எஸ்.அர்ஷியா
தேய்பிறை இரவுகளின் கதைகள் கீரனூர் ஜாகிர் ராஜாவின் பதினேழு ஆண்டுகாலத் தனிமையை நம்மிடம் பகிர்வதாக இருக்கின்றன. தன்னை தனது சுற்றுச் சூழலை நேர்மையானப் படைப்பாளியாகக் கேள்விகளுக்கு உட்படுத்துவதுடன் தன் படைப்புகள் மூலம் ஆத்மசோதனையும் சுய உணர்தலும் கொள்கிறார். வாழ்வின் மீது தீராத பற்றும் சக மனிதர்கள் மீது இனிய தோழமை அன்பும் கொண்டிருக்கும் இந்தப் படைப்பாளி அதன்மூலம் தான் அறிந்த மிகவும் எளிய மனிதர்களைப் பற்றி மிகச் சரளமான மொழியில் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே போகிறார்.
வழக்கமாக இஸ்லாமியச் சிறுகதைகள் ஏகன் இறைவனின் கருணையையும் நபி பெருமான் அவர்களின் பராக்கிரமங்களையும் ஊரில் பெரிய மனிதராகக் கணிக்கப்பட்டவர் ஹஜ் பயணம் புறப்படும் ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது அவர் ஊர் திரும்பும் கொண்டாட்டம் பற்றியதாகவோ இருக்கும். தொழச் சொல்லியும் ஜக்காத் கொடுக்கச் சொல்லியும் வலியுறுத்தும் கதைகளுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. அப்படிச் செய்தால் வாழ்க்கை வளம்பெறும் என்று பயான்கள் செய்யப்படுவதுண்டு. தொழப்போகாமல் தூங்கிக்கொண்டிருப்பவன் வாய்க்குள் இப்லிஷ் மூத்திரம் மோண்டுவிடும் பயமூட்டல் கதைகள் மட்டுமே இஸ்லாமியக் கதைகள் என்று அடையாளம் காட்டப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கின்றன.
அப்படித் தொழப்போயும் ஏழை எளியவர்கள் ரம்ஜான் குத்பாவுக்கு புதுத்துணி வாங்க முடியாமல் கஷ்டப்படுவதையும் பிறை பார்த்து ஊரெல்லாம் கொண்டாட்டத்தில் இருக்கும்போது சோர்ந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அவர்களுக்கு யாரோ வழிப்போக்கர் புத்தாடைகளைக் கொடுத்துவிட்டு மறைந்துபோகும் அற்புதங்கள் நிறைந்தக் கதைகள் ரம்ஜான் மாதத்தில் வணிகப் பத்திரிகைகளிலும் இஸ்லாமியப் பிரச்சாரப் பத்திரிகைகளிலும் பிரசுரமாவதுண்டு. தொழுதலுக்கானப் பரிசு என்று அதை வியந்தோதியும் வந்தார்கள். அந்தக்கதைகளும்கூட முந்திய ஆண்டு எழுதிய அதே எழுத்தாளர் பாத் திரங்களின் பெயர் ஊர் மாற்றி எழுதியதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. சிலவேளைகளில் பிறை தெரியாத அவஸ்தைக் கதைகளும் வந்ததுண்டு. பக்ரீதுக்கு இருக்கவே இருக்கிறது ஆடுகளும் அதுகுறித்த வதைகளும்.
இவையெல்லாம் இல்லாமல் எளிய மக்களின் பாடுகளையும் வாழ்க்கையின் முரண்களையும் பொருளாகக் கொண்டு ஒன்றிரண்டு கதைகள் எப்போதாவது வந்ததுண்டு. நிச்சயமாக இஸ்லாமியப் பத்திரிகைகளில் அவை அச்சானதில்லை. அதை எழுதியவர்கள் அவற்றை ஏன் தொடரவில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. கேள்விக்கு பதிலாக ஒருசிலர் நட்சத்திரங்களாகத் தோன்றியதுமுண்டு. அப்படித் தோன்றியவர்களில் கீரனூர் ஜாகிர்ராஜாவிடம் கூடுதல் ஒளி தென்படுகிறது.
