இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட இஸ்லாமியப் போராளிகள்
எஸ். அர்ஷியா
கடந்த ஜூன் மாதம் முழுவதும், பல்வேறு இணைய தளங்கள் தங்களின் பிரதானப் பக்கங்களில். கி.பி. 1857 - ல் நடந்த சிப்பாய் கலகத்தைப் பற்றி, ' இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்' என மீள் பதிவுகளாக ஆங்கிலத்தில் வலையேற்றிறிருந்தன.
ஒருதளம் ரொம்பவே கவலையுடன், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வலையேற்றியதைத் திரும்பவும் மீள் பார்வையாகத் தருவதாய் சலித்துக் கொண்டிருந்தது.
அதேவேளையில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியச் செயலாளர் மவுலானா முகம்மத் வாலி ரஹ்மானி எழுதிய, '1857 - முதல் சுதந்திரப் போர்?' எனும் செய்தியும், கேள்விக்குறியுடன் இடம் பெற்றிருந்தது.
அதைத் தொடர்ந்து, எழுதியவர்களின் பெயர்களுடனும், பெயர்கள் இல்லாமலும் பல்வேறு விவாதங்கள் வலைகளில் காணக் கிடைத்தன.
ஏறத்தாழ 150 - ஆண்டுகளுக்குப் பின், மறுபடியும் விவாதங்கள் உருப்பெறக்காரணம், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக லால் கிஷன் அத்வானி அறிவிப்பு, குஜராத்திலிருந்து நாடுமுழுவதும் விரிவடையும் மோடி இந்துத்துவாவின் நீட்சியாக கர்நாடகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைப்பு, தீவிரமடைந்து வரும் வெங்கையா, ராஜ்நாத் சிங் கும்பலின் மாய்மாலக் காவிப்பேச்சுகள், மாறிவரும் டில்லி அரசியல் நிலவரம், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ளக் குழப்ப நிலை தொடர்புடையது தான் என்பதைப் புரிந்துகொள்ள, கோனார் உரைகளும், மினர்வா கைடுகளும் தேவையில்லை!
முஸ்லிம்களின் மீதும் மதச் சார்பின்மையின் மீதும் மதவாத அமைப்புகளால் தொடர்ந்து வீசப்படும் நச்சுப் பிரச்சாரத்தை நாமும் தான் ஓர் மீள்பார்வையாகப் பார்ப்போமே!
ஒருநாடு, அது கடந்துவந்த பாதையைத்தான் அந்நாட்டின் சரித்திரமாகக் கொண்டிருக்க முடியும். ஒருநாட்டை பெருமைக்குரியதாக ஆக்குவதும், அந்நாட்டின் சரித்திரம் தான்!
நாட்டின் சரித்திரத்தை எழுதும் வாய்ப்பைப் பெறுபவர்கள், எதையும் உளப்பூர்வமாகப் பதிவு செய்வதுதான், சரித்திரத்திற்கு அவர்கள் செய்யும் மரியாதையாக இருக்க முடியும். மனச்சாய்வுகளின்றி உள்ளதை உள்ளவாறு, அசலான சரித்திரமாகப் பதிவுசெய்தால்... அந்த நாடு நிச்சயமாக நேர்மையான நாடுதான்!
இந்திய நாட்டினை, புறநிலையாக விருப்புவெறுப்பின்றி கூர்ந்து நோக்குவது, பெரும்பான்மைச் சரித்திர ஆசிரியர்களின் அகநிலைக்கு, சற்றுச் சிரமமாகவே இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக, இஸ்லாமியச் சக்ரவர்த்திகள், மன்னர்கள், நவாப்கள், அவர்களின் ஆட்சிமுறை, குணநலன்களை வழிநெடுகிலும் குற்றம் சொல்லியே வந்திருக்கிறார்கள். அது, அவர்களுக்கு எளிதாகவும் இருந்திருக்கிறது.
