால், சம்பளத்தை இழக்க மனமில்லாமல், மழையோடு பள்ளிக்கூடம் போக யத்தனித்திருந்தாள்.
நேரம் போகப் போக, 'காண்டு' தணிந்து, மழையோடு ஒன்றிவிட்டாள்.
அவள் வேலைசெய்யும் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. அந்தப் பள்ளி வாசலில் போன வெள்ளிக்கிழமை, ஜூம்மா தொழுகையை, மழைவேண்டி சிறப்புத்தொழுகை நடத்தியதாகச் சொல்ல ஆரம்பித்தாள். அந்த ஊரை அவளுக்குப் பிடித்திருந்தது. நல்ல மக்கள் என்று அடிக்கடி சொல்வாள். தண்ணீருக்கு அவர்கள் நிறையக் கஷ்டப்படுவதாக பலமுறை சொல்லியிருக்கிறாள்.
மழைபெய்தால், அந்த ஊரிலுள்ள ஆணும் பெண்ணும் சந்தோஷமாகி விடுவார்களாம். செய்து கொண்டிருக்கும் கைவேலையை அப்படியே போட்டுவிட்டு, கட்டிய துணியோடு தெருவில் இறங்கி, மழைநீரில் குளித்தபடியும், துணிகளைத் துவைத்தபடியும் ஒரே சந்தோஷக் கும்மாளியாக இருக்கும் என்று அவள் சொல்லக்கேட்டு ரசித்திருக்கிறேன். அத்தனை ஒன்றிப்போடு சொல்வாள்.
இப்போதும் தண்ணீருக்கு அந்த ஊர் மக்கள் ரொம்பக் கஷ்டப்படுவதாகச் சொல்லியிருந்தாள். தினமும் இரண்டு ஒரு லிட்டர் பாட்டில்களில் தண்ணீர் கொண்டுபோவாள். அவளுக்கு ஒருலிட்டர் தண்ணீர்தான் செலவாகும். மீதி ஒரு பாட்டில் தண்ணீரை, தானமாகக் கொடுத்துவிட்டு வருபவளாக இருக்கிறாள்.
அந்த ஊர் ஓவர் டேங்கில் நிரம்பும் தண்ணீர், ஊருக்கு அரைமணிநேரம் வந்தாலே பெரிய விஷயம் என்று சொன்ன அவள், சற்று இடைவெளிவிட்டு அடுத்ததைச் சொன்னபோது, மிரண்டே போய்விட்டேன். 'அப்டி மாசத்துல நாலு தடவை தான் தண்ணீயே வரும்!' என்று.
மழைத்தண்ணீரை பிடித்துவைக்க ஒவ்வொரு வீட்டிலும் பெரிய டிரம்கள் பத்துக்கும் மேலே இருக்கிறதாம். சில வீடுகளில் பெரிய தொட்டியே கட்டி வைத்திருக்கிறார்களாம். மழைத்துவங்கி சிறிதுநேரம் வரை கும்மாளிப்போடும் பெண்கள், 'விசுக்'கென்று வீட்டுக்குள் புகுந்து, மழைத் தண்ணீரை தொட்டியிலும், டிரம்களிலும் பிடிக்கத் துவங்கி விடுவார்களாம். இந்தத் தண்ணீர்தான், வருடம்முழுவதும் குடிக்க... சோறாக்க..!
"எட்டுமாசத்துக்கு மேலாக மழை இல்லாம கஷ்டப்பட்டுப் போனாங்க, அந்த ஊர்ல. மழைத் தொழுகைக்கு பலன் இருக்குதே. இனி ஒரு ஆறுமாசத்துக்கு அவங்களுக்கு கவலை இருக்காது. ராத்திரி முழுசும் ஊரே முழிச்சுருந்து தண்ணீ புடிச்சுருப்பாங்க. கும்மாளமும் போட்டுருப்பாங்க!'' என்று சொன்னபோது, அவளுக்குள் சந்தோஷம் கரைபுரள்வதை என்னால் பார்க்க முடிந்தது.
மழைவேண்டி பல்வேறு யாகங்கள் நடத்தப்படுவது, எல்லோருக்கும் தெரிந்ததுதான். வேண்டுதலுக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம் என்று பல இரவுகள் யோசித்திருக்கிறேன். வேண்டுதல்களுக்குப் பின் மழைவிழுவது பற்றிய யோசனை, அறிவுப்பூர்வமான நெருடலை தந்தாலும், சம்பவங்களின் நிகழ்வு, என்னை மன நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கிறது.
எனக்கு எட்டு ஒன்பது வயதிருக்கும்போது, இதுபோலானதொரு கடும் தண்ணீர் பஞ்சம் இருந்தது. எங்கள் மஹல்லாவிலுள்ள பத்துவயதுக்குட்பட்ட சிறுமிகள் எல்லாரும் ஒன்று கூடி, 'முங்கா ... முங்காணி...' கிளம்பினார்கள்.