முப்பால்போல தேய்பிறை இரவுகளின் இந்தக்கதைகள் மூன்று வகைமைகளைக் கொண்டதாக இருக்கின்றன. அதை அவர் எழுதிய காலத்தின் அடிப்படையிலும் இடங்களின் சூழலிலும் கதைகளின் தன்மையிலும் பகுக்கலாம். எப்படிப் பகுத்துக் கொண்டாலும் அதை வாசிக்கும்போது அதற்குள் உறைந்து கிடக்கும் வீரியம் இதற்கு முன் வெளிப்படாததாக இருக்கிறது. ஏற்கனவே இஸ்லாமிய எழுத்தாளர்களால் இட்டுக்கட்டப்பட்டதை அல்லது மறைக்கப்பட்டதை உடைத்து வீசுவதாகவும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் உடைய உடைய இதற்கு முன் உண்மை என்று நம்பப்பட்டு வந்த 'மூடாக்குகள்' சிதறி முகத்தில் அறைகின்றன.
முதல் சிறுகதையான வெம்மை லெளகீகத்தின் திசைகள் தோறும் விரிந்திருக்கும் பிடிக்குள் அடங்காமல் மனச் சுதந்திரத்துடன் அலைய விரும்பும் ஒருவன் சமூகத்தின் மறைமுக வாழ்வியல் மிரட்டல்களுக்கும் ஏளனப் பார்வைகளுக்கும் ஆட்பட்டு உள்ளுக்குள் குமுறும் வாழ்வற்ற அவஸ்தையை அப்பட்டமாக்குகிறது. பிறந்த கணத்திலிருந்து இல்லாத அதீதமான ஒரு வெம்மை கல்யாணமான நாள் முதல் உடலைக் கவ்விக் கொண்டு விடமாட் டேனென்கிறது என்று சொல்லும் துயர் அரசு பதவியோ முறையான வருமானமோ அல்லது அரசியல் சம்பாத்தியமோ இல்லாத எல்லா இளைஞர்களுக் கும் பொருந்திப் போகும் ஒன்று. ஒட்டுமொத்த உலக இளைஞர்களின் துயரம். மனைவியின் கிழிந்த துப்பட்டிக்குப் பதிலாக கறுப்பு வண்ண பர்தாவை வாங்கித்தர முடியாமல் வீட்டுக்குள் உருவாகும் அவலம் நிறைந்த சச்சரவு அவனை வெளிநாட்டுக்குத் தள்ளிக் கொண்டு போகிறது. துப்பட்டிக்கு மாற்றாக இங்கு கண்டறியப்படும் கறுப்பு வண்ண பர்தா தாய்மண்ணைப் பிரிந்துபோகின்ற மனத்தின் அடிவேரைக் கொத்தாகப் பிடுங்கிய இஸ்லாமிய இளைஞர்களின் ஜீவ உடல் உழைப்பு ரத்தமும் வியர்வையுமாக மணல் காட்டிலும் பொரிக்கும் வெயிலிலும் உறிஞ்சப்பட்டு அதற்கு மாற்றாக சாதாரணப் பண்டமாக இறக்குமதி செய்யப்படும் குறியீடு. கூடவே அதைக்கொண்டு பெண்ணைப் போர்த்தும் அடிமைத்தனத்தையும் இறக்குமதி செய்கிறது. இப்போது வெளியாகும் எந்த இஸ்லாமியப் பத்திரிகையை கையில் எடுத்தாலும் அதன் வண்ண மயமான அட்டையில் பர்தாக்களின் விளம் பரங்களைக் கண்ணாறக் காணலாம். அதனடியில் அரபு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று அடிக்கோடு குறிப்பு இடப்பட்டிருக்கும். மனைவி மக்களைப் பிரிந்து பணத்தின் மீதான வேட்கையுடன் புது நட்பு களுடன் ஒண்ட முடியாமல் முற்றிலும் மாறான இயற்கை அமைப்பில் உடல் உபாதைகளுக்கு ஆளாகி பொலிவிழந்து மன உலைச்சலுக்கு உள்ளாகி அவன் ஈட்டிக்கொண்டு வருவதை பெருஞ்செல்வமாகப் பார்க்கும் சமூகம் அதற்குள் பொதிந்து கிடக்கும் அவனது பேசா மொழியையும் மெளனமுமான உணர்வுகளையும் கண்டு கொள்வதில்லை. அதை அந்தஸ்து என்கிறது. அதில் அவன் தோல்வியடையும்போது அது வன்மமாக உருவெடுக்கவும் செய்யலாம். மனப்பிறழ்வுக்கும் வகை செய்யலாம். இஸ்லாமிய இளைஞர் களுக்கு துபாய் என்றால் மற்றவர்களுக்கு அமெரிக்கா. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் 'இன்னுமா பயணம் புறப்படவில்லை?' எனும் குரல் இஸ்லாமியர்கள் வாழும் தெருக்களில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றது.