இந்தியாவின் பண்பாடும் நாகரிகமும் என்றால், அது இஸ்லாமியர் அல்லது ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து தோன்றிய விளைவுகளில் ஒன்று என்றும், இந்தியப் பண்பாடு, இந்திய நாகரிகம் என்று ஒன்று, என்றுமே இருந்ததில்லை என்றும், சில சமயங்களில் தெரிவிக்கப்படும் கொள்கையை, மேற்கூறியவை உறுதிப்படுத்துவதாகத் தோன்றக்கூடும் என்று டி.டி.கோசாம்பி குறிப்பிட்டிருக்கிறார்.
அது, இந்தியச் சரித்திரத்தைப் பதிவுசெய்தவர்கள் சுயலாபம், தற்காப்பு, பிறழ் பதிவு, மறைத்தல், வரலாற்றை மாற்றி, இல்லாததை உட்புகுத்துதல் ஆகிறவற்றை, பெரும்பான்மை இடங்களில் செய்தே வந்துள்ளனர் என்பதைத்தான் உறுதி செய்கின்றது.
அதன் ஒருபடிதான்... இந்தியாவின் சுதந்திரப் போர் பற்றிய சரித்திப் பதிவுகள்!
சரித்திர வரைவுகள் மீதான மரபுகளை உடைத்து நொறுக்கி, பிராந்தியச் சார்பு, மதம், தத்துவம் மற்றும் அரசியல் தொடர்பான பல்வேறு மீறல்களைக் கைக்கொண்டு, '1857 - ல் நடந்த போரே, இந்தியாவில் நடந்த முதல் சுதந்திரப் போர்!' என்று, விநாயக் தாமோதர் சாவர்க்கர் (1883 - 1966) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
காவித்தன்மையில் தோய்ந்து, உண்மைக்குப் புறம்பாக மட்டுமின்றி, அதற்குமுன் நடந்த பற்பல சம்பவங்களை, தான் சார்ந்த அமைப்புக்குத் தக்கபடி மறைத்து பிறழ்பதிவு செய்து, பொய்ப் புனைவை, ஒரு நூலாசிரியராக நாட்டுக்குத் தந்திருக்கிறார், அவர்.
அவைதான் மீள்பதிவுகளாக மறுபடியும் வலையேற்றப்பட்டிருக்கின்றன.
சுயலாபத்துக்காக ஆங்கிலேய அரசிடம், 'இனி சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள மாட்டேன்' என்று உறுதிமொழித் தந்து, அந்தமான் சிறைவாசத்திலிருந்து மீண்டு, வங்காளத்திலும் பின்பு மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கிரி கோட்டையிலும் சுகவாசியாக வாழ்ந்துவந்த விநாயக் தாமோதர் சாவர்க்கர் எழுதிய '1857 - முதல் இந்திய சுதந்திரப்போர்' புத்தகத்தை, ஆங்கில அரசு மெளனமாக அங்கீகரித்தன் பின்னணியில் சூட்சுமம் இல்லாமல் இல்லை. இஸ்லாமியப் போராளிகள், முந்தையப் போரிகளில் ஆங்கிலப் படைகளை சிதற அடித்து ஓடவிட்டதை மறைத்துவிடும் சுயநோக்கம், அவர்களுக்கு இருந்தது!
அதனாலேயே குயுக்தி நிறைந்த ஆங்கில அரசு, 1857 - கலகம், 'முதல் இந்திய சுதந்திரப்போர்' எனும் கருத்தியலாய் உருவானதை அமைதியாக அங் கீகரித்தது!
ஏனெனில், முந்தையப் போர்கள், இதைவிடக் கடுமையாகவும் அதிக உயிர்ப்பலிகளைக் கொண்டதுமாக இருந்துள்ளன. குறிப்பாக, அதற்கு நூறாண்டு களுக்கு முன்பு, 1757 - ல் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக சிராஜ் - உத்தெளலா நடத்தியப் போர். இதில் பலியானோர் எண்ணிக்கை, அதன் பின்பு நடந்தப் போர்களில் ஏற்பட்ட பலியானோர் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் குறிப்பிடத்தக்கது!