முங்கா... முங்காணி... என்பது இரண்டு பொம்மைகள். ஒன்று ஆண் பொம்மை. ஒன்று பெண் பொம்மை. துணியால் செய்யப்பட்ட அரையடியே இருக்கும் அந்த பொம்மைகளை என் தாதிமா ஜொகராபீதான் செய்திருந்தார். அதை இரண்டு உலக்கைகளின் ஒருபக்கத்து முனைகளில் தனித் தனியாகக் கயிறு வைத்துக்கட்டி, சிறுமிகளிடம் கொடுத்தார். அதைச் சிறுமிகள் தூக்கிப் பிடித்துக் கொண்டு, மஹல்லாவிலுள்ள எல்லா வீடுகளுக்கும் போனார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பும் அந்த பொம்மைகளை உயரே ஆட்டிஆட்டி, 'முங்கா முங்காணி ஜல்தே ஹை... ஒஜூக்கு பாணி மங்தே ஹை... ஒஜூக்கா லோட்டா, புட் கயா..... அல்லாமியான் படா பர்சாத் தே!' என்று இறைஞ்சினார்கள்.
அந்தப்பாட்டை, மக்கத்துக்குப் போய்விட்டு வந்த ஆமினாபீதான் சொல்லிக் கொடுத்திருந்தார். அந்தம்மா, எப்போது பார்த்தாலும் குரான், ஹதீஸ் என்று படித்துக்கொண்டே இருப்பார். எங்கள் மஹல்லாவில், 'யாருக்காச்சும் என்னமாச்சும்ன்னாலும்' அவரிடம்தான்போய், 'அதுக்கு என்ன பண்றது?' என்று யோசனை கேட்பார்கள். அந்தம்மாதான், 'முங்கா... முங்காணி...' ஊர்வலத்துக்கும் ஐடியா கொடுத்தது. அதற்கு பொம்மை செய்துதந்தது மட்டும் தான், என் தாதிமா!
கடைசி வரியான, 'அல்லாமியான் படா பர்சாத் தே!' எனும்போது, சிறுமிகளின் குரல் ஓங்கி ஒலித்தது. சவ்வு மிட்டாய்க்காரனின் கைதட்டி பொம்மையைப்போல, அவர்கள் அதை வைத்துக்கொண்டு இறைஞ்சலுடன் பாடிக்கொண்டு போனபோது, ஒவ்வொரு வீட்டிலும் அரிசி, காசு மற்ற பொருள் களைக் கொடுத்தார்கள். நிறையவே சேர்ந்தது.
அவர்கள் சேகரித்துக்கொண்டு வந்ததை, தாதிமா ஜொகராபீ சமைத்து, அந்தச் சிறுமிகளை வரிசையாக உட்கார வைத்துப் பரிமாறினார்.
பொம்பளைப் பிள்ளைகள் மட்டுமே செய்யும் 'முங்கா... முங்காணி...' நிகழ்ச்சியில், அவர்கள் கிளம்பியதிலிருந்து சோறு சாப்பிட்டதுவரை என் தாதிமாவின் பரிந்துரையின் பேரில், நானும் கூடவே இருந்தேன்.
அன்றிரவு மழை பெய்தது. அப்படியிப்படி மழையில்லை. கடும்மழை!
மன நெருக்கடியைத் தாண்டி, ஏற்கனவே எனக்கு அப்படியொரு அனுபவமும் இருந்ததால், என் மனைவி சொன்ன மழைக்கான தொழுகையிலிருந்து நான் வேறுபடவில்லை. மறைந்த இசைமேதை குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைத்தே மழைபொழிய வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறேன். நான் வேலை செய்து வந்த விருதுநகரில், மழையே பெய்யாமல் கந்தக பூமி காந்தியபோது, மழைவேண்டி கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைத்தார்கள். அப்போதும் மழை வந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூரில் எனக்கொரு நண்பன் இருந்தான். அவன் குடும்பத்துக்கு நிறைய தென்னை மரங்கள் இருந்தன. கிணற்றுப் பாசனம்தான். ஒரு கால கட்டத்தில் அந்தப்பகுதியே வறண்டுபோனது. தென்னை மரங்கள் தண்ணீரில்லாமல் கருகத் தொடங்கின. அவனது தென்னந்தோப்பை ஆராய, மதுரையிலிருந்து ஒரு விஞ்ஞான ஆய்வுக்குழு போனது. அதில் எனக்கும் ஓரிடம் கிடைத்தது. நாங்கள் தென்னந்தோப்பை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, தோப்பை ஒட்டி வறண்டுகிடந்த கண்மாயில், ஊர் மக்களெல்லாம் கூடியிருந்தார்கள். விசாரித்தபோது, 'மாரியம்மனுக்கு மிளகாய்க் காப்பு சாத்துறாங்க!' என்று சொன்னார்கள்.