அப்படி ஈட்டிக்கொண்டு வரும் பொருட்கள் வாழ்க்கையை மட்டுமல்ல நகர்களின் புராதனங்களையும் மாற்றியமைத்து உயர்கோபுரக் கடைகளாகி மாட மாளிகைகளாகி தொன்மங்களை காவு வாங்கி விடுகின்றன. அப்படிக் காவுக்கு உள்ளான தஞ்சாவூரில் உறவுக்கார ஹனிபா மாமுவைத் தேடிக்கொண்டு போகும் 'ரெட்டை மஸ்தானருகில்' சிறுகதை புதிய வேதனையைத் திறந்துகாட்டுவதாக இருக்கிறது. ரெட்டை மஸ்தான் என்பது அந்த ஊரிலிருக்கும் ஒரு தர்ஹா. இஸ்லாமிய மக்களுடன் பிற சமூகத்தினரும் ஆறுதலும் தேறுதலும் கொள்ளும் இடமாகும். அதனருகில் ஏதோ ஒரு அற்புதம் நடக்கப்போகிறது என்பதானத் தூண்டுதலை தலைப்பு கொண்டிருந்தாலும் அதுபேசும்பொருள் முற்றிலும் எதிர்பாராத அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. புதிதாக அறிமுகமான ஒரு கால்குலேட்டர் எப்படி ஒரு கணக்குப் பிள்ளையின் வாழ்க்கையை முடக்கிவிட்டதோ அதே வேலையை கூடுதலாகக் கம்ப்யூட்டரும் செய்து ஹனிபா மாமுவின் தங்க நிற மூடியைக் கொண்ட பேனாவை மங்கலாக்கியதுடன் வாழ்தலுக்கான புதிய ஒப்பனையை - பெண்களின் பிரத்யேக ஒப்பனையை - அவரை ஏற்றுக் கொள்ளச் செய்திருப்பதை மனஅவசத்தோடு காணச் செய்கிறது. வாழ்தலுக்காக எதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நோக்கும்போது அதிர்ச்சியைத் தாண்டிய நடுக்கம் தோன்றுகிறது.
பிறரைக் காவுகொண்டு களிநடனம் ஆடுகின்றப் 'பெருநகரக் குறிப்புகள்' கலையின் எவ்வகையைச் சார்ந்தவருக்கும் கட்டாயம் கிடைக்கின்ற அனுபவப் பேழை. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் அனுபவம் அதனுள்ளிருந்து எழுந்துவந்து பொருந்திப் போகும். மனக்கிளர்ச்சியைத் தரும். முன்புபட்ட அவஸ்தைகளை மீள் உருவாக்கம் செய்து பார்க்கும்போது கடந்துவந்த திசைகள் மனசில் தவிப்பையும் முகத்தில் புன்சிரிப்பையும் அரும்பச் செய்யும். ஒருவேளைத் தேநீருக்காக... ஒருவேளை உணவுக்காக... தூங்கும் இடத்துக்காக... அவசரத்துக்குக் கைமாத்து கேட்பதற்காக... அலைந்து திரிந்ததை இப்போது பெருமுயற்சிகள்போல பேசச் சொல்லும். அதனூடே தொடர்ந்த பயணம் வெற்றி பெற்றிருந்தால் அவற்றுக்குப் பெயர் நான் நடந்து வந்த பாதை என்று மாறிப்போய்விடுகிறது. அதேவேளையில் தோல்விகள் அதனை காலந்தோறும் குறிப்புகளாக வைத்து பொக்கிஷமாகப் பார்க்கச் செய்கிறது. விஜயராஜின் டிரங்க் பெட்டி நிரம்பி வழிந்ததாகச் சொல்லப்படும் இடம் எப்படியும் வென்றுவிடுவோம் எனும் நம்பிக்கையின் ஆணிவேர். அதுதான் இன்னும் இன்னும் இளைஞர்களை பெருநகரம் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. பெருநகர வீதிகளில் நடந்துபோகும் அத்தனைபேரிடமும் ஏதோ ஒரு கதை இருக்கிறது. நாளைய பெருநகரக் குறிப்புகள் அவர்களாலும் எழுதப்படும்.