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி அமையும்போதே, அந்த ஏகாதிபத்திய அமைப்பை ஏற்க மறுத்துப் போராடியது, ஆங்கிலேய ஆட்சி வேரோடிவிட்ட பின்பு, அதைசுக்கு நூறாக உடைத்தெரிய நடத்திய போர் என்று, இந்தியாவின் சுதந்திர விடுதலைப் போர் என்பது இரண்டு வகைப்பட்டது. இதில் முதல் கட்டப்போரில், இஸ்லாமியப் போராளிகளான அலி வார்டிகன் (1754), சிராஜ் - உத்தெளலா (1757), மீர் காஸிம் (1763), திப்பு சுல்தான் (1799) போன்றவர்களின் பங்களிப்பு பிரதானமானது!
ஆனால், 1857 -ல் போரின் மீது விழுந்த பளீரெனும் வெளிச்சம், முந்தைய வரலாற்றுப் போர்கள்... முக்கியச் சம்பவங்கள்... மீது விழாமல், பொது மக்களின் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது என்பது தான் உண்மை!
அத்தோடில்லாமல், பிறழ்பதிவு செய்யப்பட்ட வரலாறு, முந்தைய வரலாற்றுச் சம்பவங்களைப் பற்றி இப்படிச் சொல்கிறது... 1857 - க்கு முன்பு நடந்த தாகச் சொல்லப்படும் போர் சம்பவங்களுக்கு, முறையான ஆதாரங்கள் இல்லை. மேலும் அவை, அப்போது ஆட்சி செய்த மன்னர்களாலும் நவாப்களாலும் நடத்தப்பட்டவை. ஆகவே அவை சரித்திரத்தில் இடம் பெறுவதற்குரியன அல்ல. அலி வார்டிகன், சிராஜ் - உத்தெளலா, மீர் காஸிம், திப்பு சுல்தான் ஆகியோர் நடத்திய போர்கள் எல்லாம், அவர்களின் தனிப்பட்ட விஷயங்களுக்காக நடத்தப்பட்டவை!
ஆனால் அதே காலகட்டத்தில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜான்சிராணியின் பெயர், சரித்திரத்தின் பிரதானப் பக்கங்களில், பெரும்பான்மை சரித்திரஆசிரியர்களால் இடம்பெறச் செய்ய முடிந்திருக்கிறது.
தனிப்பட்ட விஷயங்களுக்கென்று ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரங்களின் மூத்த ஊதாங்குழலான சாவர்க்கரும், தேசத்தை சுரண்டிக்கொளுத்த ஆங்கிலஅரசும் திட்டமிட்ட பின்னணியில், முக்கியமாக திப்புசுல்தான் எழுப்பியப் போர்க்குரல் வீரியத்தின் மீதும், அவரிடமிருந்த சுயத்தின் மீதுமான காழ்ப்பு ணர்சியேயன்றி வேறெதுவும் இல்லை!
பிறந்த பொன்னாட்டின் விடுதலைக்காக, போர்க்குரல் கொடுத்த இஸ்லாமியப் போராளிகளை ஆங்கில ஏகாதிபத்தியம் சேற்றை வாரி இறைத்தது. பழிகளைச் சுமத்தியது. பயங்கரவாதி, கொடுங்கோலர், ஈவுஇரக்கற்றவர், மதவெறியர் என்றெல்லாம் தூற்றியது. அதற்கு பக்கமேளம் வாசித்த எழுதுகோல் பிடித்தவர்களின் மனவோட்ட வடிவம் தான், இந்தியாவின் சுதந்திரப் போர் பற்றிய பிறழ் சரித்திரப் பதிவுகள்!
அதன் ஒருமுகமாய், மதவாத சாவர்க்கரும் ஆங்கிலஅரசும் இருவேறு முனைகளிலிருந்து திப்பு சுல்தான் மீது வீசித்தாக்கிய அவதூறுகளை, நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் ' சிறந்த மனிதாபிமானியும், மத ஒற்றுமையைப் பேணிய இந்திய வரலாற்றின் ஒப்பற்ற மன்னனுமான திப்புசுல்தான் கூட இந்த அவதூறுகளிலிருந்து தப்பவில்லை. போலிச் சரித்திரமும், புனைக் கதைகளும் நீண்ட காலம் நிலைத்து நிற்பதில்லை. உண்மை வரலாறு, அவதூறுகளை விஞ்சித் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும்!' என்கிறார்.
இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சி அமையும்போதே, அந்த ஏகாதிபத்திய அமைப்பை ஏற்க மறுத்து இஸ்லாமியர்கள் நடத்தியப் போராட்டங்கள் பற்றிய உண்மை ஆதாரங்கள், உருது மற்றும் பெர்ஷிய மொழிப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதை, உண்மையான சரித்திர ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் கண்டு உணரலாம். அப்போது நடந்த போரைப்போல, அதற்குப் பின்பு எப்போதும் நடக்கவும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளலாம்.
'சுதந்திரம் எனது பிறப்புரிமை!' என்று பாலகங்காதர திலகர் ஓங்கி ஒலித்ததை, ஒவ்வொரு இந்தியனும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், 'இந்தியா இந்தியனுகே!' என்று, அதற்கு முன்பே முதல் கோஷத்தை எழுப்பியது திப்பு சுல்தான் தான் என்பது எத்தனை இந்தியனுக்குத் தெரியும்? அதற்கானப் பதிவு, பெரும்பான்மை இந்திய வரலாற்றில் ஏன் இல்லாமல் போனது?
திப்பு சுல்தான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சரித்திரத்தின் வழிநெடுகிலும் சொல்லப்பட்டு வந்ததுபோல அவர் மதவெறியர் அல்லர். அந்தக் காலத்திலேயே மத நல்லிணக்கம் கொண்டவர். கி.பி. 1790 - லிருந்து 1799 வரை அதாவது அவர் மரணமடையும் வரை சிர்ங்கேரி ஜகத்குரு - ஸ்ரீ சச்சிதானந்த பாரதி சுவாமிகள் அவர்களுக்கு எழுதிய கடிதங்கள் ( கடித எண்கள் 46 - 66), அம்மடத்தின் ஸ்ரீ சாரதா டிரஸ்ட் வெளியிட்டுள்ள, 'திப்பு சுல்தான் ஒரு மதவெறியரா?' எனும் நூலல் இடம் பெற்றுள்ளன.
அக்கடிதங்களுள் ஒன்று. கடித எண் - 47. அதில்,
கி.பி.1791 - 92 விரோதி கிருத் ஸம்வத்சரம்
ஸ்ரீமத் பரமஹம்சாதி யதோக்த விருதிதாரன சிர்ங்கேரி ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகளுக்கு,
தாங்கள் அனுப்பிய எழுத்தோவியம் முலம் விவரம் அறியப்பட்டன.மராத்திய குதிரை ஆட்கள் வந்து சிர்ங்கேரியிலிருந்த பிராமணர் முதலானோரை மிகவும் அதிகமாக அடித்து துன்புறுத்தியும், கொன்ற விவரமும்ஸ்ரீசாரதாம்பாளை அகற்றி, மடத்திலிருந்த எல்லாச் சொத்துகளையும் எடுத்துக் கொண்டு போனதால் நான்கு சீடர்களுடன் கார்க்களத்திற்கு வந்து இருப்பதை அறிந்தேன்.
சாரதாம்பாள் யுகயுகமாக இருப்பவள். இப்போது இத்தெய்வத்தை மீண்டும்பிரதிஷ்டை செய்துவைத்தால், அவள் சூரியசந்திரர் உள்ள அளவும் நிலைத்திருப்பாள்.
தேவையான தானியங்கள் இதர மளிகை, பருப்பு வகையறா கொடுக்கும் படி ஆணையிட்டுள்ளதால், பலருக்கு அன்னமிட்டு, சாரதாம்பாள் செய்துவைத்து, பிரதிஷ்டையும் செய்துவைப்பது சரியே அல்லவா?
