Monday, September 5, 2011

உயிர்மை புத்தக வெளியீட்டு விழா


செப்டம்பர் 3ம் தேதி மாலை 4மணிக்கு மதுரை தமுக்கம் மைதான புத்தக அரங்கில் உயிர்மை பதிப்பத்தின் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.

ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் தலைமையில் நடந்த இந்த விழாவில் கவிஞர் தேவதச்சனின் ‘இரண்டு சூரியன்‘ கவிதைத் தொகுதி வா.மு.கோமுவின் ‘சேகுவேரா வந்திருந்தார்‘ சிறுகதைத் தொகுப்பு முனைவர் வெ.மு.ஷாஜகான் கனியின் ‘திரைப்படக் கலை‘ ஈழவாணியின் ‘ஈழத்து நாட்டார் பாடல்கள்‘ ஆகிய 4 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

அதில் நான் வா.மு.கோமுவின் ‘சேகுவேரா வந்திருந்தார்‘ சிறுகதைத் தொகுப்பு குறித்துப் பேசினேன். அதன் முக்கியமான பகுதிகள் மட்டும் இங்கே.........

இதற்கு முன் வா.மு.கோமுவின் இரண்டு சிறுகதைகளையும் ஒரு கவிதையையும் வாசித்திருக்கிறேன். அவை யாவும் என்னை ஈர்த்ததில்லை.
இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் பருத்திப்புடவையைப் பாங்காகக் கட்டிய பெண்போலான கதைகளைப் படித்துப் பழக்கப்பட்ட வாசகர்களுக்கு இது அதிர்ச்சி தரக்கூடியக் கதைகளாகத்தான் இருக்கும்.

பருத்திப்புடவை உருவப்பட்டப் பெண்ணின் அம்மணம் பார்த்து வரும் அதிர்ச்சியைப்போலத்தான் இதுவும். அம்மணத்தை அருவருப்பு அசூயை அசிங்கம் ஆபாசம் என்றே நாம் பார்க்கிறோம். அம்மணம் தெய்வீகம் அதிலிருந்து வந்தவர்கள்தான் நாம்
பாலுணா்வு அறிவு பாலுணர்வு விழிப்புணர்வு போதாமையே இப்படிப் பார்க்கப்படுவதற்கு காரணம்

வா.மு.கோமு தனது கைவண்ணத்தால் கதாபாத்திரங்களின் விருப்பங்களை மொழிகிறார். அது நமது இயல்பு வாழ்வில் நிகழும் எத்தகைய அறமுமற்ற சில பிம்பங்களை நினைவுபடுத்துகிறது.

அவரது கதைகள் மனித மனங்களை அவற்றின் உணர்வுகளை, முகங்களை, கோரங்களைப் பேசுகின்றன.

வாழ்வின் பிறழ்வுகள் உணர்ச்சிகளின் விசித்திரங்கள் யாவும் அந்த வாழ்வின் அசலான மொழியிலேயே இருக்கின்றன.

பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமாகவும் அவரது சிறுகதைகள் இருக்கின்றன.

மத்திய தர கலாச்சார மதிப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து தமிழ் வாழ்வின் அறியப்படாத யதார்த்தையும் சுட்டுகின்றன.

தேடலின்போது தனக்குப் புலப்படுவதை மற்வர்களுக்கு சொல்லிக்கொண்டு போகிறார்; அதனால், ‘தன்னைப் புரிந்துகொள்வதைப் பற்றியோ, புரிந்துகொள்ளாமற் போவது பற்றியோ அக்கறைகள் எதுவும் அற்று நிற்கிறார்.

16 வயதுமுதலான இருபாலருக்குமிடையில் உண்டாகும் காதல் குறித்தே இவரது பெரும்பாலானக் கதைகள் இருக்கின்றன.

குஷி ஜமுக்காளம் என்றொரு சிறுகதையில் மகேஸ்வரியின் மார்பும் மாசு மருவற்ற வெகுளி சிறுகதையில் வெள்ளைச் சீலைக்காரி சிந்தாமணியின் மார்பகங்களும் பெருவாரியாக இடம் பெறுகின்றன. இந்த இடம் ஜீ. நாகராஜனின் தொடர்ச்சியாக தெரிகிறது. 1960 சரஸ்வதியில் சுழற்சி என்றொரு சிறுகதையை அவர் எழுதியிருக்கிறார்.

கீரனுார் ஜாகீர் ராஜாவின் வடக்கேமுறி அலிமா மூலம் அவரது சக பயணியாகிறார்.

ஆனால் காலபைரவனின் இதுபோன்ற கதைகளில் இருக்கும் கிராப்ட்
செய்நேர்த்தி இதில் காணப்படவில்லை.

ஜே.பி.சாணக்யா கதைகளில் இருக்குமு் புடகம் இங்கில்லை.
பாவனை, பாசாங்கு, ஒப்பனை, புச்சு எதுவுமற்ற... இந்தக்கதைகள் எனக்கு அருகாமையில்.... என்னருகே நடப்பதுபோல இருக்கின்றன.

சே குவேரா வந்திருந்தார் முத்துப்பொருநன் ஒரு இலக்கியத் தந்தையின் எதிர்பார்ப்பு....

இதைத்தாண்டி குழந்தைகள் நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள்... எந்த வயதிலும் கற்கமுடியும்...போன்ற கதைகள்... இடதுசாரி சிந்தனைக் கதைகள் என்று விரிகிறது.

நள்ளிரவில் துாக்கம் கலைந்ததும் விழித்துக் கொண்டிருக்கும்போது துாக்கத்தில் விரல்களால் வருடும் மனைவியின் சுகம் தரும் கதைகள் சில இதற்குள் இருக்கின்றன.

ஆயிரம் முத்தங்களை ஒரு தாய் கொடுத்தாலும் தாய்க்கு குழந்தையின் ஈரம் பொசிந்த உதடுகளின் எச்சில்
முத்தம் தரும் சுகானுபவமும்.... இதற்குள் இருக்கிறது.

ஒரு தொகுப்பில் நல்ல கதை ஒன்று இருந்தாலே போதும்.... இது வாசகர்களைச் சென்றடைந்துவிடும். இதில் நாலைந்துகதைகள் நல்லகதைகளாக இருக்கின்றன.

வா.மு.கோமுவின் கதைகளில் தொடக்கமும் முடிவும் அதிக வித்தியாசம் இல்லாமல் இருந்தாலும் இடையில் வா.மு.கோமு நிகழ்த்துகிற ஆட்டம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

1 comment:

  1. ‘’வா.மு.கோமுவின் கதைகளில் தொடக்கமும் முடிவும் அதிக வித்தியாசம் இல்லாமல் இருந்தாலும் இடையில் வா.மு.கோமு நிகழ்த்துகிற ஆட்டம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது’’
    உயிர்மை புத்தகவெளியீட்டன்று உங்கள் உரையை கேட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. வா.மு.கோமு’வின் ‘மண்பூதம்’ எனும் சிறுகதைத்தொகுப்பு ஒன்று வாசித்திருக்கிறேன். அவர் மிகவும் ஜாலியான ஆள் என்று கேள்விப்பட்டேன். நேரில் பார்த்த போதும் அப்படித்தான் தோன்றியது. பகிர்விற்கு நன்றி.
    - சித்திரவீதிக்காரன்.

    ReplyDelete