தொகுப்பின் மிக முக்கியமானக் கதையாக 'குடமுருட்டி ஆற்றின் கரையில்' அமைந்து போயிருப்பது தற்செயலானது அல்ல. இஸ்லாமியக் குடும்பங் களில் வரன் தேடும் வைபவம் என்பது புவ்வா போன்றவர்களாலும் வீட்டுக்கு 'சபக்' சொல்லிக் கொடுக்க வரும் உஸ்தாத்பீக்களாலும் நடத்தப்படுகிறது. இவர்கள்தான் நடமாடும் மேட்ரிமோனியல்கள். உள்நுணுக்கங்கள் தெரிந்தவர்கள். எல்லைகளைத் தொடுபவர்கள். உள் விளிம்புகளை வளைத்து எதை யும் சாதித்துக் காரியம் கைகூடிவரச் செய்யும் திறமை அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருப்பது வியப்பு தருவதாக இருக்கிறது. இந்தக்கதையில் வரும் புவ்வா அதையும் தாண்டிய மனுஷியாக இருப்பது அவள் மீது பிரேமையை உருவாக்குகிறது. வாழ்க்கை இழந்து இரண்டு குழந்தைகளுடன் உழன்ற உம்மசல்மாவுக்கு இரண்டாவது நிக்காஹ் நடத்தி வைக்கவும் தெம்பிருந்தது புவ்வாவுக்கு என்ற வரிகள் அந்த பிரேமைக்கு வலுசேர்ப்பதாக இருக்கின்றது. அதே புவ்வாவுக்கு தனது காரியதரிசியான ஹைரூன்னிஸாவுக்கு ஓரிடத்தைக் கோர்த்து விடுவதில் மனமுரணும் இருக்கிறது. அவளிடமுள்ள மெல்லியதான இந்த மனவிலகல்... இந்த முரண்... யதார்த்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறது. அவளுக்குள் ஓடும் வாழ்வியல் அரசியல் கதைக்கு ஓர் அம்சத்தைத் தருகிறது. யதார்த்தத்துக்கும் மாயவாதத்துக்கும் இணைப்பாக சாயாக்கடை ஜக்கரியா இருக்கிறார். அப்துல் காதர் ஜீலானி ஆண்டகை மீரான் மைதீன் கதைகளிலும் எஸ். அர்ஷியாவின் கதைகளிலும் ஜாகிர்ராஜாவின் கதைகளிலும் இடம் பெறுவதில் ஒரு ஓர்மை இருப்பதாகவே படுகிறது. அவர் அற்புதங்களை நிகழ்த்தும் சாதாரண மனிதராகவே காட்சிக்கு வருவதும் அப்படித்தான். அதனாலேயே இந்தக்கதை மற்ற இஸ்லாமிய எழுத்தாளர்களின் கதைகளிலிருந்து ஓர் அங்குலம் முன்னுக்கு இருக்கிறது. யாருமறியாத ரகசியக் கொலுசொலிக்க ஹைரூன் குடத்தை எடுத்துக்கொண்டு அந்த இருளில் ஆற்றை நோக்கி நடந்தாள். நல்ல வியாபாரம் கொழிக்கிற நேரத்தில் சாயாக்கடையில் ஜக்கரியா இல்லாதது புவ்வாவுக்கு ஏமாற்ற மளித்தது என்பதுடன் கதை முடிந்து போகிறது. ஆனால் ஹைரூன்னிஸா வெறுமனே பருத்துப் பிதுங்கும் மார்புகளைக் கொண்ட சதைக்கோளம் அல்ல. உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் ஆன பெண் என்பதை உணர்த்தும் கதை அந்த இடத்திலிருந்துதான் கிளைக்கிறது. அதுவே தொகுப்பில் இந்தக்கதையை முக்கியமான இடத்துக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