அத்தகைய பெருமை வாய்ந்தத் தலத்திற்கு சிரித்துக்கொண்டே துரோகம் செய்தஅவர்கள் அழுதுகொண்டே பலனை அனுபவிக்க வேண்டிவரும். இதை சுலோகம்கூறுகிறதல்லவா? கலியுகத்தில் செய்த வினைகளுக்கு சீக்கிரத்திலேயே அதன் தீயபலனை அனுபவிக்க வேண்டிவரும். குருத்துரோகம் செய்ததற்கு பலன் வமிசநாசமே! சந்தேகமே இல்லை, இந்த விஷமக்காரர்கள் படப்போகும் பாட்டைநீங்கள் கண்கூடாகப் பார்க்கப் போகிறீர்கள். அவர்களுக்கு எத்தகைய மிகுந்ததாழ்நிலை வரவேண்டுமோ அப்படியே ஆசி கூறுங்கள்.
இப்போது சாரதாம்பாள் பிரதிஷ்டைக்காக 200 ரஹதிக்கு ஆன தானியங்களும்,ரொக்கம் 200 ரஹதிகளும் சர்க்காரிலிருந்து கொடுக்கப்படுகிறது. தவிர, இன்னும்எந்த மளிகைச் சாமான்கள் வேண்டுமானாலும், அவைகளை ரொக்கம்கொடுத்து வாங்கிக் கொடுக்கும்படி நகரா அசப்புக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.தேவையான தானியங்களையும், மற்றவைகளையும் தருவித்துக் கொள்ளவும்சர்க்கார் இனாமாகக் கொடுத்துய்ய கிராமங்களிலிருந்து வேண்டிய சாமக்கிரியைகளை தருவித்துக் கொண்டு, மக்களுக்கு உணவு படைக்கும்படியும், நம்முடையபுகழ், செல்வாக்கு அதிகரிக்கும்படியும், விரோதிகள் நாசமடையவும்பிரார்த்தனை செய்யவும். எல்லோருடைய நலனுக்காகவும் தவம் செய்யவும்.
தாரிகு 5 மாஹே சமரிசால், ஜபர்ஜித்.விரோதி கிருத் சம்பவத்தின் ஆஷர் சுத்த பஞ்சம்.
என்று திப்பு சுல்தானின் சமய உணர்வு, சமரசம் போற்றியதாகவே இருந்து வந்திருக்கிறது.
சுதேசிப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அந்நியப் பொருட்களைத் தவிர்க்க வேண்டுமென்றும் நவாப்களுக்கு, மன்னர் களுக்கு, பண்டிட்களுக்கு, உலமாக்களுக்கு தன் கைப்படவே கடிதங்கள் எழுதி, தனது தேச பக்தியை நிலைப் பெறச் செய்திருக்கிறார்.
நாட்டின் முதல் ஆயுதத் தொழிற்சாலையை உண்டாக்கி, தனது ராணுவத்துக்கு வேண்டிய ஆயுதங்களை அங்கேயே இந்திய தொழில் நுட்பத்துடனும் இந்தியக் கச்சாப் பொருட்களுடனும் தயாரிக்கவும் உத்தரவிட்டு தன்னை மண்ணின் மைந்தனாகப் பறைசாட்டியிருக்கிறார். ' மாற்றங்களின் போக்கே வாழ்க்கை. மரணம் ஒன்றே மாற்ற முடியாதது' என்ற தத்துவத்தை உணர்ந்த அவர், ஒன்றுபட்ட சமநிலைச் சமுதாயத்திற்கு வித்திடவே விரும்பியிருக் கிறார்.
ஆனால் அவர் உட்பட்ட, தேசத்தின் மீது நேசம்கொண்ட இஸ்லாமியர்களுக்கு மதவாதமும் ஆங்கில அரசும் கொடுத்தப் பட்டங்கள் தேசத் துரோகிகள்!
இதே நிலைதான், மற்ற இஸ்லாமியச் சக்கரவர்த்திகளுக்கும், மன்னர்களுக்கும், நவாப்களுக்கும்!
இஸ்லாமியப் போராளிகளான அலி வார்டிகன் (1754), சிராஜ் - உத்தெளலா (1757), மீர் காஸிம் (1763), திப்பு சுல்தான் (1799) போன்றவர்கள் நடத் திய போர்களின் தொடர்ச்சியே 1857 - ல் நடந்த சிப்பாய்க் கலகமேயன்றி, அது முதல் இந்தியச் சுதந்திரப் போர் அல்ல!
நன்றி : சமநிலைச் சமுதாயம்.
No comments:
Post a Comment