கேட்க புதுமையாக இருந்ததால், எங்கள் குழு அங்கேயும் போனது. காய்ந்த பட்ட மிளகாயை மை போல அரைத்து, அதை சின்னதாக இருந்த மாரியம்மன் சிலைஒன்றில் அப்பிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு கற்சிலை. பொட்டு இடமில்லாமல் பூசி முடித்ததும், பெண்கள் குலவையிட, பூசாரி ஒருவர் பூஜை செய்தார். எல்லோரும் பய பக்தியுடன் சாமி கும்பிட்டார்கள். பின்பு, அந்தச் சிலையைத் தூக்கி வறண்ட கண்மாய்க்குள் வீசிவிட்டு வீடுதிரும்பி விட்டார்கள்.
மிளகாய் அப்பிய எரிச்சல் பொறுக்க முடியாமல், சாமி சிலை வருண பகவானிடம் இறைஞ்சி மழையை பெற்றுத்தரும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை. அன்று இரவு மழை பெய்யத்தான் செய்தது. எனக்கு ஆச்சரியம்! ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையான நம்பிக்கை. அத்தனை நம்பிக்கைகளும், அவர்கள் விரும்பும் நேரான முடிவுகளைத்தானே கொடுக்கிறது?
தி.நகரின் ரங்கநாதன் தெருவுக்கு, சற்றே சற்று குறைவுள்ள தெருதான், மதுரையின் பத்துவிளக்குத் தூண் சந்து. சுற்றுவட்டாரத்து மக்களுக்கு, அங்கே இலவசமாகவே எல்லாம் கொடுக்கிறார்கள் என்பதுபோலானதொரு நினைப்பு உண்டு. தெருவில் நின்றால்போதும். நகர்த்தி, கொண்டுபோய் சேர்த்துவிடுவார்கள். அப்படியொரு கூட்டம்!
உச்சிவெயில் பின்னி பெடலெடுக்கிறது. கூட்டத்துக்கு உறைக்கவே இல்லை. 'அந்தக் கடைல இது கெடைக்கும்...இந்தக் கடைல அது கெடைக்கும்...' என்று, மக்கள்வெள்ளத்தில் நீந்திக்கொண்டு போகிறார்கள்.
ஒருகடைக்குள் நானும் என் மனைவியும் துணிகளைப் புரட்டிக்கொண்டு இருக்கும்போது, வெளியே திடீர் மழை. தெருவில் நகரமுடியாமல் நகர்ந்து கொண்டிருந்த கூட்டம், ஆங்காங்கே ஒதுங்கியது. நொடிகளில், தெரு வெறிச்சோடிவிட்டது.
எவ்வளவு வெயிலடித்தாலும் தாங்கிக்கொள்பவர்கள், சொட்டு மழை பெய்யத் துவங்கியதும் ஓடிஒளிவதும் ஆச்சரியத்தையே தருகிறது!
நன்றி : கீற்று
'முங்கா முங்காணி ஜல்தே ஹை... ஒஜூக்கு பாணி மங்தே ஹை... ஒஜூக்கா லோட்டா, புட் கயா..... அல்லாமியான் படா பர்சாத் தே!'
ReplyDeleteஎங்க அம்மா பிறந்த கிராமத்தில் இது போல மழை பெய்யாத போது சிறுவர்கள், இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து ‘’பூமியெல்லாங்காயுது கால் கழுவத்தண்ணியில்ல! ஆடுமாடு குடிக்கத்தண்ணியில்ல! மழைச்சோறு மழைக்கறி!’ எனக் கத்திக்கொண்டே வீதிவீதியாக வருவார்கள். எல்லா வீடுகளிலும் சோறு வாங்கி கொண்டு போய் ஒன்றாகச்சேர்ந்து உண்பார்கள். அந்த வாரத்தில் கட்டாயம் மழைபெய்துவிடுமாம். மழை குறித்துத்தான் மக்களிடம் எத்தனை நம்பிக்கைகள். மழை பெய்யாத போது தவளைகளுக்கு கல்யாணம் செய்து வைத்ததை தேசாந்திரியில் எஸ்.ராமகிருஷ்ணனும் பதிவு செய்திருக்கிறார். ஆடுமாடு தளத்திலும் http://aadumaadu.blogspot.com/2008/07/blog-post.html மிளகாய் அரைத்து தலைமலை அய்யனுக்கு பூசுவதை பதிவு செய்திருக்கிறார். பகிர்விற்கு நன்றி. - சித்திரவீதிக்காரன்.