உருவம் கதையில் வரும் மனைவியை இழந்த மெளலானா மெளலவி ஷையது ஷபியுதீன் அஹமது அடையாளங்களுக்குள் உலவும் ஓர் மனிதராகத்தான் தெரிகிறார். பயான் செய்யும் மெளலவிகளும் மிகச்சாதாரண மனிதர்கள்தாம். அவர்கள் மூக்கால் சுவாசிப்பவர்களாகவும் வாயால் உண்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனனம் செய்து துப்பும் வாசகங்கள் நம்மிலிருந்து அவர்களை தூரத்தில் நிறுத்தி அவர்களுக்கு அந்தஸ்தைக் கொடுத்து விடுகிறது. அவர் செய்யும் தொழில் உன்னதமாக்கப்பட்டதால் அவருக்கு அந்த அந்தஸ்து. அவ்வளவுதான். தாடி வளர்த்து குல்லா அணிந்து அத்தர் மணம் கமழ பயான் செய்பவர்களில் பலர் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது சாதாரணமாகவே பார்க்கக் கிடைக்கும். மெளலானா மெளலவி ஷையது ஷபியுதீன் அஹமது கூட தன்னிலையை ஒப்புக் கொள்வதாக "வாஸ்தவத்தில் நான் இப்படிப்பட்ட ஆளல்ல. கொஞ்சம் நாளா மனசில கொழப்பம். இன்ஷா அல்லாஹ் அப்படி ஒரு படம் கெடச்சுட்டாப் போதும்னு இப்பத் தோணுது. ஏன்னு தெரியல... எல்லாம் அல்லாஹ் அறிவான்..." என்று சொல்கிறார். இந்த இடம் மிக முக்கியமானது. எந்த மனிதனாலும் நினைவுகளைத் தாண்டிவிட்டுப் போகமுடியாது. அதுபோல இழப்புகளையும். மதம் செய்து வைத்திருக்கும் ஏற்பாடுகள் எல்லா இடத்திலும் ஒன்றாகவே இருக்கிறது.
தமிழ்நாட்டில் செல்வாக்குடன் திகழும் இஸ்லாமியக் குடும்பங்கள் எத்தனையிருக்கும் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவைகளும்கூட சிதைந்துகொண்டு வருகின்றன என்பது கண்கூடு. அனிபா ராவுத்தரின் ஆயிஷா மன்சில் அப்படிச் சிதைந்து போனவைகளில் ஒன்று. கடன்கூட பெற முடியாத நிலைக்கு உள்ளாகும் அனிபா ராவுத்தரின் கடந்த காலம் படாடோபமாகத்தான் இருந்திருக்கும். இன்று பள்ளிவாசல் ஹவுஜில் ராஜமீனைக் களவாடிய குற்றத்துக்கு உள்ளாகி நிற்கிறார். களவாடிய மீன் மருமகனுக்கு குழம்பாகியோ... பொறிக்கப்பட்டோ போயிருக்கும். ஆனால் அவமானம்? ஹவுஜில் மீன்கள் வளர்க்கப்படுவது தொன்மம். அவற்றை பிடிக்கக்கூடாது என்று சொல்வதுண்டு. வளர்ந்து முதிர்ந்த மீன் என்னாகும் என்ற கேள்வி வேடிக்கைப் பார்க்க... பொறிபோட வரும் சிறுவர்களிடம் இருக்கவே செய்கிறது. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா டாக்கிகளில் (நீர்க்குளங்கள்) மீ ன் பிடிக்கக்கூடாது என்று தகவல் பலகையே இருக்கிறது. ஆனால் அக்குளத்து மீன்கள் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டேதான் இருக்கின்றன. வந்துபோகும் யாத்திரிகர்கள் யாரும் அதைத் திருடும் வாய்ப்பே இல்லை. ஆனால் இப்போது நகரின் முக்கியமான தொழுகைப் பள்ளிவாசல்களில் ஒலு செய்வதற்காகக் கட்டப்பட்ட ஹவுஜ்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதற்கு மாற்றாக குழாய்கள் நிறுவப்படுகின்றன. ஹவுஜ் இருந்த இடங்கள் பத்துக்குப் பத்து கடைகளாகி நிர்வாகத்தின் வருமானத்துக்கும் ஊழலுக்கும் அடிகோலுகின்றன.
அதுபோல செம்பருத்தி பூத்த வீடு யாரையும் வசீகரித்துவிடும் வல்லமை கொண்ட கதை. இளமையைத் தொடும் ஆண்பெண் இருபாலர் யாருக்குமே காதல் இல்லாமல் போகாது. குறைந்த பட்சம் மனசுக்குள்ளாவது இருந்திருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பின் ஊர் திரும்பும் நாயகன் தன் இளமைக் கால நாயகி எஸ். மயிலாத்தாவின் செம்பருத்தி பூத்த வீட்டைப் பார்க்கக் கிளம்புகிறான். அதில்தான் எத்தனை சுகம்? எதிர்பார்ப்பு? வீடு மாறாமல் அப்படியே இருப்பதில்தான் எத்தனையெத்தனை ஆனந்தம்! விட்டுப்போன இடைக்காலத்தை மீட்டெடுக்கும் நினைவுகளின் வழியே ஊடுருவும் மனசு. 'ஆத்தா' - 'ஆத்தா' - 'ஆத்தாவ்' - ரொம்ப நாளாயிப் போச்சு இப்டியெல்லாங் கூப்புட்டு கொஞ்சம் வெட்கமாக்கூட இருந்துச்சு. திரும்பத் திரும்பக் கூப்புட்டுப் பாத்துக்கிட்டேன் எனும் வாசகங்களில் அந்த இளம்வயதுக்கே திரும்பிப்போய்விடும் சூத்திரம் ஒளிந்து கிடக்கிறது. வீட்டைப் பார்த்துவிட்ட வனுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கும் ஆவலை மனம் கிளறுகிறது. "மாப்ள அந்தப் புள்ள செத்துப் போயி ஏழெட்டு வருஷமாசேடா" என்கிறான் நண்பன். அவன் மனசுக்குள் பாலாய்ப் பொங்கிக் கொண்டிருந்த அத்தனையும் அடங்கிப்போய்விடுகிறது. போதும் இங்கேயே கதையும் முடிந்துவிட்டதாக உணர முடிகிறது. அதன் பின்பு எதுவாக இருந்தாலும் அது கூடுதல்தான். மாயந்தான் என்றறிந்தாலும் இப்படியான விடலை நினைவுகள் இல்லாத யுவனும்யுவதியும் இந்த லோகத்தில் இல்லவே இல்லை. அந்த சுகமான வலிகள்தான் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு போகின்றன. காதலும் அதை யொற்றி எழக்கூடிய நினைவுகளும் பசுமையானவை. அதற்குள் பயணம்செய்து எழுத்தாக மீட்டெடுக்கும் லாவகம் படைப்பாளியிடம் தெளிந்து கிடக்கிறது.
ஊர்ஊராய்ச் சுற்றி யாசகம் வாங்கிப் பிழைக்கும் சலீமின் பார்வையிலிருந்து விரியும் சுவடுகள் கதை தருமம் என்ற சொல்லிலிருந்து கிளைந்து அதைப் பெற முயற்சிப்பவர்கள் படும் அவலத்தையும் அவசத்தையும் வெளிப்படுத்துவது. யாசகத்துக்கு பெண்களும் குழந்தைகளுமே முன்னிருத்தப்படுகின்ற னர். அதுதான் தொழிலில் கூடுதல் பொருளீட்டலைப் பெற்றுத் தருகிறது. அந்த முன்னிலைப்படுத்தல்தான் மகளின் அலறலை "உனக்கு பிரம்மையாக இருக்கலாம்" என்று அத்தாவை சொல்ல வைக்கிறது. யாசகம் கேட்டுப்பெறுதல் எனும் எளிய பார்வையைத் தாண்டி அதற்குள் உறைந்து கிடக்கும் மற்றவையான அவமானம் புறந்தள்ளல் கண்டுகொள்ளாமை யார் கண்ணிலும் படாமல் போய்விடுகிறது. கதையில் வரும் அக்காவின் அலறலை சமூகத்தின் அலறலாகக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
வேற்றுக் கிரக அவாந்திரப் பெருவெளியில் பொம்மையுடன் கைகோர்த்தவாறு திரியும் குழந்தை தெளபிக் இடம்பெறும் ஆண்பொம்மை ராட்சஸப் பறவையின் சிறகுகள் கதையில் வரும் சக்கரை முகமதுவின் மன உலைச்சல் ஆதிமை நீஸா என்றொரு சிநேகிதி போன்ற சிறுகதைகள் நிஜங்களுக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. சடங்குக்காக செய்யப்பட்ட சைத்தானை அடிப்பதில் மக்கள் கொள்ளும் ஆர்வம் கடமையாக்கப்படுகிறது.
அதேவேளையில் ஆடான நீஸாவின் சிநேகிதி ஆயிஷா 'சைத்தாம் புடிச்சவளாக' ஆக்கப்படுவது ஆட்டை அறுப்பதுபோல நெஞ்சை அறுக்கிறது. கறுப்புக்கோட்டு பக்ரீத் ஆடுகள் எளிய விளிம்புநிலை மக்களின் பாடுகளை உரித்துக் காட்டுவனவாக இருக்கின்றன. சுவர்கள் சிரிக்கின்றன உள்வெளி போன்ற கதைகள் நிகழ்த்துதலைத் தாண்டிய பதிவுகளாக மட்டுமே இருக்கின்றன. நிழலின் சாயலும் சாயலின் நிழலும் 'சென்னை வாழ்க்கையைப் படம் பிடிக்கிறதா?' என்றாலும் புல் ஓபன் நைட்டின் ஜிப் திடீரென கீழிறங்கி இருந்ததைக் கவனித்தான்."இதுதான் சர்ர்ர்ரியலிசம்..." என்றபடி சுதந்திரமானான் எனும் பகடி ரசிப்பதாக இருந்தது. வேறுகதைகளில் இல்லாதது.
சிறந்த எழுத்து என்று வரையறுக்கப்படும் சமூகப் பொறுப்புணர்வு தார்மீக எழுச்சி சுதந்திரம் ஆழம்என சகல மேன்மைகளும் நிரம்பிய அந்தரங்க நிலை படைப்பாளியிடம் கொட்டிக்கிடக்கிறது. அதனாலேயே கோடை வெயிலில் ஈரக்காற்றை உணர்த்திய உன்னத தருணத்தைக் கொண்டவையாக அவரது கதைகள் இருக்கின்றன.
இந்தப்பின்னணியில் உருவாகியிருக்கும் கதைகளை முன்னரே சொன்னதுபோல மூன்று வகைமைகளாகப் பகுத்தாலும் அதனுள் சூழல் ஜாகிர்ராஜாவை கீர னூர் தஞ்சாவூர் சென்னை என்று மூன்று இருப்பிடங்களில் இருத்தி உருவாக்கிப் பயணிக்கச் செய்திருக்கின்றது. அவற்றுள் சென்னையைக் காட்டிலும் முதலிரண்டு தளங்களில் பின்னப்பட்டக் கதைகள் நெஞ்சை நிறைக்கின்றன. ஆனாலும் கூட ஜாகிர்ராஜாவின் முன்னே இன்னும் இன்னும் விரிந்து பரந்த களம் ஆடப்படாமல் இருக்கவே செய்கிறது. அதில் நிகழ்த்துவதற்கான மூலங்களும் திறமும் அவரிடம் நிறையவே இருக்கின்றது.
நன்றி : உயிர் எழுத்து. நவம்பர் 2011.